Saturday, June 30, 2018


                    பனையோசை

பனையோசை
காடு கரைக்கு வேலை வெட்டிக்கு போக மாட்டாமல்
திண்ணைகளில் தனக்குத்தானே பேசிக் கொள்கிற
வயசாளிகளுக்கும்;
வெயில் சுமந்து. மண்பூசி பள்ளிக்கூடம் போகப் பிடிக்காத
பிள்ளைகளுக்கும்,
காலங்காலமாக உட்பகையால் ரத்தஞ்சிந்தி
செத்தவர்களை நினைவூட்டி
குலை பதற வைக்கிறது
என்றென்றும் பனையோசை.

2.
                     உன் அறிதல் அல்ல நான்
o   எவ்விதமாய் நான்
அறியப்பட்டிருக்கிறேன்
எனபதில் இல்லை நான்
தூக்கம் கலைந்த
நடுநிசிகளில்
வெறிச்சிட்டு பிள்ளையையும்,
மனைவியையும்
விட்டோடும்
சித்தார்த்தம்
இன்னும் தொடர
எத்தனை நாளைக்கு
மாதத்திற்கு வருடத்திற்கு
வாய்க்கும்
இவ்விருப்பு
எனத் தொடர்வேன்
நாளும் பொழுதும்…..
பழக்கத்தில்
உண்ணல் உறங்கல்
உழைத்தலென
 
3.
                    பனையோசை
o   பதநீ… பதநீ என்ற நீட்டிமுழங்கிய கூவலோடும்
வாசல் தெளிக்கும் சாணநீர் வாடையோடும்
அந்த அதிகாலைகள் புலர்ந்தன.
மாடுகள் மந்தைக்குப் போக
களைக்கொத்தியும் அருவாளுமாய்
அவரவர் காட்டுக்கு போக 
கோயில் பெருமாளும்
கிராமத்துக் கிழடுகளோடும்
ஆளரவமற்றுக் கழியும்
என் கிராமத்துப் பகல்கள்…

டவுனுக்கு தயிர்விற்கப் போகும்
ராக்காச்சி அத்தையும் உடையம்மா பாட்டியும்
 “புள்ள அம்மாவ பாக்காம
ஏங்கிப் போச்சு
நாளைக்கு ஏங்கூட வர்றீயா”
என்ற படி வழமை போல்
கம்மாக்கரை தாண்டிப் போவர்

.

அரங்கு வீட்டில்
மொச்சிக்காயும் தட்டாங்காயும்
சீனிக்கிழங்கும் தின்னக் கிடக்கும்….
குதிரைவாலி சோறும் தயிர் பானையும்
எப்போதும் நிறைஞ்சிருக்கும் எடுத்துத்தின்ன

காட்டுக்கு கஞ்சி கொண்டு போகும்
கோச்சடையோடு தோட்டம் போனால்
இளநீ வெட்டித் தரவும் நுங்கு வெட்டித்தரவும்
மாமா மக்களாம் மதினிமார்களிடையே
ஏராளமாய் போட்டி இருக்கும்.

மில் வேலை விட்டு வரும்
மாமாவின் தூக்கில்
கேண்டீன் வடையோ பஜ்ஜியோ
எனக்கென்று இல்லாமல் போகாது எப்போதும்

எல்லாமிருந்தாலும்
எப்போது கழியும் கோடையென
அம்மாவைக் காண
பனையோசை சலசலப்பாய்
 ‘பரிதவிக்கும் என் மனசு’




4.

