பத்திரிகையாளராக அடிப்படை தகுதி எப்போதுமே சமூக அக்கறை இருக்க வேண்டும்.
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல என்ற மனப்பாங்குள்ளவர் பத்திரிகையாளராக முடியாது.
முதலில் சமூக அக்கறை தேவை. அது ஒவ்வொருவர் கொள்ளும் கொள்கை கோட்பாடு, அரசியல் சார்பால் வெவ்வெறு விதமாக வெளிப்படும்.
நித்யானந்தா விவகாரத்தையே எடுத்துக் கொண்டால்
அவர் இந்து சாமியார் என்பதால் தான் இழிவுப்படுத்துகிறார்கள்! அவர் பிராமணல்லாதவர், தமிழன் என்பதால் தாக்கப்படுகிறார்! என்ற கோணத்தில் பார்ப்பவர்களும் எழுதுபவர்களும் கூட இருக்கிறார்கள்.
ஒவ்வொரு செய்தியை வெளிப்படுத்துவதிலும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு நபருக்கும் கோணங்கள் வேறுபடும்.
சத்துணவில் 5 முட்டை வழங்கப்படும் என்பது சில நாளேடுகளில் தலைப்புச் செய்தி வேறு சில நாளேடுகளில் எங்கோ ஒரு மூலையில் கூட இடம் பெறும்.
சில ஏடுகள் இப்படியொரு செய்தியை வெளியிடாமல் கூட ஒதுக்கும்.
தற்போதுள்ள மீடியாக்களில் பலவும் அரசு ஆதரவு அல்லது அரசு எதிர்ப்பு என்ற இரட்டை நிலைபாட்டோடு பட்டவர்த்தனமாக இயங்குவதை பார்க்க முடியும்.
இலங்கைத் தமிழர் விவாகாரத்தில் தமிழ் பத்திரிகைகள் போட்டிபோட்டுக் கொண்டு வெவ்வேறு கோணங்களில் செய்தி வெளியிட்டது பல திரைக்கதைகளை மிஞ்சிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் வேண்டாம் என்று ஒரு பிரிவும், வேண்டும் என்று ஒரு பிரிவும் எழுதியும், அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
ஆனால் தேர்தல் முடிவுகள் மட்டும் பத்திரிகைகளின் கருத்துக் கணிப்பை பொய்யாக்கி விடுகிறதே ஏன் என்ற கேள்வி எழலாம்.
பொது ஜனங்கள், தங்களது கருத்துக்களை முன்வைக்க கிடைக்கிற ஒரே வாய்ப்பு தேர்தல் தான். அவர்கள் அன்றாடம் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளாமல் இல்லை. அது குறித்து அபிப்ராயமில்லாமலில்லை. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொண்டு விரோதத்தை சம்பாதித்துக் கொண்டு தினசரி வாழ்க்கை போக்கு பாதிக்கப்படுவதை விரும்புவதில்லை.
இந்த பொது ஜனப்பார்வையோடு துணிந்து கருத்துக்களை முன்வைப்பவர்களே பத்திரிகையாளர்களாக முடியும்.
விவரங்களை சேர்ப்பதில் கூடுதல் ஆர்வம் தேவை. ஒரு அமைச்சர் பெயரைச் சொன்னவுடன் அவர் அரசியல் வாழ்க்கை எப்படித் தொடங்கியது? அதற்குமுன் அவர் என்னவாக இருந்தார். யார் மூலம் அரசியலுக்கு வந்தார்? எந்தக்கட்சியில் என்ன பொறுப்பிலிருந்தார். பின் எப்போது வேறு கட்சிக்கு தாவினார்? என்னென்ன பதவிகள் வகித்தார்? இப்போது என்னவாக இருக்கிறார்? அவரது குடும்ப பின்னணி? சாதியப் பின்னணி? படிப்பு என்று அத்தனை விவரங்களையும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
அன்றாடம் செய்திகளை படித்துக் கொண்டு அது குறித்த அபிப்ராயங்களை ஏற்படுத்திக் கொண்டும் என்பதான தொடர்ந்த செயல்பாட்டின் மூலமே தேர்ந்த பத்திரிகையாளனாகத் திகழ முடியும்.
No comments:
Post a Comment