Friday, June 12, 2009

'பேசாமல் ஒருநாளும்'

(தமிழன் பதிப்பக வெளியீடாக வரும் 'பேசாமல் ஒருநாளும்' கவிதைத்
தொகுப்பில் இருந்து சில......)

1.பேச்சு

1. பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்
எப்போதும் பேசாமல் இருக்கமுடிவதில்லை எவராலும்
பேச்சில்தான் விளைகிறது வன்மமும், கேலியும் வறட்டு கவுரவமும்
நாவரளப் பேசி நாடாள்வோர் மத்தியில்
பேசிப் பேசியே பேருவகை அடைகிறது வெகு ஜனம்
ஒரு பேச்சுக்கு சொன்னேன்
புகார் ஒன்றுமி;ல்லை


2. மரங்களோடு பேசாமல்
ஒருநாள்கூட கழிக்க முடியாது என்னால்
மரக்கடைகள் கசாப்புக்கடைகள்
அதிகாலை வேளையில் சோம்பல் முறித்து
சிலிர்க்கும் இலைகளின் மலர்ச்சி
சோர்வுற்று மாலையில் மூடிக்கொள்ளும் தளர்ச்சி
வேர்முதல் இலைவரை மழையில் நனைந்த மகிழ்ச்சி
பல கோணங்களிலும்
பேச அவற்றோடு பேசிக்கழிக்க
பகிர நிறைய உண்டு
தினமொரு ஐந்து நிமிடமாவது
பேசாமல் கழித்ததில்லை
ஒருநாளையும்
உங்களது மரமும் சினேகமும் எப்படி?

3.பேச்சற்றிருப்பது பெரும் பேறு
துறவிகளும் தொழிலதிபர்களும் மட்டுமே
பேச்சை குறைத்து அதிகாரமாக்குகிறார்கள்
நடுத்தர வர்க்க நகரமாந்தர்கள்
பேசாமல் பிழைப்பை ஓட்ட முடிவதில்லை
அரசியல் வாதிக்கு கவசமாய்
வியாபாரிக்கு கற்பக விருட்;சமாய்
அதிகாரிக்கு ஏவுதலாய்
விளிம்பு நிலை மாந்தர்க்கு வேதனை வேடிக்கையாய்
குழந்தைகளுக்கு குதுகலிப்பாய்
வெற்றிபெற்றவர்களின் சாகசமாய்
தோற்றவர்களின் துயரமாய்
பேச்சு எங்கும் பேச்சு என்பதே ஆச்சு

4.கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது
அவன் வருத்தம்
வாங்கிக்கொண்டே இருக்க நேருகிறதே
இவன் வருத்தம்
அவரவர் வருத்தத்திற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள்

பேச்சு போச்சு
----------------------------
1.தேவைகள் கோரிக்கைகள் உதவி நாடுவதால்
உறவினர்களோடு பேச்சை குறைத்தாயிற்று
பண நெருக்கடியால்
பண உதவி கேட்க நேர்ந்து விடுமோ என்ற பயத்தில்
நண்பர்கள் சந்திப்பை தவிர்த்தாயிற்று
அன்றாட அலுவலக வேலையும் இம்சையும் சலிப்புமாய்
தனக்குத்தான் பேசித்தான்
தீர்க்க வேண்டியிருக்கிறது மனக் கசப்பை

2.கிழக்கு வாசல் புத்திரருக்கு நல்லது
வடக்குப் பார்த்த பீரோ வருவாய் அதிகரிக்கும்
வாஸ்து சொல்லும் திசை எட்டுக்கும் பலனுண்டு
எட்டடி குச்சுக்குள் கைவீசி நடக்க மாட்டாமல் கழியும் காலம்

அவரவர்
--------------------
1.பெரும் பணக்காரருக்கு
பிள்ளை இல்லாதது பிரச்சனை
பெருங்குடும்பங்களுக்கு
பிள்ளைகளால் பிரச்சனை
அதிகாரம் இ;ல்லை! அங்கீகாரம் இல்லை!
ஆஸ்தியில்லை! ஆரோக்கியம் இல்லை!
ஏகமாய் பிரச்சனைகள் எல்லோருக்கும்!
பிரச்சனைகள் பிரச்சனைகள் தான்
அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெருசு!

Monday, June 8, 2009

சாமக்கொடை

பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது

"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.

ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.

- வித்யாஷங்கர்
(ஆனந்த விகடன் முத்திரை கவிதை)

Thursday, June 4, 2009

பழஞ்செருப்புகள்

காலணிகள் காணாமல் போவது
யாரையும் ஒரு கணம்
நிலை குலையச்செய்து விடுகிறது

வனவாசம் புறப்பட்ட ராமனின்
பாதுகையை வேண்டி வாங்கியதும்
கல்லிலும் முள்ளிலும் நடக்க விட்டதும்
பாதுகாபபிஷேகம் செய்ததும்
பரதன் கால அரசியல்

புஷ் முதல் சிதம்பரம் வரை
செருப்பு வீச்சில் தப்பியது
இனஒழிப்பு ஆதங்க
அரசியல் வெளிப்பாடு

கல்யாண வீடுகலில்
காலணி களவு போவதும்
கவலையோடு ஒருவர்
வெறுங்காலில் நடப்பதும்
அரசியல் தூண்டிய
காலாகால அவஸ்தைகள்

காலணிதான் என்றாலும்
கனவு போனபின்
கனவிலும் வந்து
தூக்கம் கெடுக்கிறது
பழஞ்செருப்புகள்
-வித்யாஷங்கர்