               காணாமல் போன புலிகள்

o   ஊரோரம் ஒதுங்கிய
அந்த  மலையில்
எததனையெத்தனை
அந்திக் கருக்கலில்
காம்யூவை
மார்க்ஸை
உள்ளூர் காதலிக்கு
அன்றாடம் எழுதிய
காதல் கடிதங்கள்
கதைகள்
கவிதைகள்
இப்படி எத்தனையோ
அந்தப் பாறைகள் கேட்க
பகிர்ந்து கொண்டோம்

புலிக்குகைக்குள்
வெளவால்கள் நாற்றமடிக்க
என்றோயிருந்து
காணாமல் போன புலிகளுக்காய்
எத்தனை நொந்திருப்போம்

நாமும்
இப்போது
காணமல் போன
புலிகளாய்
கனவுகள் கரையவிட்டு
அளவெடுத்த
அறைகளுக்குள்
ஏ.சி மேஜைகளில்
லட்சம் முகங்களுள்
ஒன்றாகிப் போனோம்……

.
வீடுகளிடையே
மேடாகத் தெரியும் இது
அன்று நமக்கு கதிரேசன்மலை
துர்க்னேவ்வின்
பஸாராவ்வையும்
தாஸ்தாவ்ஸ்கியின்
வெண்ணிற இரவுகளையும்
சினிமாக் காரனென்று எண்ணி
பிரேமித்த
பிரேமியையும்
அந்திச் சூரியனுக்கு
விடை கொடுத்தபடி
இங்கே தான்
புரிந்து கொண்டோம்

ஊர் உமிழ
வேலை வெட்டியத்த பசங்களாய்
நாம்
லட்சியவானவில்களுக்கு
இங்கேதான்
வர்ணம் பூசிக் கொண்டிருந்தோம்
சகமனிதனோடு
பேசுவதே சள்ளையென்று
ஊரோரம்
ஒதுங்கியிருந்த
இந்த மலையை ஸிநேகித்தோம்
ஐடெண்டிக்கலாய்..

அதனால்தானோ
என்னவோ
அப்பத்தா
 “புலிக்குகை பக்கம் போகாதே
கொம்பு முளைத்த வால் மனிதர்கள்
இழுத்துட்டு போய்டுவாங்க.”
எச்சரித்தது இப்பவும்
உறுத்திக்கொண்டிருக்கிறது
நெஞ்சில்…. 

5.

                 வனாந்தரத்தில்

o   நாங்கள்
காடுகளிலும்
வனாந்தரங்களிலும்
பறவைகள் போல்
புள்ளிமான்கள் போல்
இரைக்காக அலைந்தும்
ஓய்வுக்காக துன்புற்றும்
இருந்தோம்.
இருந்தபோதிலும்
எங்கள் வானம்
நீலமாகவே இருந்தது
எங்கள் காற்று
தூய்மையாகவே இருந்தது
எங்கிருந்தோ சிலர் வந்தனர்
இங்கே கிடைப்பது


பெட்ரோல் என்றான் ஒருவன்
இல்லை இல்லை
தங்கமே கிடைக்கும்
என்றான் ஒருவன்
அவர்கள்
கோட்டும் சூட்டும்
அணிந்திருந்தார்கள்
மேன்மையானவர்கள்
என்றேபட்டது.

அவர்களுக்காக
நாங்கள்
வீடு கட்டினோம்
அவர்கள்


குழந்தைகள் விளையாட

மைதானம் ஏற்படுத்தினோம்
அவர்கள்
உற்பத்தியை துவக்கினார்கள்.
எங்கள்
காற்று கருப்பாயிற்று
எங்கள்
வானம்
நீலம் இழந்தது
தார் ரோடுகளில்
அவர்கள்
கார்கள் பறந்தன
நாங்கள்
எங்கள்
காற்றை இழந்தோம்
வானை இழந்தோம்
இப்போது எங்களை
நியுசென்ஸ் என்கிறார்கள்
நாங்கள்
நியுசென்ஸ்கள்தான்
எங்கள் நாடு
வளமாகட்டும்

6.

                  ஆதி உசிர்…

o   உறவுமுறை விருந்தானாலும்
ஒரு பங்கு
ஒளிச்சு வச்சு
காத்திருப்பாள்
ஓலைக்குடிசையிலும்
ராசாவா என்னைவச்சு
ஒரு குறையும் வைக்கமாட்டா
அப்பத்தா மாரியம்மா
அந்திக் காலத்திலும்
முந்தியிலே முடிஞ்சு
எனக்காக வச்சிருந்தா
செத்து எரிஞ்சு கம்மாயில்
இன்றைக்கும்
புளியமரமாய் நிற்கிறாள்
பூ நிழல் காய் கனி கொடுத்து
ஆதி உசிராச்சே
அன்புக்கு விலையா கேப்பா!

7

                  தொடரும் உறவிகள்

இன்னும் ஒரு குவார்ட்டர்
கண்டிப்பாக தேவைப்படும்
கடை அடைப்பதற்குள்
நண்பனைப் பிடித்து வாங்கிவிடுவோம்

நாளை வாழ்வதற்கென
நற்குறியெதுவும்
இந்தக் கடைசி மடக்கை
குடிக்கும் வரை இல்லை

.

குழத்துப் புழையாற்று பற்றி…
குமரி சூரியோதயம் பற்றி….
தாமிரவருணியைப் பற்றி….
உச்சிக் கோபுரம் கடந்து
போயே போய்விட்ட பிலோமி பற்றி….

இற்றுப் போயிற்றெல்லாம்
இழுத்துக்கட்ட
எதுவுமற்று….

ஊறுகாய் போலவே
வறுத்த மீனும்
சுண்டலும் கூட
குட் காம்பினேஷன்

அரைகுறை போதை
வீட்டில் காத்திருக்கும் மனைவியை
தூக்க விழிப்பில் கவிதையாய்
புன்னகைக்கும்  மகனை…
எல்லோரையும் நினைவூட்டும்….

முழுக்க முழுக்க
நிலா முழுக்க
உள்வாங்கு
கடல்முழுக்க
கொந்தளிக்க…

காற்றாய்
சுவடற்றுக் கரைய
இன்னுமொரு
குவார்ட்டரும்
வேண்டும்
தேடிப்பிடித்து
காசு கொடுக்க
நணபனும் வேண்டும்

எவ்வாறாயினும்
உறவுகள் அறவே
முறிப்பதற்கில்லை
மூடமதே!

8.

                  காணும் பொங்கல்

o   சிவப்புத் தாவணி
பச்சைத் தாவணி
நீலத் தாவணியென
பூந்தோட்டமாய்
குமரிகள்
ஜீன்ஸ்
பேகிஸ்
டைட்சென
இளவட்டங்கள்
பெரியோர்கள்
பார்வை எட்டாத
மலையடி வாரத்தில்
வனந்தாரங்களில்
கம்மாக் கரைகளில்

பொங்கலும்
பனங்கிழங்கும்
கரும்புமாய்

கஸ்தூரி கமலா
ராணி வேணி
கீதா மாலாவென
காண இருந்தவர்கள்
இன்று சதைபிதுங்கிய
இடுப்பும்
நிலை மறந்த மார்புப் பிதுங்கலுமாய்
அதே இடங்களில்
காணக் கிடைக்கிறார்கள்
அம்மாக்களாய்
என் தாடி நரை சுட்டி
சிரித்த படி…………….


9.

                எச்சில் கொடி

o   ஃபோர்டிஜிட் சம்பளத்தில்
போய்விட்ட எழுத்திற்காக
புலம்பிய
சுப்ரமண்ய ராஜுவை
அறிவாயா?

கன்யாகுமரியில் பிறந்தவன்
நள்ளிரவில் குடித்துவிட்டு
சூர்யோதயம் பற்றிப்
புலம்பியது
அறிவாயா?
அறியாதது ஏதும்
அறிந்தொன்றும்
யாதொரு பயனிமில
அறிந்ததும் அறிந்ததும்
எல்லாம்
இருப்பில் இருக்கும்
ஏராளம்
உண்ணக் கொடுக்க முடியாததாய்
எச்சில் இலை தொட்டியாய் எனக்குள்



                  



10.

