Friday, June 29, 2018


                 சாமக் கொடை
1.
பனித்துளியின்
முன் நின்று
முகம் பார்த்து
படபடத்து மகிழாதே

கடல்முன் நில்
அதையுந்தன்
முகங்காட்டச் செய்

2.
எந்த வேஷத்திற்கும்
பொருத்தமற்றது என் முகம்
சுற்றிச் சூழ
நடக்கிறது நாடகம்.




3.
சிறகு விரித்தாயிற்று
இனி என்பயணம்
காற்றே உன் அசைவில்

தூரமோ பக்கமோ
துடுப்பின்றித் தொடங்கிவிட்டேன்
அடையும் இடத்தை
அலைக்கரங்கள்
நிர்ணயிக்கட்டும்.

4.
ஊர்

சத்தமிட்டு சத்தமிட்டு
குரல் தடித்துப்போன
பஸ்ஏஜெண்ட் ராசாத்தேவனின் குரல்
உள்ளுக்குள் கரகரக்கும்
இப்பவும் நடுநிசியில்….

நாலு கொலை செய்து
சட்டம் தப்பித்தவன்
உச்சபட்ச போதையில்
அழுத கண்ணீர்…..

புருஷனை இழந்து
சைக்கிள்கடை வைத்துத்தருவதாய்
இருக்கச் சொன்ன
கமலா அத்தை….



சிலைக்காளிக்கு
பசிக்குமென
பொங்கல் வைத்த சிறுவன்….

புர்புர்ரென நொண்டிக்கால்
குதிரைகளை  விரட்டி
வாடகைக்கு காத்திருக்கும்
ஆட்டோக்கள்…..

தினமும் பள்ளிக்கூடம் போன
குதிரை வண்டி பிரேமி….

இப்படி ஏகமாய்
ஊர் நினைவிலிருக்கும்
இருந்தாலும்
ஊர்
அவனை மறந்திருக்கும்

6.

பெருசுகளின் சாவோடு
மரம் நடுதல் வழக்கமாச்சு
கிளைத்து தளைத்தது பலவானாலும்
மரமாகி  நிழல் கொடுப்பது
ஓன்றிரண்டே…..

சுனை ஆறாய்ப்பெருகி
தவிச்ச வாய்க்கெல்லாம்
தண்ணி தந்தகாலம் போய்
தனக்குத்தான் வறண்டு
நாறிக் கிடக்கிறது
மூத்திரக் குழியாய்…..

வாழை மரம் வச்சுப்பாத்து
மல்லிகைச் செடி வளத்துப்பாத்து
வச்சதெல்லாம் வாடிப்போச்சு

தெக்குத் தெரு முழுக்க
தீப்பெட்டி ஆபிசாகி
காத்தெல்லாம் நாத்தம்
கரிமருந்து வீச்சம்…..

மாசிக்கு மாசி
மஹா சிவராத்திரியில்
ஆயிரமாக் கொட்டி
ஆடுவெட்டிப் பொங்கல்
அங்காள பரமேஸ்வரிக்கு
அலுங்காமல் நடக்கிறது


மணியார் மருமகன்
மாமனை வெட்டி
தாய் விதவை
மக வாழா வெட்டி.

மஞ்ச நீராட்டுக்கு வந்த
டவுண்கார மாமன்
தவியா தவிக்கிறான்
தண்ணி போடனமின்னு
எட்டூர் கூட்டம்
எள்ளி நகையாடுமின்னு
ஆத்தாக்காரி அடக்கி வைக்க.

சிலுப்பட்ட கொமறு
கண்மாயைக் கலக்க
எடுபட்ட பயக
ஏகமாய் மரம் மேலே…..

கொடையும் ஊரும்
கொமறுகளும் கண்மாயும்
இன்னுமும் என்
ஞாபகக்குளத்தில்
கல்வீசி.. கல்வீசி….

8.
சுடுகாட்டு கருப்பன்
சாராயம் விக்க
வப்பாட்டி சுடலை
பன்னி மேய்ச்சா

பன்ணையார் தோட்டத்த
பன்னி மேய்ஞ்சு
நாசஞ் செஞ்சதுன்னு
பொசுக்குனு கோபத்தில்
பொல்லாத வார்த்தைசொல்ல

புலம்பி அழுதா சுடலை
புருஷன் கருப்பனிடம்

தேவர்மகன் கருப்பன்
திடுக்கிட்டு தானெழுந்தான்

சாதிக்குறைவுடைய
சக்கிலிச்சியானாலும்
வச்சிருக்கேன்னு தெரிஞ்சும்

.

வல்லடியா பேசிட்டானா ?
நடுரோட்டில் விட்டு
வெட்டினான்
பன்ணையை

கருப்பனுக்கு தூக்கு
கண்டிஷனாச்சு

தூக்குல செத்தவனுக்கு
கட்டாத தாலியறுத்தா சுடலை

ஓயிலாட்டம்
மயிலாட்டம்
ஊரெல்லாங் கூடி
பேர் சொல்லிப்பாட

துடியான கருப்பன்
சுடுகாட்டில்
அமைதி கொண்டான்

இன்னமும்
கருப்பன்கள்
ஏராளம் எங்க ஊரில்

மானம் பாத்த பூமியிலே
மனுச உசுர்
மசிராக்கும்.

10.

வில்லுப்பாட்டு
பொன்னம்மா வீட்டில்
விடிய விடிய
விளக்கெரியும்

போற வர்ற பெண்கள்
புலம்பல் தெருநிறைக்கும்

செட்டியார்
வர்றதும் தெரியாது
போறதும் தெரியாது

மயிலக்காளை வண்டிச்சத்த
மகிமை ஊரறியும்

11.

