Thursday, January 27, 2011

மக்களின் பசியையும் சாவையும் அழைத்து


என் மனதில் ஒரு பயம் இருக்கிறது. அது பயிற்றப்பட்ட பயம். நான் ஒரு பெண் என்பதை எனது ஞாபகத்திலிருந்து எவ்விதம் அகற்ற முடியாதோ, அவ்விதமாக நான் ஒரு இரண்டாந்தரப் பிரஜை என்பதும் அகற்றப்படவியலாத விதத்தில் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. அன்றேல் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இருந்த காலங்களில் வெளியே செல்வதற்கு முன் எனது அடையாள அட்டை கைப்பையில் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. (இல்லை என்று கண்டபோதில் எத்தனை தூரமாக இருந்தபோதும் பதட்டத்தோடு மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்து எடுத்துச் சென்றிருக்கிறேன்.) மேலும், அன்றைய நாள் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்திருக்கவில்லை என்பதை வானொலியில் ஒலிபரப்பப்படும் தணிக்கைக்குட்படுத்தப்பட்ட செய்திகளிலிருந்து நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாட்களும் நகரத்தினுள் நுழைய தன் முன்பாக குண்டுச் சத்தங்கள் கேட்கின்றனவா? இராணுவம் வழிமறித்து சோதனை செய்கின்றதா? என்று விசாரித்து முன்னெச்சரிக்கையுடன் கிளம்பவேண்டியிருந்தது. சில சமயங்களில் மிக அதிகாலையில் நாங்கள் எழுந்திருப்பதன் முன்னதாகவே இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும். பயங்கரவாதிகளை வடிகட்டுவதற்கு இலகுவாக கோயில்களுக்கோ, தேவாலயங்களுக்கோ அனறேல் ஊரின் முக்கியமான சந்திக்கோ நாங்கள் துப்பாக்கிகளால் செலுத்தப்படுவோம். இராணுவத்தினர் விரும்பியபடி சோதனை செய்யப்படுவதற்கும் கைது செய்து கொண்டு செல்லப்படுவதற்கும் உரியவர்களாக நாங்கள் இருந்தோம். இந்த பூமியில் மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் பொதுவான அடிப்படை உரிமைகள் இருக்கின்றன என்பது, சாதாரண மக்களாகிய எங்கள் புத்தியிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. காலை விடிவது எவ்வளவு இயல்பானதோ அத்தகைய இயல்பானதாயிருந்தது அடிமைகளாக வாழ்வதும்.

பயங்கரவாத ஓழிப்பு என்ற பெயரில் அதிகாரங்கள் கூட்டிணைந்து பாரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு விடுதலைப் புலிகள் மற்றும் மக்களில் கணிசமானவர்களைக் கொன்றழித்ததன் பிற்பாடு அந்தப் பயத்தின் அடர்த்தி அதிகரித்திருக்கிறது. எங்கள் இரத்த அணுக்களில் ஆதிக்கமானது துப்பாக்கி வழியாக பயத்தைச் செலுத்திவிட்டிருக்கிறது. புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் (அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களும், தோன்றியவர்களும், பேசியவர்களும், எழுதியவர்களும்) இலங்கைக்குச் செல்வதன் முன்பாக அங்கு தாங்கள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்களைக் குறித்து அச்சத்தோடு யோசிக்க வேண்டியிருக்கிறது. மேலும், விடுதலை தொடர்பான புத்தகங்களை இலங்கைக்கு எடுத்துச் செல்வதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் யோசிக்கிறார்கள். கணினியிலிருக்கும் பயங்கரவாதம் தொடர்பான கட்டுரைகளையும் புகைப்படங்களையும் அழித்துவிடும் படி நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள். எங்களது தலையெழுத்து ஆயுதம் தாங்கிய இன்னொருவரின் கைகளில் சிறிய அட்டை வடிவில் இருப்பதை நாங்கள் எத்தனை இயல்பாக ஏற்றுக்கொள்கிறோம்.

நான் நிமிர்ந்து பார்க்கிறேன். அவர்களுக்கு மூன்று கால்களோ கைகளோ இல்லை. ஆனால், கைகளில் இருக்கும் துப்பாக்கி ஒரு ஒளிவட்டத்தைத் தலைக்குப் பின்னால் சூழல விட்டுவிடுகிறது. என்னைச் சோதனை செய்ய உனக்கு அனுமதியில்லை என்று சில சமயங்களில் கூச்சலிட விரும்புகிறேன். ஆனாலும் நாங்கள் விரும்புவதைச் செய்வதற்கு எந்தக் காலத்திலும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

எங்களுடைய வாழ்விடத்தை, கலாசாரத்தை, மொழியை, தொழிலை, தூக்கத்தை, படிப்பை, நாட்களை, பயணங்களை... சகலமானவற்றையும் அதிகாரங்களே இது நாள் வரை தீர்மானித்து வந்திருக்கின்றன. நான் ஒரு நாயை வளர்க்க விரும்புகிறேனெனில், பல விடயங்களைக் குறித்து முன்யோசிக்க வேண்டியிருக்கிறது. இலங்கை போன்றதொரு நாட்டில் நாய் வளர்ப்பது என்பது மீந்துவிட்ட சோறு, மாமிசத்தோடும் ஒரு துண்டுக் கயிற்றோடும் மட்டும் தொடர்புடையதன்று. பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லின் மீதேறி அவர்களால் எங்களது படுக்கையறைக்குள் பிரவேசித்துவிட முடியும். எங்களது குளியலறைக்குள் எட்டிப் பார்க்கவும் முடியும். ஒரு பெண்ணின் மார்பகத்தை அழுத்திப் பார்த்து அது மார்புதானா அன்றேல் குண்டா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அவளது உடலினுள் தங்களது வெறியை ஊற்றுவதற்கும், தடயங்களை அழிப்பதற்காக அவளைக் கொன்றுவிடவும் கூட அனுமதியுண்டு. ஒருநாள் எனது தாயார் மதிய சமையலுக்காக மீனை வெட்டிக் கொண்டிருந்த போது இராணுவம் வீட்டைச் சுற்றி வளைத்தது. கைகளை உயர்த்தும்படி நாங்கள் கட்டளையிடப்பட்டோம். வெள்ளி மீன் வெயில் பட்டு மேலும் பளபளக்க அம்மா கைகளை உயர்த்திக் கொண்டிருந்தார். இராணுவத்தினர் சோதனைகளை முடித்துக் கொண்டு போனபிற்பாடு, அப்போது சிறுபிள்ளைகளாக இருந்த நானும் என் சகோதரர்களும் அந்தக் காட்சியைக் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டோம்.

இந்திய இராணுவத்தினரது ஆக்கிரமிப்புக் காலத்தில் அகதிகளாக கோயிலொன்றில் இருந்தவேளை கைகளை உயர்த்தியபடி வரிசையாகப் போக வேண்டியிருந்த போது அவமானத்தில் குறுகிக் போனோம். அப்போது நாங்கள் வளர்ந்து விட்டிருந்தோம். கழிவிரக்கத்தைத் தூண்டுவதற்காக இதை நான் எழுதவில்லை. நாங்கள் எவ்விதம் அடிமைகளாகச் சீவித்திருந்தோம்; இருக்கிறோம்; எங்கள் புத்தியில் அந்த எண்ணம் எப்படி ஆணிபோல அறையப்பட்டிருந்தது என்பதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

தற்போது சிங்கள மொழியில் மட்டுமே இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட வேண்டும்; தமிழ்ப் பதிப்பை நீக்கிவிட வேண்டும்; என்ற தீர்மானம் பாராளுமன்றத்தில் முன் மொழியப்பட்டிருக்கிறது. என்றைக்கும் உச்சரித்து அறியாத ஒரு மொழியில், நாங்களும் எங்கள் பிள்ளைகளும் வரிசையாக நின்று தேசிய கீதம் பாடும் காட்சி தோன்றி மறைந்தது. அந்தக் காட்சி அபத்தத்திலும் அபத்தமாக, கேவலத்திலும் கேவலமாக, இழிவிலும் இழிவாகத் தோன்றியது. நமோ நமோ மாத்தா என்று மீட்கப்பட்ட தமிழர்கள் பாடும் குரல் முள்வேலி முகாம்களிலிருந்து ஏற்கெனவே கேட்டுக் கொண்டிருக்கிறது. முள்வேலி முகாம்களுக்கு வெளியில் நெடுங்கயிற்றில் விடப்பட்டிருக்கும் தமிழர்களும் அவர்தம் பிள்ளைகளும் அவ்விதமே பாடவேண்டும் என்ற விபரீத ஆசையின் உள்ளுறைந்திருக்கும் இனவாதத்தின் மீது காறியுமிழத் தோன்றுகிறது. ஐக்கிய இலங்கையை துப்பாக்கிகளால் ஒருங்கிணைத்துவிட முடியும் என்பதில் இருக்கக்கூடிய அதீத நம்பிக்கையின் உபகூறுகளில் ஒன்றாகவே தேசிய கீதச் சட்டத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

