Friday, October 8, 2010

தமிழீழ தேசிய கீதம் எழுதிய பிரமிள்

சென்னைக்கு வந்து சில மாதங்களிலேயே (1979ல்) பிரமிளை ராயப்பேட்டையில் இருந்த அவரது அறைக்கு, விமலாதித்த மாமல்லன், நம்பியோடு சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

சென்னைக்கு வரும் முன்பே அவரது கைப்பிடியளவு கடல் தொகுதியை படித்திருந்தேன். பால்வண்ணம் பிரமிளை ஹிப்பிபோல சொல்லி வைத்திருப்பார். அவருடைய நட்சத்திர நாடகம் தான் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

பார்த்த முதல் நாளிலேயே நீண்டகாலம் பழகியவர்போல அந்நியோன்யமாக பழகினார். அப்போதெல்லாம் சட்டென்று முன்கோபம் கொள்ளும் என்னை ஆசுவாசப்படுத்தினார்.

போல்டரிஸ்ட் படம் குறித்து டி.வி.யின் மூளை மழுங்கச் செய்யும் விதம் குறித்து விளக்கினார். (நான் அந்தப் படத்தை பேய்ப்படம் என்று புரிந்திருந்தேன்)

15, சாரித்தெரு கார்க்கி நூலகத்திற்கு வருவார். ராஜா சுந்தர்ராஜன், சமயவேல் மற்றும் என்னிடம் மட்டும் பேசுவார். அங்கிருந்த இடதுசாரிகளோடு முகங் கொடுத்தும் பேசமாட்டார். அப்போது நான் கன்னட இயக்குநர் ஜி.வி. ஐயரிடம் ஆதிசங்கரா சமஸ்கிருதப்படத்தில் உதவியாளராக சேர்ந்திருந்தேன்.

ஒருமுறை மிகுந்த பணக்கஷ்டம். பிரமிள் சூளைமேட்டில் தங்கியிருந்தார். அவரது நண்பறொருவர் விளம்பரப்பாடல்களை ரேடியோவுக்கு தயாரிப்பார். அவரிடம் சொல்லி விளம்பர பாடல் வரிகளை என்னை எழுதவைத்து வரிக்கு 20 ரூபாய் 160 ரூபாய் வாங்கிக் கொடுத்தார்.

84ல் தேசிய விருது ஆதிசங்கரா படத்திற்கு கிடைத்தது. அதற்காக பெங்களுரில் சவுடையா ஹாலில் நடந்த விழாவில் ஜி.வி. ஐயர் முன்னிலையில் மறைந்த இயக்குனர் புட்டண்ணா எனக்கு ஆதிசங்கரர் பித்தளை சிளை ஒன்றை விருதாக கொடுத்தார்.

ஒருமுறை அதை அடகு வைக்கப்போனபோது என்னை தடுத்து பிரமிள் பணம் கொடுத்து அவரது அறையில் வைத்திருந்தார். பின்னர் பணம் கொடுத்ததும், என்னிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார்.

*கோடம்பாக்கம் உடுப்பி சந்திரவிலாஸ் (ரயிலடியிலிருந்தது) மாடியில் தங்கியிருந்தபோது நானும், நம்பியும் தராசில் சேர்ந்து துவக்கப்பணிகளில் இருந்தோம். அவரது அறையில் களிமண்ணலான அவரே செய்த சிற்பமொன்றும், அவரே வரைந்த படமொன்றும் இருந்தது. அவரை யாரென்று கேட்டேன். அப்போது பிரமிள்தான் விசிறி சாமியார் என்கிற யோகிராம் சுரத்குமார் குறித்து விளக்கிக் கூறி அவரைப் போய் பார் என்றார். அடுத்த சில நாளிலேயே திருவண்ணாமலைக்கு மந்திரி தொகுதி விசிட்டுக்காக செல்ல வேண்டி வந்தது.