எலெக்ட்ரிக் தூண் நட
வானுயரக் கட்டடம் கட்ட
கடல்நடுவே பாலங் கட்ட

அரபுதேசத்தில்
அடிமை சேவகம் பண்ண

காலாட் படையில்
துப்பாக்கி ஏந்தவென

தெக்கத்தி மறவர்
தேசாந்திரமாய் திரிய
ஊர் திரியும்
பாலையாய்….

12.
அப்பா

பால்ய வயதில்
குளிக்க கூட்டிப்போய்
நந்தவனம் காட்டியது

சாப்பிடும் போதும்
புத்தகம் படிக்க
பழக்கியது

பெரிய ஹோட்டல்களுக்கு
கூட்டிப்போய்
விதவிதமாய்
ருசி வளர்த்தது

எட்டயாபுரசமஸ்தான விருது
முக்கூட்டைக் காட்டி
சினிமாவில் சேரச்சொல்லி
சென்னை விரட்டியது



பகல்தூக்கம்
வாய்துடுக்கு
முன்கோபம்

குளித்த துண்டுடன்
சூர்ய நமஸ்காரம்

’இருந்தா
நீகுடி நான்குடி
இல்லேன்னா
இருக்கு பீடி’
எல்லாம்
அப்பா எனக்கிட்டுப்போன
அட்சதைகள்



14.
அம்மா
குடிக்கப் பயந்து
நண்பனின் மிலிட்டிரி மாமாகுடுத்த
குவார்ட்டரை
முதன் முதலாக குடித்தது
அம்மாவோடுதான்

தூக்கம் வராது புரண்டால்
“எதையாவது குடிச்சிட்டுபடேன்”
 யோசனை சொன்னவள்
அம்மாதான்

தெருச் சண்டியனை
‘கரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா
எம்புள்ளை பேச்செடுத்தா
குரவளைய கடிச்சிருவேன்’
என்றதில்




ஊறிக்கிடந்த மறத்தியாய்…
அப்பா இருக்கும்போதும்
இப்பவும்
எப்பவும்
அம்மா என்காவல் தெய்வம்

எட்டூருச் சண்டைக்கும்
எதிர்ச்சண்டை போடவும்


ஆதி மனுஷியாய்
சூலம் ஏந்தாமல்
சூன்யம் வெறிக்கமால்
நூல்சேலை கொசுவத்தில்
எல்லாத் தாயும் போல்
 காலமாகி இருக்கிறாள்
என்னோடு……….

