Friday, June 29, 2018



                    கல் மணடபத்து கிளிகள்


1
·         எனக்கான
கவிதையை
      எழுதலாம் நீ
      ஒரு போதும்
      எழுதமுடியாது
      என் கவிதையை
2
·         எத்தனை வரிகள்
இருக்க வேண்டும்
எதன்பின்
எது இருக்க வேண்டும்
சொல்லிக் கொண்டேயிருக்கிறேன்.
எதுவும் தெரியாமலே
3
·         உண்மையை
பேச முடியவில்லை
உண்மையை
எழுத முடியவில்லை
உண்மையாய்
வாழ முடியவில்லை
எழுதுவோர்
ஏராளம் பேருண்டு
கிளுகிளூப்பூட்ட
நேரத்தை கொள்ளையடிக்க
பட்ட பாட்டைச் சொல்லும்
பத்துப் பேரில்
ஒருவனாக
நான்






4.
பயனுமது
 எதற்கேனும்
பயன்படாமலா போகும்

நுனிநாக்கு ஆங்கிலம்
பேசுவோரிடம்
மண்ணின் மைந்தனாக
காலரை உயர்த்திவிட

ஜிலு ஜிலு
சினிமாக்காரர்களிடையே
ஆழமான ஆளென்று
அலட்டிக் கொள்ள

தண்ணி பார்ட்டிகளில்
அறுவை ஜோக்குகளிடையே
கவிதை சொல்லி
அசுடு வழியச் செய்ய



அகடமிக் ஆட்களிடம்
அப்படியா ? தமிழிலா ?
என்று வியக்க வைத்து
நவீனம் பூசிக் கொள்ள

இப்படி
எதற்கேனும்
பயன் பாடமலா போகும்
கவிதையென்றுதான்
எழுதிக் கொண்டிருக்கிறேன்










5
·         கவிதைக் கானதென
நீங்கள் கருதும் வாத்தைகளையெல்லாம்
என்னிடமிருந்து
காவு கொண்டுவிட்டது
காலம்

மிஞ்சியது
வார்தையின் இருப்பும்
அதன் வலியும்தான்
7 அழைக்கும் வெளி
 நான்
 எங்கும் போக முடியாதவன்
 யாரைச் சந்திக்கவும்
 பிரயத்தனப்படாதவன்
 இருந்த இடத்தைவிட்டு
 வேறிடம் அறியாதவன்
 போகவும் பார்க்கவும்
 அறியவும் வேண்டியவையென
 அழைக்கும் வெளி
 எப்பவும்.
7.. தொடரிம் உற்வுகள்
இன்னும் ஒரு குவார்ட்டர்
கண்டிப்பாக தேவைப்ப்டும்
கடை அடைப்பதற்குள்
நண்பனைப் பிடித்து வாங்கிவிடுவோம்
நாளை வாழ்வதற்கான
நற்குறியெதுவும்
இந்தக் கடைசி மடக்கை
குடிக்கும் வரை இல்லை
குழத்து புழையாறு பற்றி
குமரி  சூர்யோதயம் பற்றி
தாமிரவருணியைப் பற்றி
உச்சிக் கோபுரம் கடந்து
போயே போய்விட்ட பிலோமி பற்றி….
இற்றுப் போயிற்ற்றெல்லாம்
இழுத்துக்கட்ட
எதுவுமற்று…
ஊறுகாய் போலவே
வறுத்த மீனும்
சுண்டலும் கூட
குட் காம்பினேஷன்
8. அரைகுறை போதை
வீட்டில் காத்திருக்கும் மனைவியை
தூக்க விழிப்பில் கவிதையாய்
புன்னகைக்கும் மகனை….
எல்லோரையும் நினைவூட்டும்…
முழுக்க முழுக்க
நிலா முழுக்க
உள்வாங்கு
கடல்முழுக்க
கொந்தளிக்க…….
காற்றாய்
சுவடற்றுக் கரைய
இன்னுமொரு
குவார்ட்டரும்
வேண்டும்
தேடிப்பிடித்து
காசு கொடுத்து
வாங்கிக் கொடுக்க
நண்பனும் வேண்டும்
எவ்வாறாயினும்
உறவுகள் அறவே
முறிப்பதற்கில்லை
மூடமதே!

9.எப்போதாவது
தெருநாயை
மார்பணைத்து
தூக்கிச் சென்று
பாலூட்டி
ரிப்பன்கட்டி
பாபியென்று
பேர் சூட்டியிருக்கிறாயா…..
எப்போதாவது
முன்பின் பார்த்திராத
குழந்தைக்கு
நள்ளிரவில்
சாப்பாடுவாங்கித் தந்து
தூங்கப் பண்ணியிருக்கிறாயா….
எப்போதாவது
நட்சத்திரங்கள் உதிர்ந்து
காலடி விழுந்தது கண்டு
மனம் பதைத்திருக்கிறாயா….
பேசும் எதிர்ப் பெண்ணின்
குரல் தழைவு பொறாமல்
கண்ணர் விட்டிருக்கிறாயா….
இதெல்லாம்
எப்போதாவது நிகழ்ந்து
(இருப்பை)
வாழ்வாக்கிக் கொண்டு தானிருக்கிறது
வாழ்க்கை

10..
·         பழகிப் போச்சி
ஓவர் குடியிலும்
ஒரு நாளும்
எந்த வீட்டுக் கதவையும்
தட்டினேனில்லை
கனவிலோ
ஆயிரம் வாசல்கள்

12
உன் அறிதலல்ல நான்
 எவ்விதமாய் நான்
அறியப்பட்டிருக்கிறேன்
என்பதில் இல்லை நான்
தூக்கம் கலைந்த
நடுநிசிகளில்
வெறிச்சிட்டு பிள்ளையையும்,
மனைவியையும்
விட்டோடும்
சித்தார்த்தம்
இன்னும்
தொடர
எத்தனை நாளைக்கு
மாதத்திற்கு வருடத்திற்கு
வாய்க்கும்
இவ்விருப்பு
எனத் தொடர்வேன்

நாளும் பொழுதும்…
பழக்கத்தில்
உண்ணல் உறங்கல்
உழைத்தலென.

12.
·         கதவுதான்
மனிதத்தின்
      முதல் கறை
      பூட்டி வைக்காதவரை
      எவனும்
      திறந்து பார்க்க
      ஆசைப்பட்டதில்லை
      உடைத்ததாய்
      தகவலில்லை
      கதவால்  வந்ததுதான்
      கடவுளுக்கும்
      ஆபத்து
      கதவுகளற்ற
      தெருக்கோயில்களில்
திருடு போனதேயில்லை
இதுவரை.

14.
கானல்

ஏதேனும்
நல்லதாகப் படித்தால்
பாராட்டி ரெண்டுவரி
கடிதம் போட முடிவதில்லை.
காலண்டர் கவிஞர்களுடன்
போட்டியாக
இல்லையென்றாலும்
பண்டிகைகள் பற்றி
கவிதைகள் தோன்றியது
இப்போதில்லை
பால்ய நண்பர்களை
ஊராரை உறவினரை
கண்டதும் ஏற்படும்
பழைய பரவசம்
எள்ளளவு மில்லை



.
முன்பு போல
கொடியில் காயும்
பெண்களின் உள்ளாடைகள்
கிளர்ச்சியூட்டுவதில்லை
எந்த பிராண்டு மதுவும்
எவ்வளவுதான் குடித்தாலும்
ஏகாந்த மூட்டுவதில்லை
அறச்சீற்றம்
அழிந்து கொண்டேயிருப்பதை
தடுக்க முடியவில்லை
பல இன்மைக்குள்
இருப்பு

15.
பரமபதம்
அதிர்ஷ்டம்
பாம்புகளாகவும்
துரதிர்ஷடம்
ஏணிகளாகவும்
ஏறி இறங்கி
கழிகிறது
வாழ்க்கை

16.
·         தற்செயலாகததான்
முதல்வேலை விட்டதை
எழுதப்போய்
கதையாக வெளியானது
தற்செயலாகத்தான்
நண்பர்கள் சேர்ந்து
நடத்திய இலக்கியப்பத்திரிகைக்கு
ஆசிரியன் ஆனது
தற்செயலாகத்தான்
தமிழ் நன்றாகப் பேசியதால்
பள்ளி நாடகத்தில்
நடிகன் ஆனது
தற்செயலாகத்தான்




.
திரைப்படத்தில்
உதவியாளன் ஆனது
தற்செயலாகத்தான்
மாமன் மகள் மனைவியாகி விடுவாளே
என்று பயந்து
காதலித்து தோற்றது
தற்செயலாகத்தான்
வயிற்றுப் பிழைப்புக்காக
நிழல்தேடி ஒதுங்கி
நிரந்தரப் பத்திரிகையாளனானது
பிரயத்தனப்பட்ட தேயில்லை
எல்லாமே வந்து வாய்த்தது
காப்பாற்றிக் கொள்ளவேண்டிய
கரிசனமேயில்லாமல்
தற்செயலாகத்தான்
தவற விட்டு விட்டேன்
குற்றமோ குறையோ
எவர் மீதுமில்லை
எனக்கு

17.
  ஒப்பனை-1
·         எந்த வேஷத்திற்கும்
பொருத்தமற்றது என்முகம் 
சுற்றிச் சூழ
நடக்கிறது நாடகம்.

18..
ஒப்பனை-2
·         பொருத்தம் என்று
நினைக்கிறார்கள் போலும்
திரும்பத் திரும்ப
அழுந்தத்  துடைத்து
மறுபடியும் போட்டுக் கொள்கிறார்கள்
இன்னின்ன வேடத்துக்குஎன
நிர்ணயித்திருப்பார்கள் போலும்
அவரவர்க்கு உரிய இடங்களில்
அவரவரும் அசத்துகிறார்கள்
எந்த ஒப்பணையுமற்றுத் தான்
நுழைந்தேன்.
எனக்கும் ஒரு வேடம்
நிர்ணயித்திருப்பார்கள் போலும்
எனக்குத் தெரியாமலே

என் ஓயாத அவஸ்தையெல்லாம்
பாத்திரங்களை நிஜமென்றுநம்பும்
இவர்கள் பற்றித்தான்

19.
·         எனனை எடைபோடலாம்.
உங்கள் தராசுகளில்
ஒருபோதும் அடைபடாது
என் கவிதை
என் கவிதைகள்
என் இஷ்டம் போல கூட
அமைவதில்லை.
அதன் போக்கிலேயே
குறுக்கிட முடியாத போது
தராசு (தட்டு)களுக்கு
ஏதுபலம்.


20.
·         அங்கிருப்பதே
நலமென்பார் சிலர்

இங்கிருப்பதே
நலமென்பார் சிலர்

எங்கிருப்பதும்
நலமில்லை
இருப்பதைத்தவிர











21.
·         இருளப்பசாமி
ஏகாங்கி
பார்வைக்கு பொட்டலும்
பட்டினிப் பட்டாளமும்
திசையெட்டும்
இருந்தாலும்
கை அரிவாளை
கவனம் தப்பி
கால் உடைத்துக் கொண்ட
இருளப்பசாமி
ஏகாங்கி.









22.
·         வெள்ளாமை
மோசம் போனதால்
வேகாத வெய்யிலில்
வேப்பமர நிழலிருந்தும்
வெந்து தவிக்கிறாள்
ராக்சாச்சியம்மன்
பங்குனி கொடை
பறிபோன தவிப்பில்












23.
·         கருவமரம் நிறைஞ்ச
கம்மா
வண்டித்தடம் பதிஞ்ச
ஒத்தையடிப்பாதை
வேல்க்கம்பு
வெட்டறிவா
பலிகொண்ட
உசிர்த்தடங்கள்
பீமன் கிணறு
வானரமுட்டி
மந்தித் தோப்பு
காக்காதோப்பு
மினிபஸ்
போக்கு வரத்தால்
டீசல் வாடையில்
பொசுங்கும்
கருவேலம் பூக்கள்
நாலணா சம்பளத்தில்
வெள்ளை குதிரைவச்சிருந்த
வெள்ளையத்தேவன்
ஆம்பளைக்கு தோதா
இளவட்டக்கல் தூக்குன
அப்பத்தா மாரியம்மா


எட்டுப்போர் கம்புசுத்தினாலும்
தலைப்பா துண்டால்
தடுத்து நிறுத்தின
ராசா மாமா
(மகளை குடுத்து
மருமகன் கையால
வெட்டுப்பட்டு செத்தது
வேற கதை…)
செண்பகப் பேரியிலும்
ஏழாயிரம் பண்ணையிலுமாய்
சூல் கொண்ட
உயிர்த் துடிப்பு
கோவில் கட்டிய
முப்பாட்டன்
பரம்பரை
குவார்ட்டருக்கு அலைகிறது
அரண்மனை வாசலில்
பருத்த மீசையும்
கிருதாவுமான சாண்டியர்களின்
ஓயாத ஆடு புலி அட்டம்
துருவேறிய
வேல்க்கம்புகளால்
புழக்கடைச் சாக்கடை
அடைப்பு நீக்குகிறாள்
அப்பத்தா !


