Sunday, September 13, 2009

செய்தியாளன், நான்

கண்மூடி கண் திறப்பதற்குள்
மின்கசிவு வெள்ளமென்று
பரவிய வதந்தி
கூட்ட நெரிசலில்
பள்ளி பிஞ்சுகள் 6பேர் டெல்லியில் பலி!

நான்கு கல்லூரி மாணவர்களை
சுட்டுக் கொன்றதாக ஒரு சேதி!

நிலநடுக்கத்தில்
நூற்றுக்கணக்கானோர்
இறந்ததாக வேறொரு சேதி!

இருதயம் வெளித்தெரிய
பிறந்த குழந்தைக்கு
திரும்ப பொருத்தியதாக ஒரு சேதி!

இலங்கை முகாம்களில்
உணவின்றி தினமும்
பத்துக்கும் மேற்பட்டோர்
பலியாவதாக ஒரு சேதி!

விமான ஓட்டிகளின்
வேலை நிறுத்தத்தால்
பலகோடி நஷ;டமென்று ஒரு சேதி!

மழை பொய்த்ததால்
மனைவி மகளை
உத்தரப்பிரதேச விவசாயிகள்
விற்பதாக ஒரு சேதி!
நட்சத்திர விடுதியில்
குண்டு வெடித்ததில்
வெளிநாட்டவர் பலர்
இறந்ததாக ஒரு சேதி!

ரத்தவங்கிகளில்
கலப்பட ரத்தம் விற்பதாக ஒரு சேதி!

வற்றாத அம்மன்குளம்
அபார்ட்மெண்டாக மாறியதாக
படத்தோடு ஒரு சேதி!

ஆர்ப்பாட்டம் மறியல்
பேரணி முற்றுகையென்று
அடுக்கடுக்காய் செய்திகள்

கண்மூடி திறப்பதற்குள்
கடவுள்கூட சுடப்பட்டிருக்கலாம்

24ஒ7 சேனல்கள்
சொல்லிக் கொண்டேயிருக்கின்றன
செய்திகளை

டிபன் சாப்பிட்டபடி
குடித்தபடி புகைத்தபடி
காதலியோடு சிரித்தபடி
எப்படி எப்படியோ..

செய்திகளை செய்திகளாக மட்டுமே
பார்க்கப் பழகிவிட்டன ஜனங்கள்

அளவுக்கு மீறி நஞ்சான அமிர்தம்

செய்திகள்
மனநுட்பங்களை போக்கி
மரமாக்கிக் கொண்டிருக்கின்றன
மனிதர்களை

செய்வதற்கொன்றுமில்லை
ஒன்று விடாமல்
சேகரித்து தந்து கொண்டிருக்கிறேன்
செய்தியாளன், நான்
- வித்யாஷங்கர்

4 comments:

  1. அருமையாக உள்ள கவிதையில் ..கவலைகிடமான வரிகள்; வருந்துகிறேன் :(

    ReplyDelete
  2. நேற்றைக்குக் காமராஜின் தளத்தில் எழுதினேன். அதேதான்.

    அதிகமான நஞ்சு புகட்டப்பட்டு எது எல்லையென யாரும் நிர்ணயிக்காது நமக்கும் சுயகட்டுப்பாடற்று எல்லையை மீறிவிட்டோம்.

    உடனடித் தேவை 200 சதவீதத் தொலைக்காட்சிப் புறக்கணிப்பு.

    வாட்டும் கவிதை வித்யாஷங்கர்.

    ReplyDelete