Sunday, September 26, 2010

செல்போன் கலாச்சாரம்

நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்தது செல்போன். அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் பலரும் தங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

நீங்கள் எப்படி வெளிப்படவிரும்புகிறீர்கள் அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது என சில உண்டு.

இப்போதெல்லாம் பெண்களில் பலர் காதில் வளையம் அணிவது போல ஹெட்போனோடு இருப்பதையே பார்க்க முடிகிறது. பேருந்தில் யாருடனோ பேசிக் கொண்டே பயணிக்கிறார்கள். கண்டக்டர் பாவம் யார் டிக்கெட் வாங்கணும் என்று கரடியாக கத்தி ஓய்ந்து ஸ்டேஜ் கடந்த பிறகு சாவகாசமாக டிக்கெட் கேட்கும் பெண்கள் பலரை பார்க்க முடிகிறது.

* பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி செல்போனில் பேசியபடியே பேருந்தில் ஏறுவதும் இறங்குவதையும் பார்க்கும் போது மனசு பகீரென்கிறது.

* பேருந்தில் செல்போனில் பேசும்போது சத்தமாக, தான் ஊருக்குப் போவதையும் எதிர் வீட்டில் வீட்டுச்சாவியை கொடுத்திருப்பதையும், திரும்ப நாலுநாள் ஆகும் என்பதையும் தெளிவாகத் தெரிவித்து திருடனுக்கு வெல்கம் சொல்பவர் பலரும் உண்டு.

* கூட்டம் நிறைந்த பேருந்தில், ரயில்களில் பலர் ஆபாசப்பாடல்களை செல்போனில் சத்தமாகப் போட்டு அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள்.

* கோவிலில் வலம் வரும் போது ஒருவருடைய செல்போன் ‘இச்சுத்தா இச்சுத் தா’ என்று கெட்ட பாட்டை ஒலிப்பது அந்தச் சூழலை பாழ் பண்ணுகிறது.

* ஒரு அலுவலகத்தில் இறந்த ஊழியர் ஒருவருக்காக எல்லோரும் ஓரிடத்தில் கூடி ஒரு நிமிடம் மவுனம் காத்தனர். அப்போது ஒருவருடைய செல்போனில் ‘அப்படிபோடு போடு’ என்று ஒலித்து அந்த சூழலையே கெடுத்துவிட்டது.

* சிலர் நம்மை பார்ப்பதற்காக, பேசுவதற்காக வருவார்கள். நம்மோடு இருக்கும் பத்து நிமிடத்தில் நாலைந்து அழைப்புகளுக்கு பதில் அளிப்பார் (விலாவாரியாக) ‘அப்புறம் பேசறேன் இப்ப ஒரு மீட்டிங்கில் இருக்கிறேன்’ என்று சொல்வதுதான் நாம் சந்திக்கச் சென்றவருக்கு நாம் அளிக்கும் மரியாதையாகும். மற்றது, அவரை அவமதிப்பதாகும்.

* சிலர் என்னை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று நட்போடு எண் தருவார். ஆனால் அவரை பத்து நாட்கள், பலமுறை தொடர்பு கொண்டாலும் போனில் கிடைக்க மாட்டார். இது நட்புக்கு ஏற்படுத்தப்படும் அவமரியாதை.

* ஒரு முறையாவது தொடர்பு கொண்டு நானே உங்களை இன்னும் சிலநாளில், சிலமணித்துளியில், ஒரு வாரத்தில் தொடர்பு கொள்கிறேன்; இப்போது வேறு ஒரு வேலையில் பிசியாக உள்ளேன். ஸாரி என்று தெரிவித்தால் உங்கள் மதிப்பு அவரிடம் உயரும். நீங்கள் ஒருவரிடம் அவசரமாக பேச நினைத்து மீண்டும் மீண்டும் அவரது எண்ணில் அழைத்து அவர் பேச மறுக்கிறபோதுதான் தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணர்வீர்கள்.

* ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் சத்தமாக பேசுவது, அநாகரீகம் மட்டுமல்ல, மற்றவர்களை பாதிக்கக் கூடியதுமாகும். பெண் பார்க்கப் போகிற ஒரு குடும்பம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க, பக்கத்தில் ஒருவர் போனில், ‘அட அந்த குடும்பம் கருமாந்திரம் பிடிச்ச குடும்பம்டா; அப்படியொரு தரித்திரியம்’ என்று பேசியதைக் கேட்டு அபசகுனமாக இருப்பதாக கருதி திரும்பிய சம்பவம் கூட கேள்விப்பட்டதுண்டு.

* சிலர் நாகரிகமற்ற முறையில் சுற்றியுள்ளவர்களை பொருட்படுத்தாமல் யாரையாவது திட்டுவது... அவன் பொறுக்கி... குருடன்... அயோக்கியன் அவனை வெட்டணும், குத்தணும் என்பது. சிலர் தன் காதலியுடன் பேசுவதை ஸ்பீக்கர் போனில் போட்டு கூடவுள்ள பலரும் கேட்கும்படி செய்கிறார்கள். இது தெரிந்தால் அந்தப் பெண்ணின் மனசு என்ன பாடுபடும். இப்படியா அந்தரங்கத்தை அசிங்கப்படுத்துவது.

* செல்போன் என்பது தொலை தொடர்பு சாதனம் என்பதை தாண்டி பந்தாவுக்கான சாதனமாக பலரால் கருதப்படுகிறது. ஒரு பிரமுகர் வரும்போது கூடவே ஒருவர் நாலைந்து செல்போனோடு அவருடன் கோவில் பிரசாதம் ஏந்திவருவது போல வருவது பார்க்க வேடிக்கையாக இருக்கும்.

* இப்போதெல்லாம் ரிங்டோன் வகையறாக்களில் அலுத்துப் போன பலர் பழைய டிரிங்.. டிரிங்.. சத்தமே டீசன்ட் என்று மாறிவருவது ஆறுதலான விஷயம்.

* இப்போது நேரும் பல விபத்துக்களின் பின்னணியில் எமனாக இருப்பது செல்போன் தான் என்பது வேதனைக்குரியது.

* செல்போனை எந்த இடத்தில் ஆப் செய்ய வேண்டும் என்பது தெரிந்து வைத்திருப்பது முக்கியம்.

* மருத்துவமனை போன்ற இடங்களில் செல்போனில் சிலர் பேசுவது நோயாளிகளை மேலும் பாதிக்கும்.

* இந்த நவீன யுகத்திலும் செல்போன் வைத்துக் கொள்ளாதவரை என்ன சொல்ல பாக்யவான் தான் அவர்.



(நாளையும் சில...........)

No comments:

Post a Comment