இளவட்டக்கல்
புதைந்துபோய் கிடக்கிறது
ஒரு கொடிக் கம்பத்தின் கீழ்
லாட சந்யாசம்
பேசி வந்த
ராக்காச்சியம்மன்
பார்வைக்கு எட்டிய தூரம்
பச்சையற்று
பரிதவிக்கிறாள்
வடக்குத் தெரு
தெக்குத் தெரு
குமரு இளவட்டங்களால்
குளிர்ந்த ஊற்று
பாசிபடர்ந்துக் கிடக்கிறது
குப்பை படிந்து
பாலிதீன் பைகள் நிறைந்து
யாரோ வைத்து
தலை துண்டிக்கப்பட்ட
புத்தன் சிலை
படிக்கட்டில் கிடக்கிறது
பிள்ளையார் கோயிலில்



வணிகர்களின்
வசமாகி
கம்பித்தடுப்புக்குள்
அடைபட்டுப் போனாள்
மாரியம்மாள்
கெத் கெத்தென நீர் நிறைந்து கிடந்து
கண்மாய்க்குள்
காலனி உருவாகி
காவலுக்கு வேலையின்றி
கையில் வல்லையக்கம்போடு
வாட்ச்மேனாய்  நிற்கிறான் கருப்பசாமி

அங்காள பரமேஸ்வரிக்கு
முளைப்பாரி போட்டு
கும்மிபாட \
தீப்பெட்டி ஆபிஸ்
லீவு நாட்களில் மட்டுமே
கூடுகிறார்கள் குமரிகள்

தண்டட்டி குலுங்க
எட்டூர் கேட்க
குலவையிட்ட
உடையம்மா, பேச்சியம்மா
அங்கம்மா
ஆவியெல்லாம் போச்சு




இத்துப் போன
தேவனுக
விருதாவா
மீசையைத் தடவிவிட்டு
ஊர்க் கேலிக்காளாகிறார்கள்

வேத்தூர்காரனுக்கு
தவிச்ச வாய்க்கு
தண்ணி குடுக்கிற
தாராள வீடில்லை
வெட்டு குத்துண்ணு
திரிஞ்சவனெல்லாம்
வியாபாரி ஆகிப்போனான்
தெருவுக்கொரு பிராந்திக்கடை எடுத்து
பேரா பிழைக்கிறாங்க?

மகாசிவராத்திரி கொடைக்கு
சினிமா பாட்டுக் கச்சேரி
வீடியோ படமுன்னு பிரஸ்லெட்போட்ட
புதுப்பணக்காரங்க
பவுசு காட்றாங்க

சந்நதம் கொண்ட
சாமி குரலிலும்
ஆளுக்கு ஏத்த குறி
அடங்கியிருக்கு


ஒப்பாரி, தாலாட்டு
தவசம் தானியம்
நீர்மோரு, ஊர்க்கஞ்சி
வண்ணாத்தி, வெட்டியான்
நாசுவன், தோட்டி
வள்ளுவன்…

 முத்துப்பட்டன் கதை
முடிஞ்சே போச்சு
பெட்டிக் கடைவச்சு பிழைக்கா
வில்லுப்பாட்டு பொன்னம்மா

முளைப்பாறியக் காணோம்
குமருக கும்மியக் காணோம்
சோளத்தோசை காணோம்
வரகரிசிச்சோறு காணோம்
கேப்பைக் கூழு காணோம்
கம்மங்கஞ்சி காணோம்

ஒத்தபந்தமேந்தி
சாமத்துல சுடுகாடுபோன
கருப்பசாமி
கால்தண்டையக் காணோம்



சாமக் கொடைக்கு
பலிகொடுத்த
துள்ளுமறி
ஆத்தா அருள்
ஆதி உயிர்
எடுத்துப் போச்சோ
அற்றுப் போச்சோ.


.
சாராயம் விற்ற காசில்
பளிங்கு பதித்த வீடு கட்டியும்
புறவாசலில்
பன்றிகள் வளர்க்காமலில்லை
பேச்சி

.
26.தொணை

கருப்பட்டி பணியாரம்
மொச்சைப் பயிறு
கேப்பை கொழுக்கட்டை
கடகாப் பெட்டியில் வைத்து
காடுகளில் விற்கும்
காது வளர்த்த
அங்காத்தா பாட்டி

சூழ்ந்த ஆற்றுக்கிடையே
சூலம் ஏந்திய
இருக்கன்குடி மாரி

கைநாட்டு சட்டம் மீறிய களவு
சேவக்கட்டு
அறுத்துக் கட்டு
வங்கொலை
காவு
காய்ச்சி வடித்த சாராயம்
துடியான தேவதைக்கு
சாமக் கொடையில்
படையல்

சாராயத்தை சூரியால் தொட்டு
சேனை வைத்த மறவன்
கல்லோடையில் புணர்ந்த
நாதியற்ற விதவையின் புலம்பல்






வேல்க்கம்பு சூரியேந்திய
கீதாரிகளின்
துயரப் பாடல்

கம்பங்கதிரில் கசியும்
பச்சைப்பால் வீச்சம்

தீப்பெட்டி அடைபட்ட
பொன்வண்டுக்கு
ஒடமர இலை தேடும்
பையன்கள்

கானல் தண்டவாளங்கள்
கம்மாயில்
அலை மோதும் மீனிடம்
ஒடமரத்தில் தொங்கும்
குருவியிடம்
அனல் சிரிப்பு

கோணங்கியின்
ஒத்தையடிப் பாதையில்
தொணைக்கு
27.
 மூதாதையர்
தாளிக்குள்
முடங்கிப் போனது
காலம்

பச்சை பயிறுகளின்
பால் பிடித்த,
வாசனையோடு
நின்று போயிற்று
நினைவுகள்

மனைவிக்கும்
குழந்தைகளுக்குமாய்
மாதச் சம்பளத்தில்
நிகழ்காலம் கழிய

கடந்த காலத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
மூதாதையர்க்கு
படையல் வைப்பது போல்.