           புறநானுற்று தாய்ப் போல ஒரு தாய்
-     விக்ரமாதித்யன்
வெகு ஜனங்களின் வாழ்வுதான் தமிழ் வாழ்வு. இதனாலேயே தமிழ்ப் பெருங்குடி மக்களின் வாழ்வு இலக்கியம் ஆகும் போது சந்தோசமாக இருக்கிறது இதை சரியாக எழுதுகிறவர்கள் சகாக்கள் ஆகிறார்கள். இந்த மகத்தான இனத்தின் வாழ்வு அனுபவங்களை சொல்லுகிறவர்களும் உணர்வு அலைகளை ஓர்மையோடு வார்த்தைக் கலையில் கொண்டுவருபவர்களும் தமிழுக்கும் தமிழ் சமுகத்துக்கும் தலையாய தொண்டு செய்கிறார்கள்.
   இவ்விதமாக தமிழ் வாழ்வைச் சிறப்பாக எழுதி வருகிற மிகச்சிலரில் விசேசமாக சொல்ல வேண்டிய ஒருவர் வித்யாஷங்கர். வித்யாஷங்கர் அடிப்படையில் கலைஞன். துடியானவர். ஜீ.வீ ஐயரின் ஆதிசங்கரா படத்துக்கு உதவி இயக்குனர். கோயில்பட்டிக்காரர் கெளரிஷங்கரின் கண்டுபிடிப்பு.
     நக்கீரன் துரை வெறும் அரசியல் பத்திரிகைகாரர் இல்லை. அது தொழில் அவ்வளவுதான். அதில் ஒன்றும் பெருமை இல்லை அவருக்கு. சமகால இலக்கியம் படித்தவர் மாஸ்மீடியாவில் வெற்றி கண்டவர் இதில் படிப்படியாக முன்னுக்கு வந்தவர்
      வித்யாஷங்கர் கவிதைகள் ஊரை, உறவை இளம் பருவத்தை நினைவு கொள்பவை. இன்றில் பொருந்திப் போக முடியாத தவிப்பில் மனசுக்கு பிடித்தவற்றை நினைத்து ஏக்கம் கொள்கிறவை. எளிமையே இயல்பாகக் கொண்டவை. மனத்தடை இல்லாதவை.
  இவர் கவிதைகளில் பூராவும் தென்பாண்டி நாட்டின் மனித ஓவியங்கள் நிறைந்து இருக்கின்றன. சுய அனுபவங்கள் தோண்டி எடுத்த கிழங்குகளாக குவிந்து கிடக்கின்றன. தெய்வங்கள் கூட கருப்பசாமி, மதுரைவீரன், அங்காளபரமேஸ்வரி, இருளப்பசாமி தான். எல்லா கவிதைகளுமே உணர்வுத் தெறிப்புகள். நமது மரபின் தொடர் வரிசைதான் இவை.
   வழமையான  நவீன கவிதையில் இருந்து ரொம்பவும் வித்தியாசமானது இவருடைய அம்மா கவிதை.
  “குடிக்கப் பயந்து நண்பனின் மிலிட்டிரி மாமா குடித்த குவார்ட்டரை முதன் முதலாகக் குடித்தது அம்மாவோடுதான்”.
   குடிக்கப் பயந்து  கொண்டு இருந்த காலம் நண்பனுடைய மிலிட்டரி மாமா
இவர் குடிப்பாராக்கும் என்று நினைத்து கொடுத்து விடுகிறார்,. பயப்படும் பிள்ளை வெளியே எங்கே- தனியாக- குடிக்கும். விட்டுக்கே எடுத்துக் கொண்டு வந்துவிடுகிறது. இப்படித்தான் அமைந்து இருக்கும், போல. முதன் முதலாக குடித்தது அம்மாவோடு என.
   இன்றைய தமிழன் குடிப்பதில் மனத்தடை உள்ளவன். ஒரு மலையாளிக்கு இது பிரச்சினை இல்லை. ஒரு இலங்கை தமிழனுக்கு இப்படி இல்லை. குடிப்பதே தப்பு என்று கருதப்படுகிறது இங்கே. வீட்டில் குடிப்பது வழக்கத்தில் இல்லாதது. அதுவும் அம்மாவோடு ? நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். உயர் ஜாதி இந்துக்கள் என்போருக்கு புதிதாகத்தான் படும். அவர்கள் வாழ்க்கை முறை அப்படி. அது ஆசாரங்களினால் கட்டப்பட்டது. நியதிகளில் வளர்த்து எடுக்கப் பட்டது. எனில் வேறு வாழ்க்கை முறை இருக்கிறது. சங்ககால தமிழர் வாழ்வில் கள் உண்ணுதல் இயல்பு. கள்ளுண்ணாமை வள்ளுவர் சொல்லுவது. ஒளவையாரின் கவிதை ஒன்றில் கள் மணக்கிறது. அவர் கள் குடிக்கிறார்.
    தூக்கம் வராத புரண்டால் எதையாவது குடிச்சுட்டு படேன். இப்பவும் யோசனை சொல்பவள் அம்மாதான்.
     பிள்ளை பெரியவன் ஆகிவிட்டான். பொறுப்புகள் சுமைகளாய் அழுத்த, பிரச்சனைகள் தகிக்க, தூக்கம் வரமாட்டேன் என்கிறது. தூக்கம் மனிதனுக்கு மிக முக்கியம் தூக்கம் இன்மையவிட குடி மோசமில்லை. போதை தூக்கம் கொண்டிவரும். ஆழ்ந்த தூக்கம் நல்லது. ஆரோக்கியம் காப்பது தொடர்ந்து தூக்கம் இல்லாது போனால் பேதலிப்பு நேரும். அது வேண்டாம். குடித்து படுத்துத்தூங்கலாம். தப்புயில்லை. தூங்காமல் இருப்பது தான் கெடுதி. தாய் அறிவாள் தன் மகனின் நல்லது கெட்டது.
   தெருச்சண்டியனை கரண்டைக்கால் மயித்துக்கு ஆவியா எம் புள்ளை பேச்செடுத்தா குரவளைய கடிச்சிருவேன்  என்றதில் ஊறிக்கிடந்த மறத்தியாய்…
   தெருச்சண்டியனுக்கும் இவருக்கும் என்னவோ தகராறு. விஷயம் தெரிந்ததும் சத்தம் போடுகிறாள் தாய். சண்டியன்
இப்படியாகும் என்று நினைத்திருக்க மாட்டான்.
   ஊறிக் கிடந்த மறத்தி = அச்சம் அறியாத – மறக்குணம் கொண்ட தாய், மறம் = வீரம், அஞ்சாமை, மனத்துணிவு, மறம் நல்ல பண்பு. தமிழ் இயல்பு இருக்க வேண்டிய குணம் பேண வேண்டிய தன்மை. ஆதிதமிழர் சொத்து. மறம் உடை யோர் மறவர். அறம் சார்ந்த மறம் உலகில் நிலவ வேண்டியது.அதுதான் தமிழர் வாழ்வாக இருந்தது.  இப்போது வேண்டியதாக இருக்கிறது. அறம் இணைந்த  மறமே தமிழர் போற்றியது.
காப்பாற்றி வந்தது. புறநானுற்றுப் பாடல்கள் இதையே பேசுகின்றன.
. மேலும், எல்லாக் காலத்திலும் மறத்தின் துணை கொண்டே அறம் கொண்டு செலுத்தப்பட்டு வருகிறது. உய்ர்வுகளையும் மேன்மைகளையும் மாற்றுக் குறையாமல் வைத்திருப் பதற்கே மறம் இன்றியமையாததாகிறது. மறம் இல்லாது அறம் காப்பாற்ற இயலாது.
    இப்படி அறச்சார்பு கொண்ட மறத்திதான் கவிஞர் அம்மா. அம்மாவின் மறப்பண்புதான் மகனிடம் வம்புக்கு வரும் தெருச்சண்டியனை சத்தம் போட்டு வக்கிறது.சண்டை பிடிக்கிறது.சவால் விடுகிறது.குடித்துவிட்டு படுக்க யோசனை சொல்கிறது. ஒளவையார் போல் இருக்கச் செய்திருக்கிறது. கவிஞருக்குக். காவலிருந்து காக்கிறது. எல்லாமே அறம் சார்ந்த மறக்குணம்தான்.     
   அப்பா இருக்கும் போதும் இப்பவும் எப்பவும் அம்மா என் காவல் தெய்வம்”
   அப்பா இருக்கிற காலத்திலும் அம்மாதான் இவருக்குக்காப்பு. அப்பா இல்லாத இப்போதும் எப்போதுமே அம்மாதான் இவருக்கு  காவல் தெய்வம்.
    “எட்டூருச் சண்டைக்கும் எதிர்சண்டை போடவும் இத்தனை வயசிலும் அம்மா இருக்கிறாள்”
    பிள்ளை தைரியமாக இப்பான். அம்மா இருக்கிறாள் எது ஒன்றுக்கும். எட்டூருச் சண்டயும் வரட்டுமே, எதிர்சண்டை போட அம்மா இருக்கிறாள். எவனுக்கும் பயப்பட வேண்டாம். அம்மாவைப் பார்த்துப் பார்த்துப் பிள்ளக்கும் துணிச்சல் ஏற்பட்டிருக்கும் இப்போது. எதையும் எதிர் கொள்ளலாம். யாரையும் எதிர்த்து நிற்கலாம். யாருக்கும் சவால் விடலாம். அம்மாவின் மறம் இவருக்கும் படிந்திருக்கும். ரத்தத்தில் கலந்த உணர்வு சித்தத்தில் வந்திருக்கும். இனியென்ன எல்லாம் ஜெயம்தான்.
   “ஆதி மனுஷியாய் சூலம் ஏந்தாமல் சூன்யம் வெறிக்காமல் நூல்சேலை கொசுவத்தில் எல்லாத் தாயும் போல”
    சூலமேந்தி, சூனியம் வெறித்து நிற்கும் பராசக்தியாக அல்ல, எல்லாத் தாயும் போல் நூல் சேலைக் கொசுவத்தில் ஆதிமனுஷியாய் மண்சார்ந்து, மரபு சார்ந்து, மனம்  சார்ந்து இருக்கிறவள் கவிஞரின் தாய் . அதுதான் நிகழ்வுகளுக்கு எதிர்வினை கொள்கிறாள். பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறாள். கணக்குத் தீர்க்க வேண்டியதைக் கணக்குத் தீர்க்கிறாள். காப்பாற்ற வேண்டியதைக் காப்பாற்றுகிறாள். . கவிதையாகியிருக்கிறாள்.
    ஞானக்கூத்தனின் அம்மாவின் பொய்கள், ராஜசுந்தரராஜனின் அம்மா, என்னுடைய நிகழ்வுகள், வித்யாஷங்கரின் அம்மா, தவிர நகுலன் கவிதைகளில் வரும் அம்மா.கலாப்ரியா கவிதைகளில் வரும் அம்மா பழமலய் கவிதையில் தொடர்ந்து தாய்க்கு இருந்து வரும் ஸ்தானம்.
      வித்யாஷங்கரின் கவிதை புறாநானூற்றுப் பாடல் போலவே இருக்கிறது . புதிய புறநானூற்றுப் பாடலில் வரும் தாய்  போலேவே இருக்கிறாள் இந்தத் தாயும். இதுதான் இரண்டாயிரம் ஆண்டு மரபுத் தொடர்ச்சி. மாறாத தமிழ் வாழ்வு. இது போல உண்மையான கவிதைகளே இன்றைக்கு வேண்டும். இவை போன்றவைதான் நவீன கவிதையைக் காப்பாற்றித் தரும்.
சுபமங்களா இதழில் வெளியானது.
          