தேரடி வீதியில் அழிப்பாய்ச்சி போட்டவீடு. கம்பிகளில் எப்போதோ போடப்பட்டு வாடிய மாலைகள் உள்ளே தரையெல்லாம் தூசி. இரண்டு மூன்று கலர்கலர் துண்டுகளணிந்து தலையில் பச்சைக் கலரில் பெரிய தலைப்பாகையோடு ஒருவர் சிகரெட் பிடித்தபடி இருந்தார். வேலைக்குப் போகிற, கடைதிறக்கப் போகிற பலரும் அவரைப் பார்த்து வாசலில் நின்றபடியே கும்பிட்டுப் போனார்கள். நான் உள்ளே நுழைந்தேன்.

‘எதற்காக இந்த பாவப்பட்ட பிச்சைக்காரனை பார்க்க வந்தாய்’ என்று ஆங்கிலத்தில் கேட்டார். ‘கவிஞர் பிரமிள் தங்களை பார்க்கச் சொன்னார்’ என்றேன். ஒரு சிரிப்போடு அவரோடு நெடுங்காலம் பழகிய பாவணையில் பிரமிளின் நலம் விசாரித்தார். அப்போது சினிமா, நாடகம், பத்திரிகையென்று நிலை கொள்ளாமலும், எதிலும் தொடர்ந்து செயல்படாதவனாகவும் இருந்த நேரம் எனது பத்திரிகை அடையாள அட்டையை அவரிடம் கொடுத்தேன். ஒரு குழந்தையைப் போல பத்திரிகையில் உனது வேலை என்ன? என்றெல்லாம் கேட்டுவிட்டு அட்டையை நெஞ்சோடு வைத்து கண்மூடி ‘பாதர் வில் பிளஸ் யூ’ என்று வாழ்த்தி என்னிடம் கொடுத்தார். இன்றுவரை பத்திரிகையும், எழுத்தும் என்னை விடவில்லை.

உடுப்பி சந்திரவிலாஸில் இருந்தபோது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் அவரை வந்து பார்த்துப் போவார். அவ்வப்போது அவருக்கு பண உதவியும் செய்ததுண்டு. அப்படியான சில நேரங்களில் நானும் உடனிருந்திருக்கிறேன்.

* நக்கீரன் தொடக்கத்தில் இரண்டாவது இதழிலேயே பிரமிளை நம்பியண்ணன் பேட்டி எடுத்து வெளியிட்டோம்.

உதயம் வார இதழ், தொடங்கியபோது காந்தியைப்பற்றி ஒரு கட்டுரையும், பாரிமுனை ஒளவையார் என்று ஒரு கட்டுரையும் எழுதி கொடுத்தார்.

அப்போது அவர் திருவான்மியூரில் அறை எடுத்து இருந்தார். அதற்கான வாடகையை மாதாமாதம் நான் கேட்டுக் கொண்டபடி நக்கீரன் கோபால் ஒருசில மாதம் கொடுத்துவந்தார்.

எனது மனைவிக்கு அவர்மீது தனி மரியாதை. சில நேரம் காவிவேட்டி சட்டையிலும், சில நேரம் ஜீன்ஸ், டி ஷர்ட் தொப்பியிலுமாக வீட்டிற்கு வருவார். எப்போதும் அவருக்காக தோசை சுட்டு தருவது வழக்கமாக செய்வாள். வீட்டில் நானிருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரமிளை அவர் சாப்பிடாமல் அனுப்பியதில்லை. நானில்லாவிட்டால் ஏதேனும் டயரி வாங்கி தகவலை எழுதி கொடுத்து விட்டுப்போவார்.

NAKKIRAN என்பதை லெட்டர் பேடில் NAKHEERAN என்று மாற்றும்படி அவர் ஆலோசனை சொல்லி மாற்றினோம். கோபாலுக்கு அவர்மீது மிகுந்த மரியாதையுண்டு. என் மனைவி போலவே பிரமிளின் எந்த எழுத்தையும் படிக்காமல் ஏற்பட்டது, அது அவர் ஒரு கவிதைக்கு வைத்த தனது பெயரை மறு கவிதையில் வெளியிடமாட்டார். எனக்கு கூட பெயர் மாற்றி தந்தார் (ராஜ்துரை என்று) ஏனோ அதைவிட்டு விட்டேன்.

அவரது இறுதிக்காலத்தில் நான் நெற்றிக் கண்ணில் சேர்ந்திருந்தேன். அவரும் அதே பகுதியில்தானிருந்தார். பெரும்பாலான நாட்களில் மதியம் வெங்கடேஸ்வரா ஹோட்டலில் இருவரும் சாப்பிடுவோம். சில நாட்களில் வள்ளுவர் கோட்டம் அருகே இருந்த டாஸ்மாக்கில் நான் கட்டிங் குடித்துவிட்டு பக்கத்திலேயே கிடைக்கும் ஏதேனும் சாப்பாட்டு பொட்டலம் வாங்கி (அவர் கேட்காமலேயே) அவரிடம் தந்ததுண்டு. எந்த கஷ்டமான நிலையிலும் எனக்கு தெரிந்து அவர் யாரிடமும் எதுவும் கேட்டதில்லை. பலர் அவரை தேடிவந்து உதவிப் போவதை பார்த்திருக்கிறேன்.

நாகார்ஜீனன் வீட்டிற்கு அடிக்கடி கூட்டிப்போவார். அவரது வீட்டில் தான் புரவிப்பாளையம் சாமிகளின் தலைப்பாகை செருப்பு காணிக்கை குறித்து விளக்கினார்.

ஒரே தடவை ப்ரெக்ட்டை பற்றி கவிதையில் எழுதியதற்கு கடிந்து கொண்டது தவிர அவர் எனது எழுத்து குறித்து எப்போதும் பேசியதில்லை. அவர் எழுதிய முதல்பிரதியை படிக்கச் சொல்லி வரிவரியாக விளக்கி சொல்லியிருக்கிறார்.

ஆனால் சென்னை நகரிலேயே அலைந்து திரியும் சித்தர்கள் பலரை எனக்கு அடையாளம் காட்டியிருக்கிறார். இலங்கை அப்பாதுரையாரின் கடயோகம் குறித்து பிரமிக்கும்படி சொல்லியிருக்கிறார்.

பெரியார் சிலைக்கு கீழ் எழுதிவைத்திருப்பதை என்னை படிக்கச் சொல்லி ‘கடவுளை மற! மனிதனை நினை’ என்பதை விளக்கிச் சொல்லி புத்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி இவர்களும் இதையேதான் சொல்வதாக விளக்கியிருக்கிறார். அந்த அருள் கொடையை நினைவில் கொள்ளாமல் விட்டது எனது துரதிர்ஷ்டம்.

வேலூருக்கு சிகிச்சைக்கு போகும் முன்பாக ஒரு நாள் உடன் காலதீப் சுப்ரமணியத்தோடு நெற்றிக்கண் அலுவலகம் வந்தார். அவருக்கு யாரையேனும் பிடித்து எங்கேனும் வேலை வாங்கித் தரும்படி கேட்டார். அது என்னால் முடியாமலே போனது. திடீரென ஒருநாள் காலை நாளிதழில் பிரமிள் இறந்துபோன செய்தி படத்தோடு வந்திருந்தது. அன்று கொஞ்சம் கூடுதலாக குடித்துவிட்டு என் மனைவியிடம் அவரைப்பற்றி சொல்லி அழமட்டுமே முடிந்தது.