28..
·         செளந்தர்ய தேவைகள்
நைவேத்யமின்றி
இருள் படிந்து கிடக்க
துஷ்ட தேவதைகளோ
துடிகொண்டாடுது


29..
அருள்
அருவாள் பாய்ந்து
ரத்தஞ் சொட்ட சொட்ட
உதடுகள் துடிக்க
என்ன சொல்ல நினைத்தானோ
அந்தப் பள்ளித் தோழன்

சிறை மீண்டு
சகஜமாக வாழ்ந்து திரியும்
சின்னத்துரையிடம்
இம்மியளவும் குற்ற உணர்வு
தென்படவே இலலை

வருஷா வருஷம்
விரதமிருந்து
கொடைக்கு அக்கினிச்சட்டி சுமந்த
ராசா குடும்பம்
விருத்தியாகவேயில்லை.

.
சாராய வியாபாரிக்கு
சந்நிதியில் சமாதி வைத்ததை
சமமாகவே ஏற்றுக் கொண்டாளா
காளி
பூடமாய் இருந்தவள்
‘மார்பிள்’ பதித்த அறையில்
இரக்கமற்று இருக்க
எப்படி முடிகிறது?

கல்லென்று எண்ணாமல்
தின்னக் கரும்பு தந்த
சின்னவன்
காலத்தில் கரைவானா
கரையேறி வருவானா.

30.
·                            வாழ்க்கையை
எழுதித் தீர்க்க முடியாமல்
கழிக்கிறேன் இன்னமும்.

எழுத முடியாமல்
கிடக்கிறது வாழ்க்கை
உயிர் ருசித்த
ரத்தம் தோய்ந்த
மூதாதையர் வாளாய்
எரவாணத்தில் சொருகி.


·                             என்ன வேண்டுமானாலும்
சொல்லிக் கொள்ளுங்கள்
ஆட்சேபணையில்லை
உயிரை துச்சமென மதித்து
அண்ணாக் கயிற்றில்
அரிவாள் தொங்விட்டு
நடக்கிறவன்


     கடலைமிட்டாய்
கரிசல் மண்
கி. ராஜநாராயணன்
தீப்பெட்டி தொழில்

தெருவுக்கு ஒரு
கவிஞன் அல்லது காதலன்
கதை சொல்லி அல்லது
போஸ்ட் மாடர்னிஸ்ட்

மாதந்தோறும்
எங்களூர் வெட்டுக்குத்து
இடம் பெறும்
தவறாமல் தினசரிகளில்

கல்யாணம்
காது குத்துதல்
பூப்புனித நீராட்டு விழா
கிரகப்பிரவேசம்
அமரரானாரென்று

எப்போதாவது
வீடுதேடி வந்து
விழுகிற தபால்களுக்குள்

ஒரு முகத்துள்
பல முகங்கள்
உள்ளூடாய்
நிறைந்திருக்கும்

அதிலொன்றாய்
அவள் முகமும் வந்து போகும்.

31.
அத்தாட்சி நான்
சைக்களில் ஸ்கூலுக்கு வந்தாள் சந்திரா
என்றுதான்
சைக்கிள் ஓட்டக்கற்றுக்கொண்டேன்

இசபெல்லா இங்கிலீஷில்
வெளுத்துக்கட்டுகிறளென்று தான்
டியூஷன் வைத்து இங்கிலீஷில் பாசானேன்

தேர்ந்தெடுத்த வார்ததைகளால்
தமிழ்ச் செல்விக்கு
கடிதமெழுதித்தான் கவிஞன் ஆனேன்

வேறுவேறு
ஊருக்கு பிரிந்ததால்தான்
அவளுக்கு என்னை நினைவூட்ட
பத்திரிகைகளில் கதை எழுதினேன்!


காதலித்தவனை கைப்பிடித்தவன்
அமைச்சரின் செகரட்டரி என்பதால்தான்
பத்திரிகையில் நுழைந்து
அக்குவேறு ஆணிவேறு அரசியலை கிழித்தேன்

எவள் எவளாலோ
வளர்ந்த அறிவுதான்
இப்போதெனக்கு
சோறுபோடுகிறது!

அடித்துச் சொல்வேன்
‘ஆவதும் பெண்ணாலே’






32.
·         வேதாளம் சுமந்த
விக்கிரமாதித்யனாய்
சுமந்து திரிகிறேன்

நீயோ புதிர்போட்டு
விடைசொல்லா விட்டால்
தலை வெடிக்குமென்று
அவ்வப்போது பயமுறுத்துகிறாய்

33..
கடவுள் இல்லாதிருந்தது
சவுகர்யமாயிருந்தது
இளமைக்காலத்தில்
தப்புச் செய்ய

கடவுள் இருப்பது
சவுகர்யமாயிருக்கிறது
என் இயலாமையிலிருந்து
என்னைக் காக்க

கடவுளுக்கும்
எனக்குமான
கள்ளத்தில்
யாரடி
நீ




34.
·         அத்துவானக் காட்டில்
ஓங்கிய அரிவாளோடு நிற்கும்
கருப்பண்ண சாமிக்கும்
துணையுண்டு
ஒரு நாய்

35.
கல்மண்டபத்து கிளிகள்
கனிகள் ருசிக்க
மறந்து போச்சோ

காட்டுக் காற்றும்
நெருப்பாயாச்சோ

சன்னதி யென்று
சரணமாச்சோ

சாமி பார்க்கும்
ஆசையாச்சோ

படையல் ருசியில்
பறக்க மறந்தாச்சோ
பயமோ
பாதுகாப்போ
கற்களில் மோதி
ரத்தங் கசிய
சுற்றி வருகின்றன
கல்மண்டபத்தில்
கிளிகள்
36.
·         முன்னொரு
ராத்திரி மழையில்
அவளின் நிர்வாணமே
போர்வையாக்கிக் கிடந்தேன்

காலையில்
பச்சை பசேலென்றிருந்தது
உள்ளும்
வெளியும் பூரித்து

அவள் மகளுக்கு
கல்யாணமென்று
பத்திரிகை கொடுத்துவிட்டு போனாள்
சற்றும் சலனமில்லாத
பார்வையோடு

இப்பவும்
ஈரக்காற்று வீசினாலே
எரிகிறது
எனக்குள் தீ!