விதயாஷங்கரின் அம்மா ஒரு நல்ல கவிதை. இந்தக் கவிதையில் ஒரு வாழ்வு இருக்கு. ஒரு கலாச்சாரம் இருக்கு. உறவு முறைகளின் உயிர் இருக்கு.ஒரு கதை இருக்கு. ஒரு கதையே அடுத்த அடுத்த சம்பவங்களோடு கவிதையா விரியுது. இந்தக் கவிதைய நாடகமா போடலாம். நாடகத்துக்காக ஏன் வேறு எங்கெங்கோ கதை தேடி அலைகிறீர்கள் ?
-    எழுத்தாளர் சுஜாதா
(மதுரையில் 93 நவம்பரில் நடைபெற்ற ‘சுபமங்களா’ நாடக விழாவின் தலைமை உரையில் பேசியதிலிருந்து
       


16.
இன்னமும் இருக்கிறது
ஏழு வீட்டுக்குமான தென்னை
இன்னமும் இருக்கிறது
ஏழு வீட்டுக்குமான முருங்கை

இன்னமும்
இருக்கிறது
எழு வீடு
ஏழு கைமாறி

17.

கருப்பட்டி மிட்டாய்க்கு
பிள்ளை அழ

கைதட்டலிடையே
கரகாட்டக்காரிக்கு
ராசாத்தேவர் அன்பளிப்பு
நூத்தியோன்னு

18.
அப்பத்தாவால்
காதாட்டாமல் பேசமுடியாது
போட்டுக் கழட்டி அடகுவைட்த
பாம்பட நினைப்பில்
செத்த பின்னும்
காதாட்டிக் கொண்டே போனாள்
பாடையில்…

19.
காப்பு கட்டுன பின்னாலே
கறி சாப்பிடக் கூடாது
கள்ளு குடிக்கக் கூடாது
கன்னி வாடை ஆகாது

சாமக் கொடையில்
படையலிட்டுக் காத்திருக்கும்
கள்ளும் சாராயமும்
ஆடும்
கோழியும்

20.
குடும்பம் விளங்க
கும்பிடப் போன
குலதெய்வம்
இருளப்பசாமி

ஊரோரக் காட்டில்
ஓத்தை ஓருத்தராய்
விளக்கேத்த நாதியின்றி
வெட்டவெளிப் பொட்டலில்….