மொழியானது சமூகக் கட்டமைப்பின் முதன்மைக் கூறுகளில் ஒன்றாகும். 1956இல் சிங்களம் மட்டும் சட்டம் அறிவிக்கப்பட்டதும் அதனை எதிர்த்து தமிழர்கள் போராடியதும் துப்பாக்கிக் கட்டைகளால் அடிவாங்கியதும் அறிந்த கதைகளே. ஆக, காலங்காலமாக மொழித் திணிப்பு என்பதில் பேரினவாதிகள் முனைப்பாகவே இருந்து வந்திருக்கிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுக்கு ஆறாம் அறிவு வேண்டியதில்லை என்பதை யாழ். பொது நூலகத்தை எரித்ததன் வழியாக அவர்கள் உலகத்திற்கு உணர்த்தினார்கள். பயங்கரவாதத்தை நாங்கள் எப்படித் தோற்கடித்தோம் என்று அண்மைய காலங்களில் இலங்கை அரச தரப்பு உலகெங்கிலும் பேசி வருவது போன்று அர்த்தபூர்வமானது அந்த அறிவு எரிப்பு தமிழர்கள் வந்தேறி குடிகள் என்று மகாவம்சம் சொல்கிறது. இது சிங்களவர்களின் நாடு என்று அரசதரப்பு சொல்கிறது. பௌத்தமே முதன்மை மற்றும் சிறப்புச் சமயம் என்று இலங்கையின் சட்டம் சொல்கிறது. விஜயனின் வருகைக்கு முன் இலங்கையில் நாகரிகமடைந்த மக்கள் சமுதாயம் இருக்கவில்லை என்று இனவாதத்தை ஆதரிக்கும் எழுத்துக்களும் சிங்களவர்களும் அப்போதும் இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அநேக நாடுகளின் வரலாறுகளில் சுதேசிகள் காட்டுமிராண்டிகளாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். வந்தேறி குடியேறிகளால் சுதேசிகளுக்கு நாகரிகம் கற்பிக்கப்பட்டதென்றே வென்றவர்களின் வரலாறுகள் அழுத்தமாக எழுதி வைத்திருக்கின்றன.

ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை கையகப்படுத்திச் சுரண்டிய மேற்கத்தேய நாடுகள், தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் வாழ்ந்த பூர்வீக மக்களின் மொழியைப் புறந்தள்ளி, குடியேறிகளாகிய தங்களது மொழியைத் திணிப்பதில் மும்முரமாக இருந்தன. பூர்வீக மக்களின் தனித்துவமான பண்பாட்டைச் சிதைத்ததன் வழியாக தங்கள் பொருளாதார ஆதிக்க நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டன. அல்ஜீரியாவில் பிரான்சியர்களும், கென்யாவில் ஆங்கிலேயர்களும் செய்தது இதைத் தான். நாகரிக மனிதர்களாகிய எங்களது மொழிக்கு நீங்கள் மாறிவிடுவதன் வழியாக காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மீட்சியடைகிறீர்கள் என அவை போதித்தன. அடையாள மீட்பு காலனிய ஒர்மை அகற்றல் (தமிழில் அ.மங்கை) என்ற நூலில் கூகி வா தியாங்கோ இந்தத் திட்டமிடப்பட்ட அடையாள அகற்றலைப் பற்றிப் பேசியிருக்கிறார். காலனியாதிக்கத்திற்கு எதிரான கருத்துக்களை விதைத்த சினுவா ஆச்சுபே, கூகி வா தியாங்கோ, பீட்டர் ஆப்ரஹாம்ஸ் ஆகியோரும் ஆரம்பத்தில் குடியேறிகளின் நாகரிக மொழியில் எழுதத் தொடங்கியவர்களே 1979இல் வெளியிடப்பட்ட சிலுவையில் தொங்கும் சாத்தான் (தமிழாக்கம்: அமரந்த்தா, சிங்கராயர்) என்ற நாவலுக்குப் பிறகு கூகி வா தியாங்கோ தனது படைப்புகளை தாய்மொழியாகிய கிக்கூயூ மொழியிலேயே எழுதினார். அவர் சொல்கிறார்.

