ஒளி தூரிகையின் அசைவில்
வண்ணங்களின் தாளலயத்தில்
நாடகம் விரிகிறது.
மவுனங்களின் மொழிக்குழைவால் பிறக்கிறது வன தேவதையின் பாடல்.
தேவதா தனது ஒளி நிறைந்த ஸ்தூல சரீரம் ஏந்தி பறந்து நடமாடுகின்றாள்;.
அவளது பறத்தலின் சிறகுகள் பின்னே ஒளி ஊடுருவி கண்ணாம் பூச்சியாடுகிறது.
மலை முகட்டில் பொங்கிப் பெருகும் அருவியோடு தேவதா வனமிறங்குகிறாள் நீரோடையின் இசைப்பெருக்கில் அவளது சிறகுகளின் அசைவால் பிறக்கிறது நாட்டியம் பிஞ்சு விரல்கள் கைதட்டல்களிலும் கண்சிமிட்டலிலும் தேவதா உற்சாகமாகி பறந்து பறந்து சிறகு விரித்தாடுகிறாள் பறவைகளின் கீச்சொலி சேர்ந்திசை அவளது நடனத்திற்கு பின்னணி இசை சேர்க்கிறது.
தேவதா அந்தச் சூரியனின் ரத்தச் சிவப்பில் இறக்கை தேய்த்து வண்ணமயமாய் ஆகாயம் தொடுகின்றாள்.
வனமலர்கள் தேன் ததும்ப மணம் வீசி தேவதாவுக்கு இதழ்விரித்து காத்திருக்கின்றன.
பழுத்த கனிகள் மணம் பரப்பி நெகிழ்ந்து அவளை உண்ண அழைக்கின்றன.
தேனடைகள் கசிகின்றன அவளின் நாட்டியத்தில் ஓயாத சிறகடிப்பில் சிலிக்கிறாள் தேவதா!!
தேவதாவின் வண்ணமயமான உலகில் குழந்தைகளின் கருவிழிகளில் பூத்த சிரிப்பும் இருளைக்கிழித்து ஒளியேற்றுகிறது.
எங்கும்.
காடுகளின் இசை தனியானது நகரின் சப்தங்களிலிருந்து வேறுபட்டது. ஒவ்வொரு வனப் பெருவெளியும் தனக்கான தனி இசையை ஓங்கி உயர்ந்த மலைகளின் மௌனம் போல் காத்து வருகிறது.அருவிகள் சிற்றோடைகளுக்கு இடையே உயர்ந்து பெருத்து வளர்ந்த மரங்களின் அசைவில் காற்றின் கானம் பிறக்கும் விலங்குகளின் வாழ்பியல்போடு கூடியது அந்த இசை காற்றின் திசைகளில் தாளலயம் கூட்டிப்பிறப்பது.
பறவைகளின் கீச்சாட்டத்தை விலங்குகளின் பிளிறலை ஓசையற்ற காலடித்தடங்களை பதுங்கு குகைகளின் வாசணையோடு பரவுவது காட்டிசை.
மலைமக்களின் இதயத்துடிப்போடு இயைந்து அவர்களின் மூங்கில் துளைக்குள் பெருகுகிறாள் வனதேவதாபயிர்களுக்கென்றும் புல்லுக்கும், மலருக்கும், மரங்களுக்கும் என்று தனித்தனி இசைக்குறிப்புக்களை கொண்டது காட்டிசை ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை ஓடைக்கும் அருவிக்கும் வெவ்வேறு இசைக்குறிப்புக்கள்.
வனதேவதையின் இசைக்குறிப்;புக்களில் சித்தர்களின் மௌன மந்திரங்கள் உள்ளடங்கி காற்றை நிறைக்கின்றது.
வன இசைக்குள் வாழ்தலின் இனிமையும், மூலிகைகளின் காற்றுப்பெருக்கில் இதயசுத்திக்கான இசையொலி பெருகிறது.
No comments:
Post a Comment