21.

சந்நதம்

மாறுகால் மாறுகை கொடுத்த
மதுரை வீரசாமி
மகிமை குறையாமல்
சந்நதம் கொண்டிருக்கிறார்
சாராயக் கடைகளில்…

22.
சாமக்கொடை
பதினெட்டு பட்டி கூடி
படையலிட்டு காத்திருக்க
பெரிய வீட்டு சாந்திமேல்
சந்நதம் கொண்ட அம்மன் கேட்டாள்
‘என்னடா மகனே
வேண்டும்’

எப்படிக் கேட்பேன்
இத்தனைபேர் மத்தியில்
நீதான் வேண்டுமென்று…!

(ஆனந்த விகடன்
பவளவிழா போட்டியில்
சுஜாதா தேர்வு செய்தது)

23.
வீடு பேசி முடித்தாயிற்று
விற்பனை பத்திரத்தில்
கையெழுத்திட
அப்பா
அண்ணனையும் என்னையும்
தயங்கியே அழைத்தார்

திரும்பும் போது
ஏனோ
பேச எதுவு மற்றவர்களாய்
நடந்தோம்

‘கும்பிட்ட
குலதெய்வம்
குடிக்கொண்ட வீடென்று’
அரற்றினாள் அப்பத்தா

குலதெய்வத்துக்கு எங்கேனும்
குடியிருக்கக் கிடைக்குமா
வாடகை வீடு ?

24.
பால்யம்

வண்ணப் பம்பரமும்
பளிங்கு கோலிக் குண்டுகளும்
சேர்த்து வைத்த தீப்பெட்டி படங்களும்
பத்திரப் படுத்தி வைத்து

பறிபோன தெப்படி
காவலுக்கு வைத்த
கருப்பசாமிக்கே வேளிச்சம்

25.
பயணத்தின் போது
தூங்காதீர்கள்
விரைவாய்
கடக்கும் நொடியில் கூட

எங்கேனும்
ஓரு சிறுவன்
வண்ணத்துப் பூச்சிக்காக
அலைந்து கொண்டிருபபான்….

26.
ஊர்க் கஞ்சி ஊத்தி
உத்தரவு கேட்டு
ஓடுங்கிப்போய்நிற்க்கும்
ஜனம்

அருவாளும்
சாராயமும்
அவிச்ச குடல்கறியும்
படையல் செய்து வைத்தும்

சாமக் கொடை
தாமதமின்னு
சண்டித்தனம் பண்ணும்
பதினெட்டாம்படி
கருப்பசாமி

உயரே இருந்தாலே
சாமிக்கும் கோபம்
சட்டுனு வரும்.

27.
பொன் வண்டுகள்
தீப்பெட்டியில்
முட்டையிட்டு
அடைகாக்க

கருவமுள் இலைதேடி
காலில் முள்குத்தி பட்டவலியும்
அடியும்
மறந்தே போச்சு

இப்பவும்
கனவுகளில்
முட்டையிட்டு
குஞ்சுபொறிக்கும்

பொன் வண்டுகள்
ஏராளம்
எனக்குள்.

28.
திரும்பத் திரும்பவரும்
தேவைகள்

தெருவே
அல்லோ கல்லோலப் பட்டது
அவள் வீடு
மாற்றி வந்தநாளில்

மாலையே
பம்படியில்
நான் நீயென்று
போட்டி போட்டு
தண்ணியடித்து கொடுத்தோம்

சரோஜாதேவி மாதிரி
இல்ல… சாவித்ரி மாதிரி
இல்லேடா அலேக் நிர்மலா
ஆளாளுக்கு அளந்தோம்…
ஓருநாள் அவளுக்கு
ஜியாமெட்ரி பாக்ஸ்
இரவல் கொடுத்து
கணக்கு வகுப்பில்
பெஞ்ச் மேல் நின்றேன்





எல்லோரிலும் பெரியவனான
மகா ஓருநாள்
என் எதிரேயே
மடக்கி நிறுத்தி
அவளை முத்தமிட்டான்

இன்னொருவன்
கிறிஸ்துமஸ் வாழ்த்தனுப்பினான்

நான்
சிலுவைபோட்டு
கூடவே சர்ச்சுக்கும் போனேன்

நர்ஸ் டிரெயினிங் முடித்தவள்
வங்கி மேனேஜரை
காதலித்து
கலப்பு மணம் செய்து கொண்டாள்

எல்லோரிலும் இளையவன் தான்
அவள் கல்யாணநாளில்
விஷம் குடித்துப் பிழைத்தான்

இப்போதும்
எங்கள் பையன்களுடன்
அவள் மகள்
சிரிக்காமல் பழகாமில் இல்லை.

29.
பார்வைக் குடையின்கீழ்
பருவமழை நனைக்க
பறிகொடுத்து
பரிதவிக்க நின்ற க்ஷணம்

அப்பாவின் அதட்டல்களை
அலட்சியமாய் ஓதுக்கிவிட்டு
அடுக்களையில் கிசுகித்த
அந்தரங்கம்

கிறிஸ்துமஸ்
நடுநிசியில்
தேவன் வருகைக்காய்
எல்லோரும் காத்திருக்க

என்வருகை கண்டவுடன்
மல்ர்ந்த விழிச்சிரிப்பு

எல்லாமே மறந்துபோச்சா
ஏதேனும் நினைவிருக்கா ?

30.