பிரமிளிடம் பிரபாகரன் கேட்டுக் கொண்டதற்கிணங்க புலிகளுக்கான போர்ப்பரணியையும் ஈழ தேசிய கீதத்தையும் எழுதித்தந்தார். இடதுசாரி இசைக் கலைஞனான அன்பு என்பவரை வைத்து நான்தான் மெட்டமைத்து கேசட்டில் பதிவு செய்து மாத்தையாவிடம் கொடுத்தேன். இளையராஜாவை வைத்து இசையமைத்து வெளியிட அப்போது திட்டமிருந்தது.

இதோ பிரமிள் எழுதிய புலிகளுக்கான போர்ப்பரணி

உதயத்திசைதாயும் சேயும் ஆயுதங்கள்

தாங்கும் போர் எங்கள் போர்

எங்கள் போர்

எங்கள் போர்

எங்கள் யுத்தம் மக்கள் யுத்தம்

எங்கள் தாகம் தமிழ் ஈழம்

எங்கம் யுத்தம் மக்கள் யுத்தம்

எங்கள் தாகம் தமிழ் ஈழம்

(தாயும் சேயும்)

தமிழர் சிந்தும் உதிரம் உயிர்த்து

நிமிரும் எங்கள் புலிகள் சேனை

புலிகள் சிந்தும் உதிரத்துளியில்

ஒளிரும் உதயத்திசையின் பாதை

(தாயும் சேயும்)

இன்று முன்ணின் பாதை நாளை

வென்று நிற்போம் விடிவு பேசும்

சர்வதேசம் எங்கும் எங்கள்

தர்மதீபம் ஒளியை வீசும்

(தாயும் சேயும்)தமிழீழம்கடலலை அதிர்வினில்

விடுதலை உறும

தமிழீழத்தாய் எழுக

அன்னை

உருவொடு உயிரும்

அருளோடு வீரம்

செல்வமுமாக வெல்க

(வேறு)

வன்னியாழ் கோணைபுத்

தளம்மட்டு நகரொடு

மன்னார் அம்பாறையும் நிமிர

அதிரும்

முத்திசைக் கடல்நடு

நெற்றியாய் ஒளிர்வது

கற்றவர் நிறையுமிந்நாடுவர்க்கவர்ணங்களை

சிந்தை செய் திறனால்

வென்றது நம் தமிழீழம்

கண்கள்

எத்திசை நோக்கினும்

எம்மவர் மானுடம்

முற்றிலும் ஓர் குலமாகும்.பேச்சுகேள்,

அழகு கதைக்கிறதுகண்ணின் இமைக்கரங்கள்

மெல்ல அருகழைக்கும்

பார்வைச் செவிப்பறையில்

பருவம் முரசறையும்பூவின் இதழ்ச்சுவரில்

வண்டுக் குரல் ஒலிகள்

மோதி மடிகிறது

முத்த திரைமறைவில்

பேச்சுப் புதைகிறதுஆனால் ரத்தம் கதைக்கிறது

மவுனம் அதிர்கிறதுமனப்பாடமாக இந்தக் கவிதையை பல இடங்களில் பல நேரம் சொல்லி கூட இருந்தவர்களை பிரமிக்கச் செய்திருக்கிறேன்.

மதம், பக்தி, ஆன்மீகம் என்பது வெவ்வேறானது என்று விளக்கி என்னை ஆன்மிக வழிக்கு நடத்திய ஞானகுரு பிரமிள்.

ஒரு இரவு பிரமிளை பற்றி பேச ஆரம்பித்து கடை கடையாக தேடிக்குடித்து சாப்பிட்டு காரில் கே.கே.நகரையே வலம் வந்து டைரக்டர் ராஜேஸ்வரோடு தூங்கப் போனபோது மணி மூன்றை எட்டியிருந்தது.

இது அவரைக்குறித்த கைப்பிடியளவு கடல் தான்.

2 comments:

  1. பகிர்ந்தமைக்கு மிகுந்த நன்றிகள்.
    உங்கள் பதிவை எடுத்து காட்டிய ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் நன்றிகள்.

    ReplyDelete