               எனது

o   ஆர்தர் கொய்ஸலரும்
ஆல்பர்ட் காம்யூவும்
ஆயிரம்தான் படித்தாலும்
அவை எனக்குச் செய்திகளே
பேர் சொல்லி மிரட்டாதே
வேருண்டு எனக்கு

அறிந்ததும்
அனுபவமும்
அணியான் கூத்து
வரகணி மாரிமுத்து
கருவநல்லூர் கருப்பசாமி
நையாண்டி மேளக்
கரகமாடும்
தச்சநல்லூர் சாதாவும்தான்.


11.

         கேள்வியுலகம்

o    “இப்ப
கதை எழுதுவதெல்லாம்
இல்லையா”

----இப்பவும் கதை எழுதிக் கொண்டிருக்கும்
நண்பர்கள் கேட்டார்கள்.
பாரதிராஜாவின்
மலரும் நினைவுகள்
பார்க்கும்போது
பேச்சியக்கா கேட்டாள்
 “சினிமா சினிமான்னுதானே
நீயும் போன
இப்படி எங்ககூட
உக்காந்து பாத்துக்கிட்டிருக்கியே ? “

 “முன்னாலதான்
வேலையில்லை
இப்பத்தான் வேலையிருக்கே
நல்லது பொல்லாததுக்கு
செலவழிக்கிறது”
உறவினர்கள்
கேட்பார்கள்.

ஊருக்குப் போய்ட்டு
வீசுன கையும் வெறுங்கையுமா
வர்றீங்களே
எதாவது வாங்கிட்டு வரக்கூடாது ?
மனைவி கேட்டாள்.
சுற்றி சூழக் கேள்விகள்
நடுவில்
நான்


12

         சுடலையிலும்….

o   எளவட்ட கல்லைத் தூக்கி
எறிஞ்சி காட்டட்டுமா
மூணு பன ஒசரம் காட்டட்டுமா
முக்குளிச்சிக் காட்டட்டுமா
கைல முள் குத்தாம
காட்டிலந்தை பறிச்சு தரட்டுமா
கடன உடன வாங்கி
காசுமாலை வாங்கி போடட்டுமா
எட்டடுக்கு வீட்டுக்குள்ளே
இருந்து நீ குளிக்கையிலே
எம்.ஜீ.ஆர் போல வந்து
எட்டி நின்னு பாடட்டுமா
ஏட்டி கோட்டிக்காரி
கேக்கறனே தெரியலையா
எந்த எடுபட்டபய மகன்
இருக்கான் நெஞ்சுக்குள்ளே
சொல்லாம நீ நடந்தா
சுடலையிலும் வேகமாட்டேன்…

13.

        நொம்பலம்…

o   ஊருக்குள்ளே நீ நடந்தா
ஊரு கண்ணு படுமின்னு
சூரியனை சுருட்டினாப்லே
சேலை நெழலுக்குள்ளே
சேர்த்தணைத்து கூட்டிப் போவேன்
எட்டு வயசானாலும்
பிஞ்சுக்கால் நோகுமின்னு
எடுத்து இடுப்புல வச்சு
ஏழூரும் போய்வருவேன்
என் ராசா மனசொடிச்சு
எடுபட்ட செறுக்கிமக
எவனையோ கட்டிப்போக
இடுப்பொடிஞ்சு நாத்தா
மனசொடிஞ்சு மகராசன்
மறுகித் தவிக்கிறானே
நொம்பலத்தை எங்கே சொல்வேன்
அம்பலத்து அம்மாளே !