சளி நிறைந்து சூழ
மெல்லத் துடித்துக் கொண்டிருக்கும்
இருதயம்

களவுபோன ஓவியங்கள்
கை திரும்பாமலே….

பறிபோன வருஷங்களோடு
இந்த மார்கழி
இன்னொரு வருடத்தைக் கூடும்

எப்போதும் போல்
மப்ளர் தலையோடு
பால் வாங்குவோரும்
பனியும்
வாசல் கோலமும்
அவளை நினைவுபடுத்திக்
கடக்கும்
எனக்கு.

31.
முள்ளில் நின்று
மலரில் தேடி
எங்கோ பறந்து கொண்டுதானிருக்கிறது
என் கைப்பிடி நழுவிய
வண்ணத்துப் பூச்சி…




32.
ஜன்னலோர சீட்டிலமர்ந்து
கையசைத்து
கடைசியாய் உதிர்த்துப்போன
புன்னகையை மட்டும்
காப்பாற்றி வருகிறேன்
களவு கொடாமல்.

33
வடக்கூர்
தெக்கூர் ஜனங்களில்
பாதிக்கு மேல்
பஞ்சம் பிழைக்க
நகரத்து பிளாட்பாரங்களில்
தஞ்சமிக்க

ஏகமாய் இளவட்டங்கள்
குதித்துக் குளிர்ந்த கிணறுகள்
பாசிபடர்ந்து நீர்வற்றி
பாழ் எனக்கிடக்க

கானல் நீர் பறக்க
கரிசல் வெளிகளுக்கிடையே
பச்சைப் பட்டில் புருஷனோடு
பவிசாக வருகிறாள்

அம்மனுக்கு
கொடை கொடுக்க…

34.
இருக்கவும் மாட்டாமல்
எழுந்தோடவும் முடியாமல்

இருந்து தவிக்கிறாள்
என் வித்யா
கல் தாமரையில்

35.
சித்ரா பெளர்ணமிக்கு
செண்பகாதேவி
சன்னதி முன்
மஞ்சள் மழை பெய்கிறதாம்

கூட்டம்
சேர்ந்து சேர்ந்து
அருவிக்கு அப்பாலேயே
ஆளை விரட்டுகிறதாம்

சித்திரசபை
சீந்துவாரற்று
சீரழிகிறதாம்

நகரத்துப் பெண்களுக்கு
‘இன்னோசன்சி’
குறைச்சலாம்

36.
கடற்கரை காற்றில்
மணல் படிந்த
கன்னம் துடைக்காமல்
சொல்லிப் போன சி்நேகிதிக்கு
சொந்தமாய் வியபாரம் பண்ண
கம்ப்யூட்டர் உறவுப் பெண்
கை கொடுக்கிறாளாம்

மனசுக்கு
ம்ஞ்சல் மழை
வாய்த்தது
கம்ப்யூட்டர் ஸ்நேகம்

பூடத்து சாமிக்கு
நியான் விளக்கு உபயம்!

37.

நிலை

அருவிக்குளியல்
ஆசைக்காரனுக்கு
நகரம் தந்தது
பக்கெட் வாட்டர்



38.
எல்லா வண்ணமும்
பூச்சுத்தான்
இயல்பான
நிறம் தொலைத்தால்
39
பூக்களையும்
தெருவில்தான் விற்கிறார்கள்
புழிதி படிந்தும்
மணம் போகாமல்…

40
அப்பா மூன்றாம் தலைமுறையாய்
சீட்டாடினார்

நான் முப்பத்திரேண்டாவது வயதில்
ஏழாவது முறையாக
வேலையை விட்டேன்

வருடந்தோறும் பொங்கல் படையலில்
சாமிக்கு குறைவைப்தேயில்லை அம்மா

41

எனதென்று
வைத்திருக்கிறேன் சில்
களவு கொடுத்தவளின்
நினைவுகள்

கட்டிக் கொடுத்த
பிற மனைப் பெண்களின்
முத்த இரவுகள்

மாத விடால் காலத்தில்
புணர்ந்தால்
ஜன்னி வருமோவென
கேக்குப் பயந்து

அட்ரஸ் வாங்கிப்போன
தீவிரவாதி
பேங்க் கொள்ளையில்
பிடிபட்டு
போலீஸ் தேட
பயந்து ஓடியது
எனதென்று
வைத்திருக்கிறேன் சில.

42.
திருபம்பத் திரும்பத்
ஓரே மாதிரியாய்
பேச்சும்
சலிப்பும்
குடித்த்லும்
ஓருவரையொருவர் குதறலுமாய்

திரும்பத் திரும்ப
உறை கழட்டால்

வாள் வீசி
ரத்தம் கசிந்து
திரும்பத் திரும்ப
ஓருவருக்கொருவர்
எதிரெதிர் திரும்பலுமாய்

திரும்பத் திரும்ப
திரும்பவும்
நடப்பது ஏன் ?

சுற்றிச் சுழலும்
கிரகம் ஓன்பது
பூமியொன்று

43.

ஏகாந்த வேளையில்..
கூட்டுறவு சங்க ஊழிய
எழுத்தாளன்
சின்னஞ் சிறுபெண் போலே
பாடி அழாமலிருக்கமாட்டான்

தந்தி ஊழிய தத்துவக் கவிஞன்
மாடுகளோடு
சிநேகிப்பான்
வெளச்சல் நிலத்தை
விற்ற நினைப்பில்

நிலையான வேலையற்ற
நிரந்தரக் கவிஞன்
ஜாதியைப் பேசி
சண்டயிழுப்பான்
தவறாமல்

.