மக்களது மொழியில் புரட்சிகர ஒற்றுமை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் படைப்பாளி நிலைகுலைவுப் பண்பு கொண்டவராகக் கருதப்படுகிறார். எனவே, ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது குற்றமாகிறது; தண்டனைக்குரியதாகிறது. அந்த எழுத்தாளர் சிறைவாசம், நாடு கடத்தல், மரணம் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியதாகிறது. அவருக்கு தேசிய விருதுகள் இல்லை. புத்தாண்டு மரியாதைகள் இல்லை. ஆனால், வசவுகளும் அவதூறுகளும் அள்ளி வீசப்படும். ஆளும் சிறுபான்மை இராணுவ சக்திகளின் எண்ணற்ற பொய்கள் அவர்கள் மீது சுமத்தப்படும்.

ஓடுக்கப்பட்டவர்கள்; விடுதலையின் வடிவங்கள் என்ற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில் சார்த்தர் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

காலனிகளில் வன்முறையானது அடிமைப்படுத்தப்பட்ட மனிதர்களை எட்ட நிற்க வைப்பதை மட்டும் தனது நோக்கமாகக் கொள்ளவில்லை; அது அவர்களை மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்க முனைகிறது. அவர்களது மரபுகளை அழிப்பதற்கும், அவர்களது மொழிக்குப் பதிலாக நமது மொழியை நிறத்துவதற்கும், நமது பண்பாட்டை அவர்களுக்குத் தராமல் அவர்கள் பண்பாட்டை அழிப்பதற்கும் தேவையான அனைத்தும் செய்யப்படும்.

ஒடுக்குபவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறவர்கள் விடயத்தில் வரலாறானது எல்லா இடங்களிலும் ஒன்றை மற்றொன்று பிரதி செய்தாற்போலவே தோன்றுகிறது.

தார்மீகப் பண்பும் அறச்சீற்றமும் மிக்க படைப்பாளிகள் ஊடகவியலாளர்கள் எல்லாக் காலங்களிலும் அதிகாரங்களுக்கு எதிராக பேசியும், எழுதியும் இயங்கியும் வந்திருக்கிறார்கள். அதிகாரங்களின் தீராத தலைவலி அத்தகையோரே. மாறாக அற்ப சலுகைகளுக்காக கோவணத்தை உருவி இடுப்பில் கட்டிக்கொண்டு அதிகாரங்களின் முன் குழைந்து நெளிகிற கவிப் பேரரசர்களும் இல்லாமலில்லை. எந்த மொழி அவர்களை ஏணியில் ஏற்றிவிட்டதோ, அந்த மொழியை அழிவுக்கு எடுத்துச் செல்கிறவர்களைக் குறித்து ஒரு விமர்சனங்களும் இல்லை. இந்நாட்களில், அதிகாரத்தின் பகட்டொளியில் மினுங்கும் இலக்கிய மேடைகளுக்கும் குறைவில்லை. அத்தகையோருக்கு வேண்டியதெல்லாம் ஆள்பவர்களைப் புகழ்ந்துரைப்பதன் வழியாகக் கிடைக்கும் அற்பச் சலுகைகளே. உண்மையைப் பேசும் நாக்குகளை அறுத்து எறியுங்கள். உண்மையை எழுதும் விரல்களைத் துண்டித்து விடுங்கள், என்பதே ஆக்கிரமிப்பு அரசுகளின் எழுதா வேதமாக இருந்து வந்திருக்கிறது. திசநாயகம், நிமலராஜன், நடேசன், என்.சிவராம், லசந்த விக்கிரமதுங்க, அனுரா பிரியந்த், சுகிர்தராஜன், புண்ணிய மூர்த்தி, சத்தியமூர்த்தி, றஷ்மி மொஹமட், தேவராஜன் என உண்மையை எழுதியமைக்காகக் கொல்லப்பட்டவர்களின், சிறையில் அடைக்கப்பட்டவர்களின் பட்டியல் (இலங்கையில்) நீளமானது. அண்மையில் சானல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட, ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் சிதைந்த பாலியல் வதை செய்யப்பட்டமைக்கான அடையாளங்களைக் கொண்ட, நிர்வாணமான உடல் அரசதிகாரத்தின் ஊடக தர்மத்தில் வெளிச்சம் பாய்ச்சியிருந்தது. கடந்த ஒரு தசாப்த காலத்தில் மட்டும் இலங்கையில் 24 ஊடகவியலாளர்கள் உண்மை பேசியமைக்காகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மேலும், பலர் நாட்டிலிருந்து தப்பியோடியிருக்கிறார்கள்.

ஃபின்õஸ் ஃபனானின் ஒடுக்கப்பட்டவர்கள்: விடுதலையின் வடிவங்கள் சினுவா ஆச்சுபேயின் சிதைவுகள் , அலெக்ஸ் ஹெய்லியின் வேர்கள் ஆகிய படைப்புகள் ஒரு மண்ணின் மக்கள் தமது தனித்துவமான அடையாளங்களிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களால் எவ்விதம் அடையாள நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆப்பிரிக்காவில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மக்களை மிருகங்களைப் போல விரட்டிப்பிடித்து அவர்களது கழுத்துகளில் வளையங்களையும் கால்களில் சங்கிலிகளையும் மாட்டி கூண்டுகளில் அடைத்து அமெரிக்காவின் பண்ணைகளிலும் கொழுத்த வெள்ளைத் தோல் கொண்ட எசமானர்களின் வீடுகளிலும் ஒய்வொழிவு கொடுக்காமல் உழைப்பைக் கறந்த காலனித்துவ வாதிகளிலிருந்து இருபத்தோராம் நூற்றாண்டின் ஆக்கிரமிப்பாளர்கள் எந்தவகையில் முன்னேறி விட்டிருக்கிறார்கள்? கட்டாய உழைப்பிலிருந்து தப்பியோடிய குற்றத்திற்காக உயரத்தில் தொங்கவிடப்பட்டு தசை கிழியும் படியாக சவுக்கினால் விளாறப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாகத் தொங்கவிடப்பட்ட கறுப்புக் காலங்களிலிருந்து நாகரிக மனிதர்கள் என்று பீற்றிக்கொள்கிற நாம் எத்தனை தப்படிகள் முன்னேறியிருக்கிறோம்?

பதுங்கு குழிகளினுள் உயிரோடு புதைக்கப்பட்ட மூச்சுக்காகத் திணறியவர்களின் கடைசிக் கணங்களைப் பற்றி நாம் மறந்துவிடலாம். தசை, எலும்பு, குருதி எனத் தனித்தனியாகப் பிரிந்து கிடந்த குழந்தைகளை மறந்துவிடலாம். தடுப்பு முகாம்களிலிருந்து விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு மாதக் கணக்காக இராணுவத்தினரின் கூட்டுப் பாலியல் வக்கிரங்களுக்குப் பலியாகி மக்கி மடிந்த பெண்களை மறந்துவிடலாம். எங்கள் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்றாவது சொல்லுங்கள் என்ற கோரிக்கையுடன் தத்தம் பிள்ளைகளின், சகோதரர்களின், கணவர்களின் புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி கண்ணீர் வழிய நின்று கொண்டிருக்கும் காணாமல் போனவர்களின் உறவினர்களை மறந்துவிடலாம். ஐயா பசிக்குது எனத் தெருக்களில் கையேந்தும் மழலைகளது காய்ந்து கறுத்த முகங்களை மறந்துவிடலாம். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தெருக்களில் படுத்துறங்கும் மக்களை மறந்துவிடலாம். தமது எதேச்சாதிகாரத்தினால் ஜனநாயகம் என்ற சொல்லை அகராதியில் மட்டும் விட்டு வைத்திருக்கிற அதிகாரங்களை மறந்து விடலாம். மக்களது வரிப் பணத்தை தமக்காகவும் தமது அடுத்தடுத்த தலைமுறைகளுக்காகவும் சுருட்டிக் கொண்டிருக்கும் ஊழல் முதலைகளை மறந்துவிடலாம்.

