Friday, January 7, 2011

எப்போதும் அவள் தேவதையாகவே இருந்தாள்

மார்போடு புத்தகங்களை ஏந்தி

சீருடையில் பள்ளிக்குச் செல்லும் வழியில்

பதுங்கி பார்த்துப் போனபோதும்



பெரியவளாகி தூணோரம்

பாதிமுகம் தெரிய

அவன் பேச்சை வரிவிடாமல்

கேட்ட போதும்



பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட

மணம் முடித்து காரிலேறியவள்

மண்டப வாசலில் நின்றவனுக்கு

சிரித்து கைகாட்டிச் சென்றபோதும்



இருபதாண்டு இடைவெளிக்குப்பின்

தலைக்கு சிக்கெடுத்தபடி

எதிர் பாராமல் சந்தித்த அவனுக்கு

இதழோர சிரிப்பொன்றை உதிர்த்தபோதும்



இறுதி நாள்களில்

கேசம் உதிர்ந்து உடலுருகி

படுக்கையிலிருந்து எழ முடியாமல்

பார்க்க வந்தவனை கண்டதும்

விழியோரம்

கண்ணீர் கசியவிட்டபோதும்



மஞ்சள் பூசி மாலை சூடி பலர் மனங்குமுற

மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்த மஞ்சள் கிழங்காய்

பல்லக்கில் இறுதி ஊர்வலத்தில்

எடுத்துச் செல்லப்பட்ட போதும்



அவள் தேவதையாகவே இருந்தாள்

வித்யாஷங்கர்

5 comments:

  1. என்ன சொல்லன்னு தெரியாமாத் தவிக்கிறேனே கடவுளே?கவிதையாலேயே அடிக்கப்பட்டு வீழ்ந்து கிடக்கிறேன்.

    ReplyDelete
  2. காதலி எப்போதுமே தேவதைதானே.. அருமையா எழுதியிருக்கீங்க

    ReplyDelete
  3. அருமை அருமை வித்யாசங்கர். நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete