Saturday, July 3, 2010

பசித்த  குரங்குகள்
பழங்களை பங்கிட்டு
கொள்வதில்
மாறிவிடுகின்றன
மனிதர்களாக
-----------

டார்வின் பரிணாம வளர்ச்சியில்
எத்தனாவதாக நிற்கிறாய்
நீ
-----------

நரிமுக தரிசனம்
அதிர்ஷ்டமாம்
கவிஞர்களுக்கு
காணக் கிடைப்பதெல்லாம்
நரிமுகம் போர்த்திய
ஓநாய்களே

பாட்டுக்கட்டி
பவிசாக வாழ்பவர்கள் வீட்டில்
நரிகள் குறுக்கு மறுக்குமாய்
நாய் குட்டிகளாக திரிவதாக
நாலு பேர் சொல்கிறார்கள்
இல்லாமல் பிறக்காது சொல்
-----------

கிட்டதட்ட
தலைமறைவு நாட்களாகத் தான்
கடந்தது அக்காலம்

நிறைய நண்பர்கள்
அவன்
இறந்து போனது போல பேசவும் செய்தனர்
அவனது
நிறை குறைகள்
விவாதிக்கப்பட்டது

சிலர் அவனது தொழில் நுட்பத்தை வியந்தனர்
சிலர் அவனது
பெண் பலவீனத்தை முன்வைத்து
ஆதங்கப்பட்டனர்

அவனது படைப்பாற்றல்
பகிர்ந்து கொள்ளப்பட்டது

எல்லாவற்றிற்கும்
பிறகு தெரிந்தது
அவன் சாகவில்லை

சில காலம்
காணாமல் போயிருந்தான் என்பது
-----------

ஒரு  நல்ல கவிதை
எழுதுவதும்
ஒரு கொலை செய்வதும்
ஏறத்தாழ ஒரே மாதிரித்தான்

திட்டமிடல் ஓர் மை
தேர்தெடுத்தல் தொடர் வன்மம்
தீராத ரணம்
இரண்டுக்கும் பொது

அலட்சியங்கள்
அவமதிப்புகள்
புறக்கணிப்பு
பொல்லாப்பு

சேதாரமாகும்
பொழுது

கொலைக்கான
கருவி
தீர்மானமாகிறது

எங்கே
எப்படி
உயிர் பறிப்பது
இரக்கமற்று

அடையாளத்தை
விட்டுச் செல்வதா
அடையாளத்தை
அழித்து  செல்வதா

தருணங்களே
தீர்மானிக்கின்றன

எதிராளி கொல்லப்பட்டதும்
பெறுகிற
விடுதலை வேட்கையோடு

தலைமறைவானால்
எல்லோரும் தேடுவார்கள்
பேசுவார்கள்

கவிதையை
முன்வைத்து நேரும்
உறவு போல

கொலையில்
சேதம் வெளித் தெரியும்
கவிதையில்
தெரியாது

ஆனாலும்
கொலையைவிட
சிரமமானது
நல்ல கவிதையை
எழுதுவதென்பது
-----------

கவிஞனும்
பைத்தியக்காரனும்
ஒன்றுதான்
(அறுதப் பழசானாலும்
இதுவே சரியாக பொருந்துகிறது, இப்போதும்)

ஒழித்து வைத்திருந்ததை
சேகரித்து காத்ததை
எல்லாவற்றையும்
கொட்டி விடுகிறான்

அவன் சிதறடித்த
பொருட்களின் நேர்த்தியில்
கவிதை
கண்ணாமூச்சியாடுகிறது

அவன் தூக்கி எறிந்த போட்டோக்கள்
உங்கள் கண்களில்
கண்ணீரை துளிர்க்கச் செய்கிறது

அவன் வீசி எறிந்த மலர்களின் மணம்
உங்கள் நாசியை துளைக்கிறது

எந்தப் பைத்தியமும்
குழந்தைகளின்
விளையாட்டுப் பொருட்களையோ பொம்மைகளையோ
தூக்கி எறிந்து பார்த்து இருக்க முடியாது

ஏனெனில்
ஒவ்வொரு பைத்தியமும்
ஒவ்வொரு கவிஞனும் குழந்தையும் கூட

No comments:

Post a Comment