அடுத்த தேர்தல் வருகிறது. சுவரொட்டிகளில் சிரிக்கும் முகங்களுக்கருகில் வாக்குறுதிகளும் சிரிக்கத் தொடங்கிவிட்டன. அரிசிக்காகவும், தொலைக்காட்சிப் பெட்டிக்காகவும், சேலை வேட்டிக்காகவும், உறைகளில் வைத்து இரகசியமாகக் கையளிக்கப்படும் ரூபாய் நோட்டுக்காகவும் நாம் மனிதர்கள் என்பதை ஞாபகமாக மறந்துவிடலாம்.

கைவிடப்பட்டவர்களிடம் பசியையும் சாவையும் அழைத்து வருவன துப்பாக்கிகள் மட்டுந்தானா?

அதிகார சாத்தான்களும்

அவர் தம் வேதங்களும்

ஜனவரி அம்ருதா இதழில் தமிழ்நதி எழுதியுள்ள அதிகாரச் சாத்தான்களும் அவர்தம் வேதங்களும் கட்டுரை மனதை உலுக்கியது. தமிழர்கள் நம் தொப்புள் கொடி உறவுகள் இலங்கையில் பட்ட கஷ்டங்களை கூடுதல் குறைவில்லாமல் இயல்பாக எழுதியிருக்கிறார்.

பதுங்கு குழிகளினுள்

உயிரோடு புதைக்கப்பட்டு

மூச்சுக்காக திணறியவர்களின்

கடைசிக் கணங்களைப் பற்றி

நாம் மறந்து விடலாம் என்று தொடங்கி

அவர் அடுக்குகிற மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானமுள்ள யஎவராலும் மறக்க முடியாத கொடுமைகள்.

கடைசி வரிகளாக அவர் முன்வைக்கும் கேள்வி மனித குலத்தின் மனசாட்டியை உலுக்குபவை

கைவிடப்பட்டவர்களிடம் பசியையும் சாவையும் அழைத்து வருவன துப்பாக்கிகள் மட்டுந்தானா?

இனி படியுங்கள்....

துரை















Wednesday, January 26, 2011

தனியன்......





முன்பின்

அறிமுகமில்லை தான்

ஆனாலும் அவரது

பேச்சின் வசீகரத்தில்

தூரம் தொலைந்து போனது



அவரது ஊர் வந்ததும்

அவர் இறங்கிவிட்டார்

அவ்வளவு பயணிகளை

சுமந்து செல்லும் ரயிலில்



சட்டென

தனியானானேன்



இப்படித்தான்

பணி நிமித்தமாக

வசதி வாய்ப்பால்

பலரும் பிரிகிறார்கள்



எப்போதும்

என்னை

தனியனாக்கி.......

வித்யாஷங்கர்



ஊனம்



நகரின்

பிரதானச் சாலையில்

இருப்பார்

இரு காலும் ஊனமுற்றவர்



அவர் முன் துணியொன்று

விரித்துக் கிடக்கும்

சில்லரைகளோடு



எப்போதேனும்

அவரைக் கடக்கும்போது

சில்லரை இல்லாதபோது

குற்றவுணர்வோடு

பார்வையைச் செலுத்தி

நடப்பேன்



அவரிடமும் ஒரு

போலீஸ்கார புண்ணியவான்

மாமூல் வாங்கிச் செல்வதை

பார்த்த பின்

அவராக இல்லாதிருப்பதில்

ஆறுதலடைந்தேன்.

வித்யாஷங்கர்

Wednesday, January 12, 2011

ஈரம் காய்தலுக்கான அவசியம் ஒரு புத்தக மதிப்புரை

“கவிதை புத்தகங்கள் தான் சரியா போறதில்லை” என்று தொலைக்காட்சியொன்றில் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஸ்டால் வைத்திருக்கும் பெண்ணொருவர் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்.

இன்னொருபுறம் ஏகப்பட்ட புத்தக வெளியீட்டு விழாக்கள் ஏதோ ஜனவரிக்குப்பின் புத்தகமே எழுதமாட்டார்கள் என்பது போல ஒரே களேபரம்.

தெரிந்த பதிப்பக நண்பர்கள் கூட எழுதிக் கேட்கும் போதே “கவிதை தொகுப்பு வேண்டாமே சிறுகதை வேண்டாமே, நாவல் அல்லது கட்டுரைகள் தாருங்கள்” என்றே கேட்கிறார்கள்.

