* கேட்டலின் வசியம்
வாசித்தலாகி
வாசித்தல்
வார்த்தைகளை
குமிழவிட்டது
* வார்த்தைகளின்
வசீகரம்
வாழ்வை
வார்த்தைப்படுத்தியது
* வார்த்தைகள்
டீ, சிகரட்டாக
உணவு உபசரிப்பாகி
உற்சாகமூட்டியது
* வார்த்தை
வாழ்வாதாரமானதும்
குரூரம் துடிகொண்டது
* வேட்டை நாயாய்
யார் யாரையோ
எதற்கோ குதறியது
* சூடான சுவையான
வார்த்தைகள்
படுவேகமாக
விற்றுத்தீர்ந்தன
* இன்னும் வேகம்
இன்னும் விறுவிறுப்பென்று
உசுப்பேத்தினர்
உற்பத்தியாளர்கள்
* குப்பி குப்பிகளாக குடித்து
இவன் புதிது புதிதாக
வார்த்தைகளை சேகரித்து
வாசகர்களை சேர்த்தான்
* வார்த்தை
இவனது ஒவ்வொரு வேலை
உணவானது
இவனது ஒவ்வொரு நாள் தாகம் தீர்க்கும்
மதுவானது
* வார்த்தைகள்
சிநேகத்தை தந்தது
வார்த்தைகள்
விரோதத்தை தந்தது
வார்த்தைகள்
காமம் வளர்த்தது
வார்த்தைகள்
கள்ள உறவுகள் தந்தது
* வார்த்தைகள்
பணம் தந்தது
வார்த்தைகள்
சலிப்பு தந்தது
வார்த்தைகள்
வலி தந்தது
வார்த்தைகள்
வலிமை தந்தது
* இத்தனையையும்
வார்த்தைகள் அற்று
சொல்லமுடியாமல்
தவிக்கின்றான்
பத்மவியுக அபிமன்யுவாய்...
- வித்யா ஷங்கர்
No comments:
Post a Comment