தேசப்பற்று பேசுகிறார்கள்
திவிரவாதத்தை உருவாக்குபவர்கள் தான்
அதை ஒழிக்கவும் முற்படுகிறார்கள்
வறுமைக்கு காரணமானவர்கள் தான்
வறுமையை ஒழிக்கப்போவதாய் சொல்கிறார்கள்
அதிகாரம் இருந்தால்
ஆக்கலும் அழித்தலுக்கும்
அவரே கடவுள்
காத்தல் மட்டுமே
காது கேளாத
கண்ணற்ற கடவுளிடம்
சாமான்யர்களின் கடவுள்
என்றும்
அன்றன்றைய
உணவு தான்
----------------------------------
இருக்கலாம்
எவரிடமும்
யார் குறித்தும் புகார்
நல்ல டீ தராமல்
காசு வாங்குவதாக
நல்ல சாப்பாடு தராமல்
பணம் பறிப்பதாக
சிறுசிறு
புகார்கள்
சகலர்க்கும் உண்டு
புகாரற்றவர்கள்
புண்ணியாத்மாக்கள்
-----------------------------------------
எப்போதும்
எதையாவது செய்து கொண்டிருப்பது
வழக்கமாகிவிட்டது
இருத்தலின் அவஸ்தை
அனலாய் தகிக்கிறது
மூலையில்
செய்தி நிறுவனத்தில் பணியாற்றுவதும்
ஓயாது அரசியல் பேசுவதும்
நியாய தர்மங்களை விவாதிப்பதும்
கவிதை எழுதுவதும்
ஒன்றாகிப் போனது
சும்மா இருக்கும் சுகமறியேன்
---------------------------------------------
ஒரு சிசு கண்விழித்த நாளில்
அதற்கென்று
பேரில்லை
சாதியில்லை
மதமில்லை
யார் யார்
என்ன உறவென்றும்
சிசு அறியாது
வளர வளர
சகல தீயவைகளும்
விருப்பமில்லாமலே
கற்பிக்கப்படுகின்றன
ஆனாலும்
சிசு
வளர்ந்தே தீரும்
சிசு சிசுவாகவே இருக்கவோ
வளர்ந்தபின்
சிசுவாக மாறவோ
வாய்ப்பில்லை
ஒன்வே உலகில்
வித்யாஷங்கர்