கவிதை புத்தகங்களை அரசு நூலகத்திற்கு எடுப்பதில்லை என்பது பதிப்பாளர்ளகளின் ஆதங்கம்.

பிரபல வார இதழ்களில் சிறுகதை என்பதன் சகாப்தமே முடிந்து ஒரு பக்க கதையாக சுருங்கிவிட்டது. அநேகமாக எல்லா பத்திரிகைகளிலும் தொடர்கதை நிறுத்தப்பட்டுவிட்டது.

பத்தி எழுத்தாளர்கள் காட்டில் தான் மழை! பத்திரிகைகள் தங்களது தேவைக்காக டிரைவரின் அனுபவங்கள், சிட்டி ஆட்டோ ஓட்டுனர் அனுபவங்கள் என்று புதிது புதிதாக ஆட்களை தேடித் தேடி உற்பத்தி செய்கிறார்கள்.

பத்திரிகையின் (அதிகபட்சம்) 4 பக்கங்களுக்குள் கவிதைக்கும் இடமளிக்கப்படுகிறது. (ஏதோ போய்ட்டு போகுது என்று)

பதிவர்கள் “கவிதை வெளியீடா” என்று தலைதெறிக்க ஒடி ஒளிகிறார்கள்.

இப்படியான கவிதைச் சூழலில் தான் செல்வராஜ் ஜெகதீசனின் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் கவிதை தொகுப்பு மூத்தகவி வண்ணதாசன் முன்னுரையோடு அகநாழிகை வெளியீடாக வந்திருக்கிறது.

இதையும்

இன்னும் சற்று மேம்பட்டதாக

இன்னும் சிறிது சுரத்துள்ளதாக

இன்னும் கொஞ்சம் உவப்பானதாக

இன்னும் எப்படியெல்லாமோ

இருந்திருக்கலாம் என்கிறீர்கள்

இந்த சிறு வாழ்வில்

இந்தளவாவது இயன்றதே என்கிறேன்

இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்

ஏனைய பிறயாவற்றையும் போல.

புத்தகத்தை புரட்டியதும் கண்ணில்பட்ட கவிதை இது.

இந்த கவிதையை படித்தபின் விமர்சனம் எழுதுவதில் சிறு தயக்கமே எழுந்தது.

இருப்பினும் சமீப வருடங்களில் துடியாக கவிதைத்தளத்தில் இயங்கி வருபவரான செல்வராஜ் ஜெகதீசனை குறித்து எழுத வேண்டியிருக்கிறது.

இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில்

இன்னொரு முகத்தின்

சோகத்தை இம்மியாவது

இடம் பெயர்க்க முடிந்ததென்ற

நிம்மதி எனக்கு

அபுதாபியில் பணியாற்றும் எத்தனையோ பேர்களில் கவிதையை தனது தோள் சாய்க்கும் துணையாக கொண்டு செயல்படுபவர் என்பதையும் சேர்த்துப் பார்க்கும் போது அவரது பகிர்தலுக்கான பதற்றத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

கவிதைபத்து எழுதியிருப்பதன் மூலம் அவருக்கு கவிதை குறித்து கோட்பாடு இருக்கிறது.

ஏதாவது தொக்கி

நிற்றல் நலம்

என்றெல்லாம் சொல்கிறார்.

மீட்டாத வீணைகவிதையை அவரது கோட்பாட்டின்படி பார்ப்போம்.

இங்கிருந்து போயிருந்த

என்னைப் போலவே

அங்கிருந்து

அவர்கள் வந்திருந்தார்கள்



அவரவர் இடங்களைக் குறித்தே

அதிகமும் பேசிக் கொண்டிருந்தோம்

அயர்ந்து திரும்பும் வரை



தன் பொருட்டும்

எழும் விரல்களுக்காக

மீட்டாத வீணையென

காத்திருக்கும்

மீளாத்துயரில் அந்த இடம்

மீட்டாத வீணையென்ற மிகவும் நைந்துபோன உவமையால் கவிதை எழும்பாமல் சமதளத்தோடு நின்று விடுகிறது. நட்பு கருதி இப்படியிருந்திருந்தால் என்று ஒரு மாதிரியை முன்வைக்கிறேன்.

