Sunday, September 19, 2010

பிஸ்கெட் பாபா தரிசனம்

2009ல் திடீரென தொடர்ந்து தினமும் எழுதுவது என்று முடிவெடுத்து நாளுக்கு பத்து குறளுக்கு நடைக்கேற்ற உரையை எழுதினேன். 1330 குறளும் எழுதி முடித்து தமிழன் டி.வி.யில் விட்டு வைத்திருந்தேன்.


ஓவியர் ஜானி அங்கிருந்து விலகியபோது நான் கேட்டுக் கொண்டதால் எடுத்து வந்து வைத்திருந்தார்.

இது நடந்து ஒரு வருஷமாச்சு. நேற்று வாசு போனில் பேசி அதை புத்தகமாக வெளியிடலாம் என்று கேட்டான்.

இன்று (ஞாயிறு) காலை வாசு வீட்டிற்கு வர, இருவருமாக பைக்கில் ஜானியை பார்க்க வருவதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

ஜானி மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலருகே காத்திருப்பதாகச் சொன்னார்.

இருவரும் அவரைச் சந்தித்து குறளுரை எழுதிய டைரியை வாங்கிக் கொண்டு பேசிவிட்டு புறப்பட்டோம்.

சட்டென வாசு, நேற்று போனில் பேசும் போது வடபழனியில் யாரையோ பார்க்கனும்னு சொன்னீங்களே என்றான்.

ஆமா, வடபழனி கோவில் பக்கத்துல ஒரு சாமியார் இருப்பதாகவும் போய் பார்க்கும் படியும் அண்ணாச்சி (விக்ரமாதித்யன்) கடந்த 6 மாதமாக வற்புறுத்தி வருவதாகத் தெரிவித்தேன். பைக் வடபழனி நோக்கி திருப்பப்பட்டது.

பைக்கில் போய் கோவிலுக்கு முன்பு இறங்கினோம். அங்கே பொம்மைக் கடை வைத்திருந்த ஒருவரிடம் சாமியார் பற்றிக் கேட்டேன் அவர் எதிரே இருந்த சந்தொன்றை காட்சி அதுக்குள்ளதான் இருக்கார் போங்க என்றார்.

வாசு அருகிலிருந்த கடையில் சால்ட் ரொட்டி கேட்டான். கடைக்காரர் ஸ்வீட் ரொட்டி தான் இருப்பதாகச் சொன்னதும, நாலைந்து கடை தள்ளியிருந்த பேக்கரிக்கு கூட்டிப் போனான்.

பால்கோவா நூறு போடு என்று கேட்டான் வாசு.

எவ்வளவு என்று கேட்டு 30 ரூபாய் என்றதும் நூற்றம்பது போடு என்றான். கூடவே சால்ட் ரொட்டி பாக்கெட் ஒன்றும் வாங்கிக் கொண்டான்.

ஒரு ஆள் போக வரக்கூடிய சந்து உள்ளே நுழைந்ததும் இடப்பக்கம் சற்றே உள்வாங்கிய எட்டடிக்கும் குறைவான நீல அகலமுள்ள அறை வாசலில் காத்திருந்த நாலைந்து பேரில் போங்க என்றார்.

அறை வாசலில் இருவரும் நின்றோம்.

சுவாமி ஜி, நாற்காலியில் சாய்ந்து கால்களை முன் இருந்த ஸ்டுலில் நீட்டியபடி வேட்டியும் மேலுக்கு வெள்ளை துண்டும், தாடியும், கலைந்த தலையுமாய் இருந்தார். அவரது இடப்பக்கம் சுவாமி ஜி, படத்தின் கீழ் வரிசையாக அடுக்கப்பட்ட பிஸ்கெட் பாக்கெட்டுகள் அவரது கைக்கெட்டும் தூரத்தில் மாலை அணிவிக்கப்பட்ட இன்னொரு பாபா படம் அதன்முன் ஸ்டாண்டிலும் பிஸ்கெட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்தது.

கீழே தரையில் இடப்பக்கம் இருவர் அமர்ந்திருந்தனர். சுவாமிஜி கீழே அமர்ந்திருந்த ஒருவரிடம் குனிந்து ஏதோ கூறிவிட்டு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்து கிளம்பு என்றார்.

அவர் வெளியேறியதும், நானும் வாசுவும் போய் அமர்ந்தோம். பால்கோவாவை கையில் வாங்கிய அவர் அதை தனக்கு இடப்பக்கம் வைப்பதா சற்றே தள்ளியுள்ள பாபா படத்திற்கு வைப்பதா என்று கைகளை முன்னும் பின்னுமாக நகர்த்தியதில் சற்றே குழப்பம் தெரிந்தது. பின்னர் அவரே ஒரு முடிவுக்கு வந்து பாபா பட ஸ்டாண்டில் வைத்தார்.

தனக்குத்தானே இரண்டாயிரம் என்று சொல்லிக் கொண்டவர் வாசுவை நோக்கி ஏற்கனவே வந்த இரண்டாயிரம், இரண்டாயிரம் டூ ஹென்ட்ரட் குடு என்றார்.

வாசு எழுந்து பர்ஸிலிருந்து 2 நூறு தாள்களை கொடுத்தான். அதை மறுபடி மறுபடி எண்ணிப் பார்த்து விட்டு வைத்துக் கொண்டு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை அவனது கையில் கொடுத்து கிளம்பு என்றார்.

நான் வாசுவிடமிருந்து டைரியை வாங்கி சுவாமி ஜியிடம் கொடுத்தேன். அட்டையை கண்ணருகே வைத்து கூர்ந்து பார்த்துவிட்டு திருப்பித்தா என்று என்னிடம் நீட்டினார். நான் பக்கங்களை புரட்டும் விதமாக டைரியை மாற்றி திருப்பி அவரிடம் கொடுத்து விட்டு அமர்ந்தேன்.

முதல் சில பக்கங்களை புரட்டிப் பார்த்தார். அவரது வாய்கல் ஒடு....கல்....ஒடு.. பால்கோவா என்றது காதில் விழுந்தது.

என்பக்கம் திருப்பி டைரியை கையில் கொடுத்து கிளம்பு என்றார்.

டைரியை வாங்கிக் கொண்டு வெளியேறி பின்னாலிருந்து குழாயில் தண்ணீரெடுத்து கால்களை கழுவிவிட்டு புறப்பட்டேன்.

வாசு பைக்கில் என்னை கூட்டி வந்து அலுவலகத்தில் விட்டுச் சென்றான்.

வழியெல்லாம் சதுரகிரி சித்தர் மலை குறித்து வியக்கவைக்கும் செய்திகளை சொல்லிக் கொண்டு வந்தான்.

2+2 என்பதாக மட்டும் வாழ்க்கை இல்லை. எப்படியோ அண்ணாச்சி பார்க்க வற்புறுத்திய பாபாவை பார்த்தாச்சு. ஆனால் அவரது பெயர் மட்டும் ஏனோ நினைவுக்கு வரமறுக்கிறது. (பரஞ்ஜோதி பாபா என்று அண்ணாச்சி சொல்லியதாக நினைவு) எனக்கு தராவிட்டாலும் பிஸ்கெட் பாபாவாக இப்போதைக்கு வைத்துக் கொள்வோம்.

2 comments: