Thursday, September 16, 2010

அம்மாவின் திதியும் அண்ணாச்சியோடு குற்றாலக் குளியலும்

கஷ்டமாகத்தானிருக்கிறது அம்மா என்னை விட்டுப்போய் ஒருவருடம் ஆகிவிட்டது.

13ஆம் தேதி கோவில்பட்டியில் அம்மா இறந்த திதி வருவதால் வரவும் என்று அண்ணன் ஏற்கனவே சொல்லியிருந்ததையொட்டி ஞாயிறு காலை புறப்பட்டேன்.

அச்சு மற்றும் பதிப்புரைத் துறை நண்பன் வாசு வந்து, அவனது டூவீலரில் அழைத்துப் போய் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விட சம்மதித்திருந்தான்.

12 மணியளவில் வீட்டிற்கு வந்த வாசு, அவனது வீடு மற்றும் அச்சகத்தை எனக்கு சுற்றிக்காட்டிவிட்டு அண்ணாச்சியின் (விக்ரமாதித்யன்) கட்டுரை தொகுப்புகளடங்கிய பேராறு என்ற புத்தாகத்தைக் கொடுத்தான்.

ஏற்கனவே தமிழ் வீடு ரிச்சர்ட் ஆனந்த் அண்ணாச்சியிடம் திருப்பி ஒப்படைக்கச் சொன்ன கவிதைரசனை பாதி இருட்டு பாதி வெளிச்சம், கவி மூலம் புத்தகங்களும் பையில் வைத்திருந்தேன்.

எதாவது சாப்டறீங்களா? என்று கேட்டு சாப்டலாம் என்று நான் தலையசைத்த பத்தாவது வினாடியில் அவனது வாகனம் நின்ற இடம் எம்.எம்.டி.ஏ. டாஸ்மாக் பார் வாசல்.

இருவரும் தனி மேஜையை ஆக்ரமித்தோம். அரை பாட்டீல் மேன்ஷன் ஹவுஸ் பிராந்தியும் ஒரு பீருக்கும் அவனுக்கும் எனக்குமான சிகரெட்டும் டம்ளர்கள் மற்றும் வாட்டர் பாட்டிலுக்கும் வாசு ஆர்டர் செய்தான்.

அவனுக்கு பீர், எனக்கு பிராந்தி இரண்டாவது மூன்றாவது ரவுண்டில் பீரும் பிராந்தியும் கலக்கப்பட்டது. மேலும் ஒரு பீர் பாட்டில் வரவழைக்கப்பட்டது.

பேச்சு ஆதிசங்கரா படத்திற்காக எனது பயணம் குறித்து வந்தது. இந்தியாவில் குளிக்காத நதியில்லை, பத்ரிநாத், கேதர்நாத் பயணமென்று விரிந்தது.

திடீரென வாசு மலைகளை பற்றி எழுதுங்கள் என்றான். நேற்று காலை டி.டி.பி.க்கு கொடுத்த நாவலின் பெயர் இமயத்தை நோக்கி என்றேன்.

மலையை எழுதத் தொடங்குங்கள் மாற்றம் வரும் என்றவன் தொடர்ந்து கவிதை நடையில்

கட்டிலிலே உயிர் நீத்த அன்னை

தென்கோடி பிறந்த பூமி நோக்கி

உன்னை அழைக்கின்றாள்

பூமி முகம் பார்த்து வா

புத்தொளி பிறக்கும்

என்று கூறி முடித்தான்.

ஏய்.. வாசு இப்ப சொன்னதை திரும்பச் சொல் என்றேன்.

அவனுக்கோ அவன் சொன்னதை திரும்பச் சொல்ல தெரியவில்லை. தெரியல என்றான். ஆனா நீங்க ஊருக்கு போய்ட்டு வாங்க.. நல்லது நடக்கும் போகாம இருந்திராதீங்க என்றவன் மேலும் ஒரு பீருக்கும், குவார்ட்டருக்கும் ஆர்டர் செய்தான்.