37

·         ஒடமரத்தில்
ஓராயிரம் பொன்வண்டு

ஓடைக் குளியலில்
ஓரக் குளியல் காரியவள்

38.
வியப்பு
பாம்பன் சாமி கோவில்
பவுர்ணமி பூஜை
ஃபாரின் ரம்மை

ஹோட்டல்களில்
போதை மாத்திரையில்
பாவாடை தாவணியில்
கற்பிழந்து
அவனையே கணவனாக
வரித்துக் கொண்ட
அனுபவத்தை

கோல விழியம்மனை
மகளிரணி தலைவியின்
பிராத்தல் ஹவுஸை

அங்கு வந்து போகும்
அரசியல் பிரசங்கிகளை
சிரித்து
தொட்டுப் பேசினாலே
காரியம் செய்கிற
பிரபலங்களை
கிழட்டு அரசியல் வாதிகளை

முகமெல்லாம்
சிரிப்பு
பூத்த பெண்ணை

.
ஸ்ரீ தேவி குடியிருக்கா
என்றும்
அவளது உயர்விற்கு
பின்னாலிருக்கிற
ஆண்களின் பட்டியலை

சாமியாரிணியான போதும்
சந்தோஷமாயிருக்கலாம்
வா என்ற
சந்நிதானத்தை

லெஸ்பியன் சிநேகிதி
மறக்காமல்
வருடம் ஒரு முறை
கொண்டு வரும்
மேன்லீ ஸ்பிரேக்கள்.

இப்படி
ஏகமாய் அவளுக்கு
இருபதிற்குள்
கிடைத்த உலகம்

நாற்பதில் எனக்கு
வியப்புத்தான்

39.
பாம்புகள்
பெளர்ணமி சந்திரன்
அகலக்கண் விரித்து
பார்த்துக் கொண்டிருந்தான்

நீலக் கடலலை
ஆர்ப்பரித்தது
வெட்கமின்றி

பின்னிப் பிணைந்துக்கிடந்த
பாம்பிரண்டும்
இறக்கைகள் முளைத்ததாய்
பறக்க துடித்துக் கொண்டிருந்தன

நள்ளிரவின் நரம்பில்
நழுவி நழுவி
 நான்

40.
ஏனோ
ரகசியமாய்
அழைத்து
பிளேடி வாங்க
அனுப்பிய
அடுத்த வீட்டக்கா

கைலிக்கு மாறிய
என்னுடன்
முகங்கொடுத்து
பேசுவதேயில்லை

41.
கல்நீலி

நீரில் நட்சத்திரப் பூக்கள்
ருதுகன்னிகளின்
தீராக்காமத்தின் இழைகள்

நரபலிக் காட்டில்
மந்திர உடுக்கொலிக்க
முனிவனம் புகுந்த
இச்சைதீரா சப்த கன்னிமார்

ஸர்பத்தின் காமரேகை
ஸ்ரீ சக்கரம் உட்கொண்ட
மதனபீட ஒழுக்கு
துடைக்கிடையில
பிடிபட்ட வேடன்
பச்சை நரம்புகள் தெறிக்க
உயிர்த் தகனம்








கொங்கையின
ரகசிய இழைகளில்
சிசுவின் தைல மிதப்பு

நீல ஒளி நெளியும்
சூன்யத்தை அர்த்தப் ப்டுத்தும்
ருதுவின் கண்

புனை நிழல் அலைவுறும்
காலத்துக்கு வெளியில்
கல்நீலி.

42

·         நீ வாழ்ந்து கொண்டிருக்கிற
நினைப்பில்
இருந்து கொண்டிருக்கிறேன்

·         விதவைப் புலம்பலுக்கு
வேண்டுமா
பக்க வாத்தியம்


.
·         கரையில்
என் படகு
அலை வந்து
இழுத்துச் செல்லுமென
43
என்றாலும்

·         காலையில் எழுந்ததும்
பல்துலக்க பேஸ்டை
எடுத்தால்
”பிரஷ்ஷை கழுவிட்டு
பேஸ்ட் வையுங்க”

குளித்து முடித்ததும்
‘அதே லுங்கியோடு
உள்ளே வராதிங்க
அது பாத்ரூமிலேயே
கிடக்கட்டும்

சாமிக்கும்பிடும் போது
அடுத்தடுத்து தீப்பெட்டி
குச்சிகளை
கொளுத்திப் போடும் போது

ஃபேனை அமத்திட்டு
விளக்கு ஏத்துங்கன்னு
எத்தனை தடவை சொல்றது
சாப்பிட உட்கார்ந்ததும்
“பாதி தோசை தட்டுலயும்
தரையிலுமா
போட்டுத் தின்னாத்தான்
ருசிக்குமா”


.

“ஹலோ… ஹலோன்னு
கத்தறனே
நாந்தான் நாந்தான்னா
பேர் சொல்றது”

ரோட்டைக் கடக்கும் போது –
கூட பொம்பளை
வர்றாலேன்னு
யோசிக்காம்
வெடவெடன்னு ஏன் ஓடுறீங்க”

படுக்கையில்-
பக்கத்துல கிடக்கும் போது
கையக் கட்டிட்டு தூங்கு… எவனோ மாதிரி
தியேட்டர்ல பஸ்சுல
கோவில்ல
மாருல கை போடு
இப்படி
எந்த ஷணத்தில்
உன் நினைவில்லை
நீ என்
மனைவியில்லை யென்றாலும்.







58.
·         மாடி படிக்கட்டில்
குளியல் அறையில்
சமையல் அறையில்
மொட்டை மாடியில்

அதிகாலையில்
பட்டப்பகலில்
அந்திக்  கருக்கலில்
நள்ளிரவில்

ஆடையோடு
அரை நிர்வாணமாக
முழுநிர்வாணமாக
ஒருவரையொருவர்
போர்த்தி
மூடித்திறந்து

கண்டு
கைநழுவி

தேடித் தேடி
திரும்பத் தேடி
எப்
போகம்
வைபோகம்



45
·         கனவுகளில் வரும்
எல்லோரும்
பிரியமாகவே
இருக்கிறார்கள்

46.

மணல் நதி
எல்லா வயதினரையும்
எல்லா சாதியினரையும்
ஆண் பெண் பேதமின்றி
அத்தனை பேருடைய
அழுக்கைச் சுமந்தபடி
முன்பொரு நதி
ஓடிக் கொண்டிருந்தது

இளம் பிராயத்து
கனவுகளோடும்
ஜில்லென்று தழுவுகிற
நீரலையோடும்
காதல் அங்கே
கை வீசி நீந்துயது

குதித்து குதூகலிக்கிற
இளவட்டங்களின்
எக்காளமாய்
மனசுக்குள்


.
நிமிஷத்துக்கு நிமிஷம்
மனோரஞ்சிதங்கள்
பூத்துக்குலுங்க

எப்போதேனும்
மழைக்காலத்தில்
ஊறும் ஊற்றென
லாரிகள் வாரியது போக
ஊரார் விட்டு வைத்த
ஈரமற்ற மணற் பாலை
உன் ஓர்மை போல்
ஒரு நதி
ஓடிக் கொண்டிருந்ததை
நினைவு படுத்திக் கிடக்கும்
மணற் காடாய்…


45.

