Saturday, February 26, 2011

ஸ்ரீ அன்னை





உனது ஒவ்வொரு சிறு அசைவிலும்
உயிர்க்கிறேன்

இறுக மூடிய இதழ்களுக்குள்
வெளிவரத் துடிக்கும்
வார்த்தைகள் காதுகளில் ரீங்கரிக்கிறது

சிறு குழந்தை போல
நடந்து கொள்ளும் பாவணைகளில்
குதூகளக்கிறேன்

குழந்தைகளோடு குழந்தையாய்
இருக்கும் உன்னை
பெரியவளாக்கிப் பார்க்கும்
பிரயத்தனத்தில்
தோற்றுத் தோற்று
விழுந்து தவழ்கிறேன்
என்னையும் குழந்தையாக்கும்
மாயமறிந்த உன்முன்

.....

எதிர்படாமலிருந்திருக்கலாம்
எதிர்ப்பட்டுவிட்டோம்
பார்க்காமலே கழிந்திருக்கலாம்
பார்த்துவிட்டோம்

பேசாமலே இருந்திருக்கலாம்
பேசிவிட்டோம்

இனி பிரியாமலேயிருக்க
வழி ஏதுமில்லையாதலால்

பிரிவோம் என்ற அறிதலோடு
பயணிப்போம் முடியும் வரை

......

உன் ஞாபக அடுக்குகளை
கலைக்கிறேன்
உன் நெகிழ்ந்த கணங்களை
நினைவூட்டுகிறேன்
என்னை உன்னில் பதிக்கஅல்ல
உன்னை உனக்குச் சொல்ல

.....

எப்போதும் பாடலை முணுமுணுக்கும்
இதழ் அவளுக்கு
கைதட்டி ரசிக்க
யாருமற்ற போதிலும்
எப்போதும் பாடிக்கொண்டேயிருக்கிறாள்
அவள் தனக்கான பாடலை
தனக்குள்

......

நீ உனக்கே செய்து கொள்ளாத
நன்மையை உன்னால்
பிறருக்குச் செய்ய முடியாது


Tuesday, February 1, 2011

கழைக் கூத்தாடியும் கைதட்டலும்




வயிற்றுப் பிழைப்புக்காக கயிற்றில் நடக்கிற கழைக் கூட்டாடி கயிற்றை விட்டு கிழிறங்கும் போது அவனது தட்டில் விழுகிற காசு தான் அவனது பசியைப் போக்குகிறது. கூட்டத்தினரின் கைதட்டல் தான் அவனைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது.

வெறும் கைதட்டல் பசியமர்த்தாது என்பது எத்தனை உண்மையோ!

அத்தனை உண்மை வெறும் காசு மட்டும் போடுவது வித்தைச்காரனை கௌரவித்ததகாது.

அதனால் தான் அரசர் காலத்திலேயே பாடிவந்த புலவர்க்கு பாராட்டி பொற்கிழி கொடுத்து கௌரவித்தனர்.

தன்னை பார்க்க நெடுந்தொலைவிலிருந்து வந்த புலவன் களைப்பின் மிகுதியால் தூங்கிக் கிடந்ததை பார்த்து அரசன் அவனுக்கு வெண்சாமரம் கொண்டு வீசியது சங்கம் நமக்குத் தரும், பாடம்!

அதையேதான் இன்றைக்குள்ள நவீன அரசுகளும் பத்மஸ்ரீ, பத்மபூஷன், சாகித்ய அகாடமி, கலைமாமணி என்று விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள கலைமாமணி விருது பட்டியலில் எழுத்தாளர் சா.கந்தசாமி, நாஞ்சில் நாடன் பெயரும் இடம் பெற்றிருப்பது பெருமைக்குரியது.

தன்னோடு நட்பு பாராட்டிய ஓளவையோடு அதியமான் தோழமையோடு கள்ளுண்டு களிப்புற்றது. அவர் தமிழுக்கு அளித்த கவுரவம்.

இயல்பிலேயே எழுத்தோடும், இலக்கியத்தோடும் பின்னிப் பிணைந்த வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்து வரும் எழுத்தாளரே தமிழக முதல்வராகவும் இருப்பது தமிழகத்திற்கு பெருமை!

எழுத்தாளன் என்ற பிம்பத்தை எதிரியும் ஏற்றுக் கொள்ளும்படி செய்த தமிழ் சிம்மம் பேரசான் ஜெயகாந்தன்! அவரது இலக்கிய நாற்காலி இன்றளவும் காலியாகவே உள்ளது.

அறச்சீற்றம் கொண்ட அவரது இலக்கிய வழித் தோன்றல்களாக நாம் சா.காந்தசாமி நாஞ்சில் நாடனை ஏற்று கலைமாமணி விருது அவர்களுக்கு வழங்கப்பட்டதை வாழ்த்து வரவேற்போம்! அறிவும் வறுமையுள்ள மனிதனால் அவனுக்கும் சமூகத்திற்கும் பயன் நேராது என்பதைவிட கொடுமை, அவனால் இழப்புகளும் பாதிப்பும் நிச்சயம் சமுகத்திற்கு ஏற்படும் என்பது காலம் நமக்கும் படம் பிடித்துக் காட்டியது உண்மை.

இடி அமின் போன்ற எத்தனையோ சர்வாதிகாரிகள் அறிவில்லாததாலேயே பேரரசுகள் மண்ணோடு மண்ணானது வரலாறு காட்டும் பாடம்!

எழுத்தாளனை கௌரவிக்க தவறுகிற சமூகம், அறிவு வறுமை நோயால் பாதிக்கப்பட்டது. இதைத் தெரிந்துதான் தமிழக முதல்வர் உரிய நேரத்தில் உரிய எழுத்தாளர்களை அடையாளம் கண்டு கலைமாமணி விருது அறிவித்து கௌரவித்துள்ளார்.

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாடமி விருதை தொடர்ந்து கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நாஞ்சிலார் காட்டில் விருது மழை தொடர வாழ்த்துகிறோம்.

                                                                                                    துரை