Tuesday, September 21, 2010

படைப்பிலக்கிய எழுத்துக்கள்

எழுதப்படாத இசைக்குறிப்புகள் காற்றில் பரவி இசைக்கிறது கலைஞனின் நாபிக்கமலத்தில்.

எழுத்து வசீகர மந்திர மாயை அதனுள் ஒளிந்தும் வெளிப்பட்டும் பூடகமாய் நிகழும்; நிழல் ஒவியம் கலையாய் விரிகிறது.

வனாந்திர காற்றின் ஓசையில் பேரருவியின் இரைச்சலில் நதியின் ஓயா சல சலப்பில் கடலின் அலைகளின் ஆரவாரத்தில் வார்த்தைகள் மயங்கி முழ்கி தெரிவிக்கிறது சந்தோஷ துக்கங்களை.

மொழியற்ற மொழிக்குள் கூத்துக்குள் நிகழ்கிறது கலை கோட்டுக்குள் பிடிபடாத ஓவியமாய் உளிக்கு தட்டுப்படாத சிற்பமாய், ஆட்டத்தை மீறி வரும் லயமாய், பிறந்த குழந்தையின் அசைவில் கண்ணில் இருக்கிற மொழிக்குள் பிறக்கிறது. எவனும் கண்டறிந்து தெரிவிக்காத கலை. அதை கலைப்படுத்தும் கவனத்தில் சிதைகிறது கலை. ஒழுங்கில் அல்ல. ஒழுங்கற்ற ஒரு லயத்தில் தகிக்கிறது கலை.

ஒழுங்குகளுக்குள் சமூகமும் மதமும் கடவுளும் இருக்க முடியும். கலை இவைகளுக்கு அப்பாற்பட்டது.

திட்டமிடுதலிலிருந்து நழுவி ஓடி திகைப்பூட்டுபவை. திடீரென தோனில் தொற்றும் வண்ணத்துப்பூச்சி. மேகம் திரளாது பூக்கிற வானவில்.

பூஜ்யங்களுக்குள்ளிலிருந்து பிறக்கிற புதிர் கணிதம். சொல்லியவை சொல்லாதவை இணைந்த சொற்பரப்பு. எழுதப்படாத இடை வெளிகளுக்குள் அர்த்தம் கூட்டும் கலை.

கோவில்களில் யாளியின் தொன்மத்திலிருக்கிறது. கலைஞனின் மிஸ்டிக். படைப்பாக்கத்தின் வியப்பாக இன்னமும் கோவில்களில் இருந்து கொண்டிருக்கிறது பார்க்கப்படாத யாளி.

லெமுரியாவில் இருந்திருக்கலாம் என்பதற்கான குறிப்புகள் எதுவும் தென்படவில்லை. யாளி என்றொரு பெயர் மட்டும் உச்சரிப்பில் இருக்கிறது. காலங்கடந்த வியப்பாய்.

அவமான அவமதிப்பில் பிறக்கிறது ஆர்வம். போர்களில் பிறக்கிறது யுத்தி. தொடர் ஒட்டப் பந்தயத்தில் உனது கையிலுள்ள வெற்றி இன்னொருவன் கைக்கு மாறுவது நிச்சயம். காலம் கைமாற்றும் காத்திரு.

நதிகளின் வேகத்தை கணக்கிட்டு குளிக்க முடியாது. வேகம் அதன் இயல்பு.

முழுக்கவும் மூளை பலம் இழந்து சுயபிரக்ஞை அழிவுற்ற நிலையின் சூன்யத்தில் கருவெடுக்கிறது கலை. சுழல், சுழல் மட்டுமே லயம். லயத்தில் திளைக்கிற மனசில் விஸ்வரூபம் காட்டுகிறது கலை. தானழிந்த வேளையில் தலை தூக்குகிறது கலை. பார்வையற்றவனின் பார்வைக்கும் விரிகிறது கலை உலகம்.

எழுத்து மூளையில் உதிக்கலாம். ஆனால் கலை இதயத்தில் பிறக்கிறது. மூளையின் இயக்கமற்ற தளத்தில் இதய லயத்தில் பிறக்கிறது, இதய லய சூட்சமம் பெருகி எழுத்தின் இடைவெளிகளில் கலையாகிறது. கோவில் பிரகாரங்களுக்கும் கர்ப்பகிரகத்துக்கு மிடையிலான விசாலப் பெருவெளி அமைதியாய் பிறக்கிறது.

வெளித் தெரியும் உருவம் வேறு, உள் வேறு, உள் அறிந்தால் உரு மாறும். உள் அறிய எழுத்து ஒரு மூலம் திருமூலம். உன்னை இழந்தால் உள் அறியலாம்.

வார்த்தைகளுக்குள் இடைவெளியில் சிதம்பர ரகசியம் கலை. வெட்டவெளியை உருவாக்கி வியக்கவைக்கும். புதுப்புது அர்த்தங்களை பிறப்பித்து உன்னை தன்னோடு பயணிக்க வைக்கும் மாந்தீரிக பாதை, வசியம். எழுதின மனசோடு படிக்கிற மனசை இழுத்துச் செல்வது. இரு மனங்களின் சங்கமத்தில் பதியமாகிறது உருவாக்கம். இருளும் ஒளியுமாய் நிழல் கீற்றாய் கண்ணாடிஒளிச்சிதறலாய். வனாந்திரத்தின் ஊடான புலியின் கால் தட சித்திரமாய் விபரிதம் விளைவிக்கும்.

No comments:

Post a Comment