14.
             பிள்ளயல்லோ…

o   அஞ்சாவது பிள்ளை
பஞ்சா பறத்தினானாம்
ஊரு விட்டு ஊரு போயி
ஓட்டல் நடத்த வச்சானாம்
அம்மா இப்பவும்
அழுகையோட சொல்லிவைப்பா
ஆனாலும் பிள்ளைகளில்
அவம்மேல் பாசந்தான்
விட்டுப் பிரிஞ்சு
வேத்தூரிலிருந்தாலும்
தட்டழிஞ்சு போவானேன்னு
தவியா தவிச்சிருவா
தண்ணியிலே வெலக்கில்ல
தாயின்னா கோபமில்லே
இட்டழிச்சுக் கெட்டாலும்
தட்டழிஞ்சு திரிஞ்சாலும்
தாயிக்கு பிள்ளயல்லோ
தாயிக்கு பிள்ளயல்லோ…!


15.

            இன்றுவரை…

o   பூவில்
புள்ளிகள்
அழகா
களங்கமா
பூவறியா
புதிர்

o   வாசலில் நின்று
நிலாக் காண நிமிர்ந்தேன்
இருட்டில் பறந்த
ஏதோ ஒரு பறவையின்
எச்சம் படிந்தது
முகத்தில்…!

o   காற்றைக் கண்டேன்
கைபிடித்து நடந்தேன்
வானவில் நாயகி
ஆட்டத்தில் மயங்கி
கைப்பிடி தளர்ந்தேன்
 ‘தொப்’ பென விழந்தேன்

o   மூன்றாம் முலையூறும்
உண்ணா முலை யம்மனுக்கு

o   விலக்கு பாதையில்
வெளிச்சம் குறைவு
தூரமில்லை
நேர் பாதையோ
நீண்டது
வெளிச்சமானது
அவசரப்பட்டவர்கள்
வில்க்கிலேயே போகிறார்கள்!

o   பூ சுமக்கட்டும் மரங்கள்
புத்தகம் சுமக்கட்டும் குழந்தைகள்
எல்லாம் உதிரி
இலகுவாகும் இருப்பு!

o   மலர்களும்
குழந்தகளையும் கூட
விலக்கி வைத்தால்
வேறுவழியில்லை…!
பூட்டிக்கொள்
பூதங்கள் தீண்டாதபடி

o   வித்தாரக்கள்ளிக்கு
சொக்காரு
ரெம்பபபேரு


    ஓலைகள்



o   ஆடுவெட்டிப் பொங்கலிட்டு
அரசன்னு பேருமிட்டு
ஊருசனங் கூட்டி வச்சு
மாமன் மடி இருத்தி
கடுக்கன் காது குத்தி
காது இருக்கையிலே
கடுக்கனை காணலேயே

o   விடலைகளுக்கு எப்பவும்
வெடக்கோழி நெனப்பு

o   சடங்குன்னுசொல்லி
சாத்திரமா ஊர்கூட்டி
பட்டெடுத்து மாமன்
பவிசா திரியயிலே
ஏண்டி அழுகுற
எவன் கெடக்கான் நெஞ்சுக்குள்ளே.

o   ஏற்கனவே
பார்த்ததுதான்
இருந்தாலும்
இன்று ஏனோ
மறக்க முடியாதபடி
மனதில் பசுமையாய்
காட்சியில்
மணக்குது
மல்லிகை!

o   காணாமல் போன போதுதான்
கண்டு  கொண்டேன்
காணாமல் போவதொன்றும்
அத்தனை சுலபமில்லையென்று..

o   ஆப்பிள்
துண்டென்றாலும்
துண்டு ஆப்பிளென்றாலும்
ஆப்பிள்தான்!