ராஜ பாளையத்து

பெரியம்மையும்

ஏழாயிரம் பண்ணை

சித்தியும்



திருச்செந்தூர் போனார்கள்

கடற்கரையிலமர்ந்து

கடலை கொறித்தபடி

தத்தம்

மருமக்கள்

கொடுமைகளை

மெய்மறந்து பேசினர்



ஆர்ப்பரித்து வந்த

அலைகள்

சோர்ந்து போய் திரும்பின

கடலுக்குள்

சென்ற இடத்தை கவனிக்காத துயரை என்னால் இப்படித்தான் வெளிப்படுத்த முடியும்.

டீ குடிக்கச் செல்வதைக் கூட பகிர்ந்து கொள்ள துடிக்கிற மனசு அதை கவிதையாக நம்பவைக்கிறது. ஆனால் வாசிப்பவனிடத்தில் அது கவிதானுபவத்தை ஏற்படுத்துமா என்று யோசியுங்கள் தன்னை, தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத் துடிக்கிற பதட்டம் தணிந்து செல்வராஜ் ஜெகதீசன் தன் ஞாபகங்களை அனுபவத் திரட்சியாக்கிச் சொல்லும் போது மிக நல்ல கவிதைகள் கிடைக்கக்கூடும். இந்த தொகுப்பில் உள்ள கவிதைகளில் அதற்கான நுட்பம் இவர் கைவரப் பெற்றிருப்பது, ஆங்காங்கே தென்படுகிறது.

வண்ணதாசன் முன்னுரையில் சொல்வது போல இந்தக் கவிதைகள்.

பக்கத்திலிருக்கிற ஒருவரிடம், உடனுக்குடன் போசுகிற அன்றாடத்தின் தொனியுடன் (கவனிக்க வேண்டியது) அமைந்து விடுகின்றன. நாம் அன்றாடங்களை அன்றாடங்களின் தொனியை வாழ்விலிருந்து உதறிவிட முடியாது. ஆனால் கவிதையில், அந்த உதறுதலுக்கான, ஈரம் காய்தலுக்கான, வெயிலுக்கும் வெதுவெதுப்புக்குமான அவசியம் இருக்கிறது.

இதையே நானும் தங்களுக்கு வற்புறுத்தலாக முன்வைக்கிறேன்.

வித்யாஷங்கர்

Friday, January 7, 2011

எப்போதும் அவள் தேவதையாகவே இருந்தாள்

மார்போடு புத்தகங்களை ஏந்தி

சீருடையில் பள்ளிக்குச் செல்லும் வழியில்

பதுங்கி பார்த்துப் போனபோதும்



பெரியவளாகி தூணோரம்

பாதிமுகம் தெரிய

அவன் பேச்சை வரிவிடாமல்

கேட்ட போதும்



பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட

மணம் முடித்து காரிலேறியவள்

மண்டப வாசலில் நின்றவனுக்கு

சிரித்து கைகாட்டிச் சென்றபோதும்



இருபதாண்டு இடைவெளிக்குப்பின்

தலைக்கு சிக்கெடுத்தபடி

எதிர் பாராமல் சந்தித்த அவனுக்கு

இதழோர சிரிப்பொன்றை உதிர்த்தபோதும்



இறுதி நாள்களில்

கேசம் உதிர்ந்து உடலுருகி

படுக்கையிலிருந்து எழ முடியாமல்

பார்க்க வந்தவனை கண்டதும்

விழியோரம்

கண்ணீர் கசியவிட்டபோதும்



மஞ்சள் பூசி மாலை சூடி பலர் மனங்குமுற

மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்த மஞ்சள் கிழங்காய்

பல்லக்கில் இறுதி ஊர்வலத்தில்

எடுத்துச் செல்லப்பட்ட போதும்



அவள் தேவதையாகவே இருந்தாள்

வித்யாஷங்கர்

Thursday, January 6, 2011

வேறுவேறு

நதி யாருக்கானதுமில்லை

படகும்

பயணிக்கு சொந்தமானதில்லை

பயணிக்கும்

பயணம் மட்டுமே

சொந்தம்

எங்கிருந்து எங்கு நோக்கி சென்றாலும்

நதியின் போக்கு தன் போக்கு

பயணியின் நதியும்

படகோட்டியின் நதியும்

வேறு வேறு



.........