·         எல்லாவற்றை விட
ஆடை வாங்கித் தருவதென்பது
அன்பை இதயத்தோடு
ஒட்ட வைத்து விடுகிறது

உறவை
ஆடைகள் வாங்கித் தருவதன்
பெறுவதன் மூலம்
அங்கீகரிக்கிறோம்.

நிச்சயித்த பெண்ணுக்கு
பரிசப் புடவை தருவதே
வழக்கம்
இன்றும்
அந்த பத்திரிகை அதிபர்
ஒரே நேரத்தில்
அவருக்கு பிடித்ததாய்
நாலைந்து
எனக்குப் பிடித்ததாய்
ஒன்றிரண்டு
வாங்கி குவித்துவிடுவார்
வருஷத் தேவைக்கு



ஜோதிட நண்பர்
குடும்ப உறுப்பினர்
அணைவருக்கும் துணி மணி
தீபாவளி பொங்கலுக்கு

தவறாமல் வீடு தேடிவந்து
தருவார்

அந்தக் கிராமத்து
தொடர்கதையாளன்
விலைமதிப்பற்றதாய்
ஒரு சட்டையை
சட்டென தந்து
மகிழ்வித்தான்

பாடலாசிரியன் தந்தது
அவன் பச்சை மனசைக் காட்டுயது.

வீட்டார் தவிர்த்து
ஒரே ஒரு முறை
அந்த கலைஞனோடு
குவார்ட்டர் குடித்து
காதி வஸ்திராலயாவில்
கதர் வேட்டி ஜிப்பா
வாங்கித் தந்தது
காண்ட்ரஸ்ட்!
அந்தக் கவிதைக்காரி
தேர்ந்தெடுத்து தந்த சட்டையை
எல்லோரும் பாராட்டியபோதுதான் தெரிந்தது
அவளது ஆத்மார்த்த காதல்!

46.

நட்டவள் நீ தானே
·         வளர்ந்து
கிளைபரப்பி
வேர் பிடித்து
விழுது படர்ந்தபின்

வாசல் மறைக்கிறது
வழி தெரியவில்லையென
கோடாரி ஏந்துவது ஏன்?

விட்டுவிடு
விறகாக்காதே
எவர்க்கேனும் நிழலாய்
நினைவாய்
இருந்துவிட்டுப் போகட்டும்


47.
ருசிபேதம்
·         சாகும் வரை
அப்பாவுக்கு குறை உண்டு
அப்பத்தா மாதிரி
அம்மாவுக்கு
அவியல் செய்ய வரவில்லையென்று

கடனேயென்று மனைவிசெய்யும்
அவியலை உண்ணும் நானோ
அம்மாவின்
அவியல் கைப்பக்குவத்திற்கு
அடிமை
நேற்று
அம்மா செய்த அவியலை
ஆசையோடு உண்டு கொண்டிருந்தேன்

“அய்ய… நல்லாவே இல்ல
அம்மாதான் நல்லா செய்வா
இதுவேண்டாம்”
அலட்சியமாய் ஒதுக்கினான்
என் மகன்
அம்மா கை ருசி
பிள்ளை மட்டுமே அறியும்

48.
·         அருவிக்குளியல்
ஆசைக்காரனுக்கு
நகரம் தந்தது
பக்கெட் வாட்டர்
49.
எலி செத்த நாள்
·         இது வரை
ஒரே ஒரு எலியைக்கூட
அடித்ததில்லை

பிரியமான நண்பன்
வரிசை முகமது கொடுத்த
ஜப்பான் சில்க் சட்டை
கடிபட்டு
போட முடியாது
போன போதும் கூட

அரிசியை குறைச்சிருச்சு
அதக்கடிச்சிருச்சு
இதக்கடிச்சிருச்சென்று
அவளுக்கு எப்போதும்
எலிகள் மேல் புகாருண்டு

புது கிரைண்டரின்
ஓரம் ஓட்டிய
அரிசி எடுக்கப் புகுந்த
எலியொன்று
கரண்டடித்து
குடல் தெறிக்க
விழுந்து செத்துப்போய்
ராத் தூக்கம் கெடுத்தது
சமீபத்தில்…….
ராஜீவ் காந்தி கொலை நாளில்





49.
தேடுகிறேன்..

·         பாண்டவர் தாயாய்
பரிதவித்தவள்

திருதராஷ்ட்ரன் மனைவியாய்
கண்மூடிக் கொண்டவள்

கவுரவர் சபையில்
துகிலுரியப்பட்டவள்

ராமனின் சந்தேகத்தால்
அக்கினி பிரவேசித்தவள்

கவுதமன் சீற்றத்தால்
கல்லாய் சமைந்தவள்

தாயாய்  சகோதரியாய்
மனைவியாய்
மகளாய்
முகம் தந்து

முகம் தொலைத்தவளே

இந்த யுகத்தில்
எந்த டாட்காமில்
இருக்கும்
உன்பற்றிய
சிறு குறிப்பு




50..
·         அப்போதும்
இப்போதும் எப்போதும்
எனக்குள்
குறையாதிருப்பது
மதுவின் வசீகரமே

ஒவ்வொரு முறையும்
பட்டாம் பூச்சியாய்
வறட்டு நாட்களுக்கு
வண்ணம் பூசிய தேவதை
அவள்தான்

குடிக்காத போதும்
குறையவே இல்லை
அவள் மீதுள்ள காதல்!

கோப்பையை
காலியாக்கி வைத்து
காத்திருக்கிறேன்
இட்டு நிரப்பி
உயிர்ப்பி

51

·         தயராகி விட்டேன்
எதிர்கொள்ள

எந்தவிதம்
எந்த உருவில்
எப்போது
வந்தாலும்

கடைசிச் சொட்டு
மதுவைக் குடித்து
கோப்பையை
காலி பண்ணீவிட்டு
வருகிறேன்
அதுவரை சற்றே பொறு

52

·         எல்லா வண்ணமும்
பூச்சுத்தான்
இயல்பான
நிறம் தொலைத்தால்


53.
மேதினக் கடிதம்

·         டியர் காம்ரேட்
(பழக்க தோஷம்)