இவன்
மரபுபட்ட மனம் எகிற
நெஞ்சு நிமிர்த்தி
நெகிழ்ந்து
தாஸ்தாவோஸ்கியாய்
தானாக முடியாததற்கென்று
புலம்பித் தவிப்பான்
புல்லரிக்க

மாப்பிள்ளை
எழுத்தாளன்
கல்லுளி மங்கனாய்
இன்னுங் குடிக்கவும்
எதிர் கொண்டிருப்பான்

பேச எதுவுமற்று
வானம் வெறித்து……

44.


எப்போதோ அரைத்த
அரிசி மாவின்
எச்சம் ஓட்டியிருக்கும்
ஆட்டுக்கல்லில்

அரைபடாது
ஓரம் ஓதுங்கியிருக்கும்
பெருஞ்சீரகம்
பூண்டுத் தோல்
அம்மிக்கல்லில்

அப்படிக்கப்படியே
ஆண்ட பரம்பரையோ அடிமையோ
ஆபீஸ் குமாஸ்தாவோ அதிகாரியோ

அதனதன்
எச்சமிருக்கும்
இயல்பில்

45.
’பிரக்’டென்ன
ஓம் மாரிமுத்துவுக்கு விரோதியா
’காம்யூ’வென்ன
கோடாங்கிப்பட்டி தேவராட்டக்காரனுக்கு
வேண்டாதவனா

அவங்க சாப்பிட்டது
ரொட்டி
இவங்க சாப்பிட்டது
கம்மங்கஞ்சி

இடத்துக்கேத்த வெளச்சல்
வெளச்சலுக்கேத்த வயிறு
வயிறுக்கேற்ற உணவு

என்றாவது
ரொட்டியும் சாப்பிடலாம்
ருசிக்கு.

46
கங்கை கொண்டு
கடாரம் வென்ற
கேடயமும் கத்திகளும்
பார்வைக்கும்

கட்டணம்
ஐம்பதே காசு
மயிர் சிலிர்க்க வைக்கும்
மண்ணின் மைந்தருக்கு

மறவர் வீதிகளில்
ஈயம் பித்தளை இரும்போடு
அருவாளும் கிடைக்கும்
விற்பனைக்கு.

போஸ்டர்வாள் வீரர்கள்
ஆளுயரத்தில் சிரிக்க
மீசை கருகும் உயரத்தில்
ராஜராஜ சோழன்

.
கைவிரித்த காவிரியால்
கடாரம் வென்ற
வீரப்பரம்பரை
வேறுமண் ஏகுக்ம்
பஞ்சம் பிழைக்க

அரண்மனை
அந்தப்புறங்களில்
வெளவால் நாற்றம்
ஆளை விரட்ட

வேறு தேசத்து
ஆண்களும் பெண்களும்
வெகு தொலைவு தாண்டிவந்து
சிலாகித்துப் பார்க்கவும்
இருக்கு.. சில.

47
முடியவில்லை
பொத்திப் பொத்தி வைத்து
பொய்யாய் சிரித்தாலும்

கெட்டிப்பட்ட வாழ்க்கையை
கொட்டிக் கவிழ்க்கத் துடிக்கும்
மூளைப்புழு நசுக்க.

48

எண்களில்
லயிக்க மறக்கிறது
மனம்

எண்ணிக்கையில்
பணமோ பொருளோ
வீடோ ஆளோ
கதையோ கவிதையோ

நிர்ணயிக்கிறது
உலகம்

49
நட்டு வைத்த கம்பை
விடாமல்
பற்றி படர்ந்து வளர்கிறது
முல்லை

கொம்பில் கட்டியிருப்பதறியாது
மாடு சுண்டியிழத்து
வேதனைப படிகிறது

படரக் கம்பற்று
கயிற்றுக் கட்டில்
இழுபடுகிற

என் பகல்கள்
எப்போதும்
மேகம் மூடிக்கிடக்கிறது
மழையின்றி..

50.

ஆற்றின் நீரோட்டம்
பிடிக்குமெனக்கு

நகரத்து
ஹைஜீனிக்குக்கான
‘குளோரின் வாட்டர்’
மன்ங் குமட்டும்

நுரை பொங்க
செத்தை செதவலோடும்
பூ மிதக்கும் பொங்குபுனலே
எனக்கு
ஆறு !

51.
எருமைகள்
உரசப் போதும்
எதுவும்

மான்களுக்கு
மயிர் உதிர்ந்தாலும்
உரிர் சேதம்

52.

அங்கிருப்பதே
நலமென்பார் சிலர்

இங்கிருப்பதே
நலமென்பார் சிலர்

எங்கிருப்பதும்
நலமில்லை
இருப்பதைத்தவிர

53.
ஸார்ப்பங்களின் சீற்றமான முத்தம்
கனிகளாக உதிர்ந்து விழும்

ஸர்ப்ப மூச்சுக்கள் பின்னிய
இசைப்புனைவு கோலங்கள்
காற்றி அலைவுறும்

பேசாதா வார்த்தைகளாய்
கல்திருகையில் சுழலும்
பெண் உலகம் கண்ணில் நீர்திரள.

.
 கடுங்குளிரில்
தனிமையில் பழுந்திருந்த
கணம் ஒன்று
காலத்தை விலகி நகர்கிறது.


