Thursday, September 2, 2010

காலடிச்சுவடில் கவிதை

சுலபமாக இருந்தது

சோவியத் கலாச்சார
அரங்கின் இருளில்
அருகருகேயமர்ந்து
ரோஷமான் பார்த்த போது

சாப்ளின் படவிழாவில்
பாப்கார்ன் கொறித்தபடி
சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டது

குளிர் இரவில்
கடற்கரையில்
துப்பட்டா தலை போர்த்திய
நிலவாய்
நீ கண்ணீர் உகுத்தது

சீசா ஆடிய
சிறுவர் சிறுமியாய்
மாறிய மகிழ்ச்சி
எல்லாமே சுலபமாகவும்
சந்தோஷமாகவும் இருந்தது

நீ உயர்ந்த இடத்தை
அடையும் வரை

இப்போதோ
எத்தனை திரைகள்
எத்தனை தடைகள்
நீயொருநாள்
இறங்கி வரும் வரை
காத்திருப்பேன்
கடற்கரை
காலடிச் சுவடுகளின்
கவிதையைக் கேட்டபடி
வித்யாஷங்கர்

No comments:

Post a Comment