வர்க்கம்
சுரண்டல் என்றோம்

பெட்டி பூர்ஷ்வாக்கள்
பியூடலிஸ்டுகள்
என்றெல்லாம் பேசி
டீயோடு சார்மினார் ஊதினோம்

கடவுள் இல்லை என்றோம்
தமிழ்சினிமாவைக் கிண்டலடித்தோம்

கமர்ஷியல் பத்திரிகைகள் கண்டு
முகம் சுழித்து புறந்தள்ளினோம்

புரட்சிதான் விடியல் என்று
தெருநாடகம் போட்டோம்

ஊர் ஊராகச் சென்று
இரவெல்லாம் விவாதித்தோம்

நச்சு இலக்கியங்களை
நசுக்கப் புறப்பட்டோம்



புதிய கலச்சாரம்
சுமந்து திரிந்தோம்
கல்யாணமானது

மாமனார் வேண்டுதல் என்று
குலதெய்வம் கோவிலில்
குழந்தைகளுக்கு மொட்டைபோட்டோம்

பதவி உயர்வுக்காக
மனைவி நேர்ந்தாளென்று
நவக்கிரகம் வலம் வந்தோம்
பையன் அடம் பிடிப்பதாக
ரஜினிபடம் பார்தோம்

கொழுந்தியாளுக்கென்று
கமர்ஷியல் பத்திரிகை வாங்கினோம்

தவறாமல்
பட்டுக்கோட்டையார்
பாரதியார் விழாக்களில்
கலந்து கொண்டோம்

ஊர்த்தேரோட்டத்தின்போது கூடி
கலைப்படம்

முற்போக்கு நாடகம்
பேசிக் கொண்டோம்.



லஞ்சம் தவறென்றவர்களே
‘பணக்காரங்க கிட்டே
புடுங்கிறது தப்பில்லை’ என்றோம்

கூடுதல் போனசுக்காக
சங்கச் சந்தாவும் கட்டிவிடுகிறோம்

அப்போது போலில்லை
இப்போது
கலைவிழா கருத்தரங்கிற்கு
நிறையச் சேருது நிதி

வீட்டில்
சாமி படங்களோடு
ஓரமாய் மார்க்சும் லெனினும்
கணவான்களாய்
தொங்குகிறார்கள்.  



மனைவி மக்கள்
மிக்ஸி கிரைண்டர்
கலர் டி.விக் கிடையில்
தொலைத்து விட்ட
சித்தாந்தத்தை
இடிந்து போன
புரட்சி சிந்தனையை

எப்போதாவது
நினைவுபடுத்திக் கொண்டு

தூக்கம் தொலைத்தபடி
நலமாயிருப்பதாக
காட்டிக் கொள்கிறோம்
இத்தனைக்குப் பின்னும்
மேதின ஊர்வலத்தில்
‘இன்குலாப் ஜிந்தாபாத்’
சொல்லிப்போக
வெட்கமாயிருக்கிறது
எனக்கு
உனக்கு…..?
53.
சுடு மூச்சு
பெரு நெருப்பில்
தகிக்கின்றன உலைகள்

ஆகாயம் விட்டிறங்கிய
அருவிகளோ
தடமறியாமல்
தத்தளிக்கிண்றன
பாறைகளில் மோதி

ஏதேனும் ஒரு நதி வந்து
வேர் நனைக்குமென
காத்திருக்கின்றன
பூச்செடிகள்
கரையோரமாய்.

54.

ஒலிமிகு வாசலில்
அண்ணாந்த அலகுகள்

ரகசியங் கூறும்
ரத்தநாவுகள்

கருங்குலின் தனிப்பாடல்
அனாதித்தியரம்

நாசி துளைக்கும்
இனசனத்துயரம்
நாசி துளைக்கும்
இனசனங்களின்
ரத்த வாடையோடு

கலைக்கும்
கனவேந்திய கண்கள்

இருப்பில் இல்லாமலும்
இல்லாமையில் இருப்புமாய்

மறுகி கழியும்
இன்றுகள்
55.

 அருள் நிறைந்த
அம்மனுக்கும்
அலங்கரிக்க வேண்டும்
பூசாரி


56

·         கருப்பட்டி மிட்டாய்க்கு
பிள்ளை அழ

கைதட்டலிடையே
கரகாட்டக்காரிக்கு
ராசாத்தேவர் அன்பளிப்பு
நூத்தியோன்னு!

56..

·         ஏதேதோ
எதிர் பார்ப்போடு
எவரெவரோ

என்னை
உதறிக் காயப்போட
எங்குமில்லை
கொடி



57

·         மூன்றாம் முலையூறும்
உண்ணா முலை யம்மனுக்கு













58.

வனாந்தரங்களில்
பறந்து விரிந்த
கிளிக்குஞ்சொன்றுக்கு
வேட்டை பயமும்
தேடுதல் வேட்டையும் குறைய
நகர்ப்புற வீடொன்றில்
தஞ்சமடைந்தது

கூண்டினில்
வேளாவேலைக்கு
உணவும் நீரும் கிடைத்தது

வீட்டு எஜமானி
மம்மி சொல்லிக் கொடுத்தாள்
மம்மி சொன்னது
எஜமானர்
டாடி சொல்லிக் கொடுத்தாள்
டாடி சொன்னது
மகள் இடியட் சொல்ல
இடியட் சொன்னது

திசைமாறி காடுதப்பி வந்த
கிளியொன்று
கிக்கிக்கீ என்று அழைத்தபோது
பதிலற்றுத் தவித்தது

சொந்தமொழி மறந்து



59..

·         உனக்கும்
உன் நிழல் படத்துக்குமிடையே

உனக்கும்
உன் கடவுளுக்குமிடையே

உன் சொல்லுக்கும்
பொருளுக்குமிடையே

உருகி
நிற்கிறது கவிதை.

    
                




                  மேலேழும் பயணம்
 
வித்யாஷங்கரின் அகவெளி  நினைவுகளின் ஒலி கவிதையாக குரலெழுப்புகிறது- இந்த ஒலிகள் எழுட்பும் குரல் ஆழ்ந்த அடையாளச் சிக்கல் பற்றியது. சமூகம் கலை இலக்கியம் ஆன்மீகம் இவற்றில் இவரது அடையாள சத்யம் ஒன்று. அணிந்து கொண்டிருக்கிற அடையாளம் வேறொன்று. போக வேண்டிய பாதை ஒன்று. போடப்பட்டிருக்கிற பாதை வேறொன்று. உள்ளே பறப்பதற்க்கு சிறகுகள் வெளியே கால்க்ளுக்கு தண்டவாளங்கள் – மனித வாழ்வில் எழும் இந்த் அடையாளச் சிக்கல்களுக்கு முடிச்சவிழவிக்கம் இழைகள் அகவெளி ஒலிகள் – இந்த ஒலிகள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஒலிகளைக் கேட்பதும் இந்த் ஒலியிழைகளைப் பிரித்து உணர்வொழிங்கமைந்த குரலாக்குபவன் கவிஞன் – எதிலும் சாராமல் இந்த் குரல் எழும்புதல் ஜெபமகும் – சார்ந்திழைந்தால் புலம்பலாகும் – ஜெபம் மேலெழும் பயணம் – புலம்பல் உள்ளிழுக்கம் சுழல் – கவிதை ஜெபமாவதற்க்கும் புலம்பலாவதற்க்கும் எங்கிருந்து எப்படிப்பார்க்கப்படுகிறது என்பதே காரணமாகிறது. தனனைத் தெரிய முடியும். இந்த் சாட்சி மனோபாவத்தில் மிதிர்ந்த மனப் பண்பில் இவரது கவிதைகள் வந்திருக்கின்றன.
   