54
மீடியாவின்
பன்முககிரேன்
புல்டோசர்களால்
கலாச்சார
அக அழிப்பு

மீடியா நகரங்களில்
ஸ்பான்சர்ஷிப் வாழ்க்கை
வெகு ஜனங்களுக்கு

55.
பனி படர்ந்த வாசல்களில்
புள்ளிகள் கோலங்களாய் பூக்கும்
விரல்களுக்குள் புதைந்துகிடக்கும்
வித்தையும் விரகமும்

56
தீயடர்ந்த திராவகங்கள்
கோப்பையில்
உறைபனிக் கட்டிகளோடு
மெளனம் பேசும்

திராட்சை ரச வண்ணம்
கோப்பைக்குள்ளிருந்து
ஏந்திக்கொள்ள அழைக்கும்

கைரேகை பதிய
முத்தமிட்ட இதழ்களில்
விறுவிறுப்போற்றும்

காலிக் கோப்பைகளுக்குள்
மிச்சமிருக்கும்
காணாமல்போன
கனவுகள்

57.
அகதிகள்…..
அலையில் உயிர் தப்பி
கரையில்
அலைவுறும் கனாக்கள்

இருக்குமோ
தகர்ந்திருக்குமோ
விவரமறிய முடியாத
விசனம்

எரவாணத்தில்
சொருகிவைத்த
மயிலிறகு
குட்டிபோட்டிருக்குமோ
எதுவுமறியாமல்
கேட்பாள் நப்பின்னை

அகதிகளாய்
இங்கே நான்..
அங்கே அனாதயாய்
விளக்கேற்ற ஆளாற்று
இருளில்
காப்பாற்றுவாள் என்றெண்ணி
கைவிட்ட களி!
58

எழுத்துக்களை
விதைத்து விளைவித்து
அறுத்து
தின்று திளைக்கிறது உயிர்

மணலில்
கல்வெட்டில்
பனையோலையில்
காகிதத்தில் கிளைவிட்டு
கணினியில் பரவிநிற்கிறது

அவரவரும்
அள்ள முடிந்தளவு
அள்ளியும்
தோண்டத் தோண்ட
ஊறிக் கொண்டேயிருக்கிறது

திசைகள் தகர்த்து
திமிறி எறிகிறது
உயிர்ச் சுடராய்
59
எதுவெனச் சொல்
கண்ணிக்கு பச்சை தந்து
காற்றுக்கு உடலசைக்கும்
இலையா ?

கண்கவர்ந்து
மணந்ததும்
பூவா ?

பருத்த உடல் தனைக்காட்டி
பல்கூசச் செய்யும்
காயா ?

பற்றி பல்கடிக்க
பறிந்தவுடன்
நாவினிக்கும்
பழமா ?

கிளையெல்லாம்
உதிர்ந்த பின்னும்
மண்ணோடு மண்ணாக
மறைந்திருந்து
தாங்கிநிற்கும் வேரா ?

இதில் நீ
எதுவெனச்சொல்.

60
எனது ஸ்தல ஸ்வாமிகள்

இருளப்பசாமி
ஏகாங்கி
பார்வைக்குப் பொட்டலும்
பட்டினிப் பட்டாளமும்
திசையெட்டும்

இருந்தாலும்
கை அரிவாளை
கவனம் தப்பி
கால் உடைத்துக்கொண்ட
இருளப்பசாமி
ஏகாங்கி

அகிலாண்ட நாயகி
பிரம்மாண்டதேவி
இராஜராஜேஸ்வரி
வேப்ப மரத்தடியில்
நீரற்ற குளமும்
விளைச்சலற்ற பாலையில்
வீரியம் குறைந்து
சேலை நேர்த்திக் கடனுக்கு
ஆள் தேடி அலைவாள்.
61.
சரவெளி

நட்சத்திரங்கள் குடித்த நீர்
ஓளிசிவந்த உயிராய்
கடல்பாசியில்

மிருகவயல்களாலான
சிற்பவயல்…

மொட்டைப்பனையில்
மரங்கொத்தியின்
ஐந்துவர்ண இறகுராகங்கள்

கன்னியின் நேத்திரத்தில்
உயிர் குடிக்கும் வெறியும்
அழல் முலைகளின்
பால்பதையில்
எவரும் எதிர்ப்படமுடியாத
அச்சமுட்டும் வெளிச்சக கதிர்களும்

சாம்பல்செடிகளில்
புதரில் மண்டியிட்டு
இலைகளைத் தழுவுகிறார்கள்
பார்வையற்றவர்கள்



62
ரணப்பட்டு
சீழ் வடியும்
துளைபட்ட
நெஞ்சின்
துயர்மிகும்
வார்த்தைகள்
இம்சிக்கும்
ரசணையற்ற கவிதையாய்
உன்போல் என்னையும்

63.
நிர்ப்பந்தங்களால்
பினைக்கப்பட்டு
இழுபடுகிறது வாழ்க்கை

இருளைக் கடக்க
தெரியாமலும்
ஓளியை அடைய முடியாமலும்

சுயம் கொன்ற பின்
வாழ்வில் ஏது சுகம்

64
உப்புக்கடலுக்குள்
ஒளித்துறங்கும்
சுவைநீர் சுனை தேடி
எனக்கான வண்ணப்பூவை
இது வரை பார்த்தில்லை

எனக்கான வாசணயை
எந்தப் பூவிலும் நுகர்ந்ததில்லை

எனக்கான பூவொன்று
எங்கேனுமுண்டா?
அதற்கு இதழுண்டா?
காம்பூண்டா?
இலையுண்டா?
அது பூவா?
பறவையா ?

வானத்தில் பூத்துப் பார்த்திருக்கிறேன்
சிலநேரம்
பறந்தும் பார்த்திருக்கிறேன்
அதற்கென வண்ணமோ வடிவோ அற்றது

    




No comments:

Post a Comment