இதை கிளாஸில் ஊற்றும் போது நிறையத் தடங்கல் வரும் போகாம இருந்திராதீங்க என்று எச்சரித்தான். அடுத்த ஸ்டாப் தான் கோயம்பேடு இப்படிச் சொல்கிறானே என்று எண்ணி நீ வண்டியை கிளப்புனா 2 நிமிடம் என்றேன்.

ம்ஹீம். இனி வீட்டுக்கு தவிர எங்கேயும் வண்டிலே போகமாட்டேன்.

ஆனா நீ போகாம இருந்திராதீங்க

என்று எச்சரித்து விடை பெற்றான் நான் ஒரு ஆட்டோவில் ஏறி கோயம்பேடை அடைந்தேன். எனது பாஸை காட்டி சீட் பிடித்தேன். மணி 4.

கையிலிருந்த செல்போனுக்கு 50 ரூபாய் ரீசார்ஜ் செய்தேன். பேருந்து புறப்பட்டது. விக்ரமாதித்யனுக்கு போன் போட்டு பேசி முடித்தேன்.

50 ரூபாய் அவுட்.

அதிகாலை 3.40க்கு கோவில்பட்டி நியூபஸ்ஸ்டாண்டில் பேருந்திலிருந்து இறங்கினேன்.

அந்த நேரத்திலும் கதிரேசன் மலையில் விளக்குகள் அணிவகுத்து எரிந்து கொண்டிருந்தன.

(70) எனது கல்லூரிக் காலம் வரை ஆறுமணிக்கு மேல் அந்தப் பகுதிக்குச் செல்ல ஆட்கள் அஞ்சுவார்கள்.

பிரேமியோடு ஒரு மாலையில் சூரியன் அஸ்தமனப் பின்னணியில் பேசிக் கொண்டிருந்தது. நினைவுக்கு வந்தது.

4.30 மணிக்கெல்லாம் ஆட்டோ மூலம் வீடடைந்தேன். தூங்கி எழுந்து குளித்து தயாரானேன். (வேப்பங்குச்சியில் பல் துலக்கியது சந்தோஷமாக இருந்தது.) வீட்டில் எல்லோருமே பேஸ்ட், பிரஷ் தான்.

அய்யர் தனது இருசகாக்கள் மற்றும் காய்கறி, தான்யங்கள், பூ, பழம், ஹோம குச்சிகளோடு வந்து சேர்ந்தார்.

அண்ணனையும் என்னையும் விளக்கு முன் அமரவைத்து தலைவாழை இலைபோட்டு எல்லாம் படைத்தார், ஐயர். பித்ருக்களுக்கான பிண்டத்திற்கு சமர்ப்பணம் முடிந்ததும், அது ஒரு பாத்திரத்தில் சேர்த்து வைத்து எள்ளும், நீரும் விடப்பட்டது.

அந்த பாத்திரத்தை துண்டு போர்த்தி மூடி நான் ராமசாமிதாஸ் பூங்கா பின்புறமுள்ள கிணற்றுக்கு கொண்டு சென்றேன். மதியம் 12 மணி வெயிலில் நீண்ட நாளைக்கு பின் காலில் செருப்பில்லாமல் தண்டவாளம் கடந்து நடந்தேன். கூடவே, பேரன் ஆதியும் தொடர்ந்து வந்தான்.

இதற்குள் அண்ணன் போதையில் தூங்கிப் போனான். அக்கா, தங்கை என்று ஆளாளுக்கு வைதனர்.

நான் வெளியேறி கடைக்கு போய் குவார்ட்டர் வாங்கி மற்றொரு தங்கை வீட்டில் வைத்து நிதானமாக குடித்து விட்டு வீடு திரும்பினேன். (அது வேறு புகாராக மறு நாளாக எழுந்தது தனி)

(தொடரும்)

No comments:

Post a Comment