Monday, August 31, 2009

காத்திருத்தல்!

காத்திருத்தல்!

ஏதொன்றுக்கும்
காத்திருக்க வேண்டியிருக்கிறது
எப்போதும் ...

காலைக்கடன் கழிக்க
யாரேனும் கழிவறையில் இருந்தால்
யாரேனும் தினசரி படித்தால்
யாரேனும் குளித்துக்கொண்டிருந்தால்
பேருந்துக்காக
இருக்கை கிடைப்பதற்காக
இப்படி சில்லரை காத்திருத்தலில்லாமல்

சனி பெயர்ச்சிக்காக.
குரு பெயர்ச்சிக்காக,
திசை மாற்றத்திற்காக
காத்திருத்தல் வேறு

உதவுகிறேன் என்றவர்
பதிலுக்காக
நோய் குணமாக
பதவி உயர்வு வர
ஊதிய உயர்வுபெற

உரியவரை தொடர்புகொள்ள
காத்திருக்கும்படி செல்ஃபோன் தெரிவிக்கிறது
தூக்குப்போட புறப்பட்டவன்
என்ன ஆனான்
நாளை வரை காத்திருக்கும்படி
தொலைக்காட்சி தொடர் சொல்கிறது.

மாதக்கணக்கில் நடந்த போட்டியில்
யார் வென்றது
முடிவு அடுத்தவாரம் என்று அறிவித்து விடுகிறார்கள்
எல்லையில் பிடிபட்டவர்
தப்பினாரா? இல்லையா?
அடுத்த இதழில் என்கிறார்கள்

எதற்காவது
எப்போதும்
காத்திருத்தல்
நித்ய கர்மம்
நீண்ட துயர்

எதற்காகவும்
காத்திருக்க
வேண்டாதவர்
எத்தனைபேர்
இப்புவியில்?

பூவிழுமா? தலைவிழுமா?
சுண்டிவிட்ட காசு அந்தரத்தில்

விழுமா? விழாதா?
காத்திருக்கிறேன்
நெடுங்காலமாக ......
- வித்யாஷங்கர் -

Wednesday, August 19, 2009

மனிதர்கள் பார்க்க மட்டுமே

விதியயென்றுதான்
சொல்ல வேண்டும்
வேறு எதுவுமே தெரியாமல்
எழுத வந்தது

பரபரப்பாய்
அதிர்ச்சியூட்டுவதாய்
வருடிக்கொடுப்பதாய்
வழிகாட்டுவதாய்

சர்க்கஸ் கலைஞனின்
சாகசம் போல்
பேப்பர்களில் முளைத்த
பெருமரம்

இதில் கனிந்த காய்களோ
கனிகளோ
வாயில் வைக்க முடியாத
கைப்போடு இருக்கிறது
இது பேய்களுக்கான
கனிகள்
மனிதர்கள் பார்க்க மட்டுமே
வித்யாஷங்கர்

பேருக்குத்தான் பெயர்

சிற்றருவி
பேரருவி
ஐந்தருவி
பேர் என்னவானாலும்
அருவி ஆறாகாது
அதனதன் வேகமும்
தன்மையும்
அதனதன் இயல்பு
பேருக்குத்தான் பெயர்

வித்யாஷங்கர்