     நினைவுகளுக்கும் நினைவுப் பதிவுகளுக்கிமிடையே ஒரு தொலைவை ஏறபடுத்தி அந்த வெளியில் ( Space ) ஒரு காலத்தை உருவாக்கி கவிதை ஆக்கியிக்கிறார். அந்தப் பரப்பில் தன்னை Subjective ஆக முன்னிறுத்தி தன்னிரக்கம், தன் தாகம், தன் தொல்வி பாவம் என்று சுழல்களில் சிக்கி விடாமல், புலம்பல் ஒலியில்லாமல் ‘ஒரு Voice’ என்று ஜெபரூப வெளியில் பிரவேசிக்கிறார்- The pain of suffering இல்லை இவர் கவிதைகளில்.  The suffering of the pain தான் தெரிகிறது. இது ஒரு முதிர்ந்த மனோபாவம் – மனிதன் தளத்திலிருந்து புத்தியின் தள்த்திற்க்குச் செல்லிம் முத்ல் வரியில்.
     
      ‘கல் மண்டபத்துக் கிளிகள்’ அருமையான கவிதை காய்கனி தின்பது கற்றில் அலைவதும் கிளியின் சிய தன்மை. சந்நதி சேர்வதும் சாமி பார்ப்பதும் கிளிக்கு ப்ர தன்மை – சுய தன்மை விட்டு பரதன்மையில் சிக்கிய கிளி, பறக்க மறந்து கற்களில் மோதி ரத்தம் கசிய சுற்றி வருகிறது கல்மண்டபதில்….
 
      பல தளங்களில் விரியும் Metaphor ஆகிறது இந்த்க் ‘கல் மண்டபத்துக் கிளிகள்’ கவிதை, கிளி, மனிதன் Metaphor. அடையாளச் சிக்கல் அதன் வேதனை. அந்த வேதனையின் வ்லி பற்றி இங்கே பேசவில்லை. வலியின் வேதனையே குரலாயிருக்கிறது. வலி புறப்பரப்பில் நிகழும். வேதனை அகப் பரப்பில் ஆழத்தில் வாழும். வலி சம்பவம். வேதனை அனிபவம் – வேத(ம்) என்ற வேர் வார்த்தையிலிருந்து வேதனை என்ற வேதம் என்றால் ஞானமென்று பொருளுண்டு. வேதனை என்ற குழலில் ஞானத்தின் ஸ்வரங்கள்.

       கற்களில் மோதி
        ரத்தம் கசிய
   கிளியின் வலியைப் பதிவு சிய்யும் வரிகள். அடித்த
       சுற்றி வருகின்றன
        கல் மண்டபத்தில்
   இந்த் இரண்டு வரிகள் Condition முன்னிரண்டு வரிகளின் வலியின் நிகழ்வை  வேதனை என்னும் அகப்பரப்பில் செலுத்துகிறது பின்னிரண்டு வரிகள்-
     “கிளிகள்”  இந்த்க் கடைசிச் சொல் இலக்கை விட்டிலும் இன்னும் இருப்பை ‘கிளி’ என்னும் அடையாளத்தை வெளிப்படுத்தும் பிரகடனமாகிறது – கவிதையாகிறது – வனாநதரங்களில்’ என்றொரு சொந்த மொழி மறந்த கிளியும் நல்ல கவிதையாயிருக்கிறது – இதுவும் அடையாளச் சிக்கல் பற்றியதே – அது பர தன்னையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட கிளி – இது பர தன்மை திணிக்கப்பட்ட கிளி- அதன் விடுதலைக்கு தாழ் உள்ளே – இதன் விடுதலைக்கு தாழ் வெளியே – ஒரு சில கவிதைகள் தவிர மற்றெல்லாக் கவிதைகளும் நிகழ்வுகளும் இவரது இருப்பின் அடையாள ஒளித்துகள் தெறித்துக் கிடக்கின்றன்.
  
    உருவ அமைதியும் உள்தாளமும் நேர்த்தியாக வந்திருக்கின்றன. ஆரவாரம் ஆர்பாட்டம் அறவே இலலை- சொற்சிக்கனம் சிறப்பு. மொழியின் வளமும் லாவகமும் “கல்நீலி”யில் உச்சம். Images பளீர் பளீரென பரவசம் – (உ-ம்) “தலை துண்டிக்கப்பட்ட/புத்தன் சிலை/படிக்கட்டில் கிடக்கிறது/பிள்ளையார் கோயிலில்” அபத்தச் சூழல் விவரிப்பில் ஆழமான அங்கதம்  - ”எலி செத்த நாள்” Metaphor கவிதையில் – (எலி ஏதோ ஒரு அரசியல் தலையின் Metaphor) எலி என்ற இடத்தில் தலைவர் என்று போட்டுப் பார்த்து சிரிப்பை அடக்க முடிகிறதா பாருங்கள்.
  ஸ்ரேயான் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வனுஷ்டிதாத்
   ஸ்வதர்மே நிதினம் ஸ்ரேய: பரதர்மோ பயாவஹ:
                                                    கீதை 3 – 35

    சிறப்பாகச் செய்யப்பட்ட அந்நிய தர்மத்தை விட, குறைபட்டதாகினும் சுயதர்மம் உத்தமம். சுயதர்மத்தில் அழிவது கூட சிறப்பு – அந்நிய தர்மம் பயங்கரம் தரக் கூடியது .
  எதைச் செய்தால் மலருவோமோ அது குணதர்மம்
  எதைச் செய்தால் குணதர்மம் மலருமோ அது கலாதர்மம்.
                                         கே. ராஜேஷ்வர்
    01/01/2001                                 திரைப்பட இயக்குநர்             



No comments:

Post a Comment