o   அழுது அடம்பிடித்து
ஆசையானதை
வாங்கத் தெரியாமல்
அப்பாவிப் பிள்ளைகள்
தட்டழிந்து திரிகின்றன
அம்மா சொன்னதில்
இம்மியும் பொய்யில்லை
அப்படித்தானிருக்கிறாது
உலகம்

o   உனது
சுமைகள்
உனது
கனவுகள்
எல்லாம் தெரிந்தாலும்
என் சுமைகளோடும்
கனவுகளோடும் தொடர்வேன்
எல்லையற்று நீளும் பாதையில்…

o   காலம்
கொஞ்சம் பிறழாது
தன் போக்கில் நகர்ந்தாலும்
அதன் சுவடு
படியும் என்மேல்
நான் காலத்தின்
எச்சமாயில்லாமல்
நிகழ்வாய் இருக்கவே
விரும்புகிறேன்

o   சுடலைமாடனுக்கு
பிணமென்றால்
சப்புக் கொட்டும் நாக்கு
சிவனாகிநின்றாலோ
பாலாபிஷேகம்
பன்னீர் தெளிப்பு
சுடலை
சிவனான
சூத்திரம் யாரறிவார்

o   பறத்தலே பறவையென்றால்
பொறுக்கித் தின்னும்
கோழிகளும்
சிறகடித்து குதித்துக் காட்டும்

o   பளிங்கு சன்னதி
பத்ரகாளியம்மன்
அருள்பாலிக்கிறாள்
அரைவயிறுகளுக்கும்
பரட்டைத்தலைகளுக்கும்



o   ரிக்‌ஷாஸ்டாண்ட்
பிள்ளையார்
சாராய நெடிக்கு
முகஞ்சுழிக்காதவர்
தொப்பை விழுந்தது
தொடர் குடியாலா ?

o   உன் உதட்டின் விளிம்பில்
உதிரும் வார்த்தையில்
ஒட்டிக்கிடக்கிறது
என் உயிரின் ராகம்

o   ஏ, தேவீ
சூலமும் சுடர்விழியும்
அருள் பூத்த முகமுமாய்
என்ன தவம் ?
ஏன் இப்படி
தீச்சட்டி கையேந்தி
தகிப்பில் நீ!
இறக்கி வையேன்
என்னாகும்
பார்க்கலாம்….

o   ஊர் கொள்ளைபோனாலும்
தேர்வலம்
திருநாளென்று
பட்டுகள் பவிசுகாட்டும்
பல்லிளித்து…


o   எங்கெங்கும்
பாம்புகள்
மினுமினுக்கும்
உடல் நெளிக்கும்
கண் ஜொலிக்கும்
சீறும்
படமெடுக்கும்
பற்கள் மட்டும்
எவரிடமோ
பறிகொடுத்து…

o   பசிநேரம் மட்டிலும்
குரைத்துப் பழகிய
சேவக நாய்கள்
திருடன் வந்தால்
குரைக்க மறக்கும்

o   பிரில் பாவாடை
சுருட்டிச் சொருகிய
மடிக்குள்
பறிந்த கொடுக்காபுளி
கைவிட்டு துழாவி
வாயில் போட்டேன்
ருசிக்கவேயில்லை
கொடுக்கா….

o   கதவடைத்த அறைக்குள்ளே
கண்ணா  மூச்சியாட்டம்
வயசுக்கு வந்த
பக்கத்து வீட்டக்கா
இருட்டில் இறுகணைத்து
எழுந்த சிலிர்ப்பும்கூட
இன்னமும்
கண்ணாமுச்சிதான்

o   மருகிக்கூசும் பார்வைபுரிகிறது
மன்னிக்கயென கேட்கமாட்டாமல்
கேட்பது அது
சாபவிமோஷனம் பெற
முனிவன் நீங்கி
இந்திரன் அனைந்த
அகலிகையுமல்ல நீ
உள்ளும் புறமுமாய்
ஒருத்தியோடு இயைந்த
உத்தம ராமனுமல்ல நான்

o   அகிலாண்டநாயகி
பிரம்மாண்ட தேவி
இராஜராஜேஸ்வரி
வேப்ப மரத்தடியில்
காக்கை கரையும்
நீரற்ற குளமும்
வெளச்சலற்ற பாலையில்
விரியம் குறைந்து
சேலை நேர்த்திகடனுக்கு
ஆள் தேடி அலைவாள்

