Monday, April 5, 2010

பொங்கல்

* கோவில் முன்
  கொதிக்கும் பொங்கல் பானைக்குள்
  குமருகளின் மனசும் கனவும்

* தாவணி இழுத்த பருத்திமாரை
   வெட்கத்தோடு பார்ப்பாள்
  முதிர் கன்னி

* பத்தாம் வருசமாக ஆடவந்த
  ஆட்டக்காரிக்கு
  பரிசு பணம் குறைச்சல்

* விருந்தாளி போதையும்
  வீட்டுக்காரர் போதையும்
  தெருப் போதையுமாய்
  சண்டையும் ஜல்லியுமாய்
  கழியும் பொங்கல்

* தீப்பந்த ஜ்வாலை நாக்குகளில்
  மூதாதையரின் துடிப்பும் வீரமும்
  சுடர்விட உருட்டிய விழிகளுக்குள்
  வம்சாவளி ரத்தம் சிவக்க
  ஜண்டையொழிக்க
  வல்லயம் கலகலக்க சுடுகாட்டு அழைப்பேற்று
  குதித்தோடும் கருப்ப சாமியாடிக்கு
  ரெண்டாந்தாரம் வாக்கப்பட்ட
  ரத்னா பயப்படுவதேயில்லையாம்
  ஊரில் பேச்சு

* வெயிலின் உக்கிரத்தில் அக்னி ஜ்வாலையில்
  தீச்சட்டியேந்தி காணிக்கைகேட்டு வருகிறாள் காளி

  பீதியூட்டும் உறுமி முழங்க நள்ளிரவில்
  காற்றை கீறி சுடுகாடு எகுகிறார் கருப்பசாமி தீபந்ததொடு

  கர்ப்பிணி பெண்களுக்கும் கன்னி பெண்களுக்கும் விலக்காக
  குலவையிட்டு காத்திருக்கிறார்கள்
  தாய்மார்கள் அருள் கேட்க

  சாப்ட்வேர் உத்தியோகத்தில் விடுமுறைக்கு
  வந்த பெண்கள் செல்போனில் கதைக்கிறார்கள் மணிக்கணக்கில்
 சாமக்கொடையின் பதட்டமின்றி
                                                                --- வித்யாஷங்கர்

No comments:

Post a Comment