o   மழை
பெண்மையின்
பரிபாஷை
பெய்து கொடுக்கும்
பொய்த்தும் கெடுக்கும்


o   ஓகோவென
உயர்ந்திருந்ததே அந்த மரம்
ஆயிரம்பேர்
நிழலிருக்க நின்றதே அந்த மரம்
அடையாளம் காட்ட
சுலபமாய் இருந்ததே அந்தமரம்
ஏலத்தில் வெட்டப்பட்டு
எந்த ஊருக்கோ ஏற்றி
லாரியில் கிடக்கிறது
கட்டையாய்!

o   மிச்சமிருக்கும்
உளியின் ஒலிகள் அதிர
சூரியன் தேடி
கடற்கரைக்குப் போனோம்
இரவெல்லாம் தேடியும்
கூடைக்கும் குறைவான
மீனே கிடைத்ததில்
கரை ஏற முடியாத மீனவன்
இன்னும்
வளையள்ள மாட்டாமல்
அலைபாய்கிறான்
வெட்கி
மேகத்துள்
முகம் மறைத்துக் கொண்டிருந்தான்
சூரியன்!

o   நெற்றிச் சுருக்கம் கலைந்து
நீ தந்த புன்னகை
ஒட்டிக் கொண்டது
என் முகத்தில்

இருந்தாலும்
உன் பரிதவிக்கும் பாசத்திற்கும்
என்ன தரயிருக்கிறது
என்னிடத்தில்
என்னைத்தவிர..
நானோ இன்னொருவர்க்கு
கொடுக்க மாட்டாத
எச்சில் பண்டம்!

o   பாதச் சலங்கைகள்
பரிதவிக்கும்
முட்டிமோதல்
முனகல் பொறுக்காமல்

o   எத்தனை புள்ளி வைத்தாலும்
எப்படி கோடிழுத்தாலும்
இணையாமல்
கோடுகளாய்
புள்ளிகளாய்
இரைந்து கிடக்குது
என் கோலம்




o   பொய்தான் சொல்கிறேன்
உன்னை சந்திக்கும் போதெல்லாம்
சரளமாக…
வேறு எப்படி
வியக்க வைத்து
உன் குழந்தைமையை
மீட்பதாம்!



     கரிசல் காட்டு நெருப்புச் சூரியன்

எவ்விதமாய் நான்
அறியப்பட்டிருக்கிறேன்
என்பதில் இல்லை நான்
வித்யாஷங்கரை அடையாளம் கண்டுகொள்ள இந்த வரிகளே போதும்
நதி ஒரு குழிக்குள் ஓடிச்சுருண்டு உள்வாங்கிக்கொண்டதைப் போன்ற வரிகள்.

  தனது வரிகளில் இருந்து என்றைக்கும் வேறுபடாத வாழ்க்கை உடையவர்
வித்யாஷங்கர். அவர் எழுத்துக்கள் எனக்கு அறிமுகம் ஆகிறபோதே அவரும் அறிமுகம்
   சிம்மாசனம் கிடைக்க வேண்டிய இளைஞனுக்கு சின்ன நாற்காலிதான் இப்போதைக்கு கிடைத்து இருக்கிறது இந்த  கரிசல் காட்டு நெருப்புச் சூரியனை மறைத்தே விடுவது என்று கிழிந்தகுடைகளோடு புறப்பட்ட பலர்
கைகள் இல்லாமல் திரும்பி வருவதை பார்த்து இருக்கிறேன். எக்காளம் ஊதி இருட்டுக்கும், முடங்கிக் கிடக்கிற நாட்டுக்கும் இதயத் துடிப்பு நின்று வருகிற சமுதாயத்திற்கும் அறிவிக்க வேண்டிய எழுத்து வித்யாஷங்கருடையது.
                                 கவிஞானி - வலம்புரிஜான்