Thursday, February 22, 2018

அண்ணாச்சி கவிஞர் விக்கிரமாதித்யன் சொல்கிறார்………..

அண்ணாச்சி கவிஞர் விக்கிரமாதித்யன் சொல்கிறார்………..
என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர் துரை(வித்யாஷங்கர்). எண்பதுகளின் தொடக்கத்தில் ஏற்பட்ட அறிமுகம்; என்னை முதன்முதலில் அண்ணாச்சி என்று அன்போடும், மரியாதையோடும் சொல்லி அழைத்தவர் இவர்தான்; இன்றைக்கு இலக்கிய உலகில் இந்த அண்ணாச்சி பட்டம் எனக்கு நன்றாகவே விளங்கித் துலங்கி வருகிறது.
கோயில்பட்டியில் நண்பர் கௌரிஷங்கர், துரைக்கு நவீன இலக்கியத்தைப் பரிச்சயம் செய்து வைத்தார். பட்டணத்தில், ஜனரஞ்சக பத்திரிகை matter எப்படி எழுதவேண்டும் என்று என்கூட இருந்து தெரிந்துகொண்டார். ‘தராசு’ பத்திரிகையில் செய்தியாளராகச் சேர்த்துவிட்டதிலிருந்து ‘நக்கீரன்’ இதழில் ஆசிரியர் பொறுப்பு வகிக்கச் செய்ததுவரை துரையின் வளர்ச்சியில் எனக்குப் பெரும் பங்கு உண்டு. இதனாலேயே துரை ‘சந்நதம்’ தொகுதியைக் கௌரிஷங்கருக்கும் எனக்கும் சமர்ப்பணம் செய்து தன் நன்றியறிதலைக் காட்டிக்கொண்டார்.
‘அஸ்வினி’யிலிருந்து கடைசியாகப் பொறுப்பாசிரியராக இருந்த பத்திரிகை வரை – ‘நவீன கவிதை’ உட்பட -  துரையின் சிறுகதைகளையும், கவிதைகளையும் வெளியிடுவதில் நான் பஙிகு பெற்றிருக்கிறேன். இதேபோல், என்னுடைய இரண்டாவது, மூன்றாவது, ஐந்தாவது தொகுதிகளின் கவிதைகளைத் தெரிவு செய்து , ‘எடிட்’ பண்ணித் தொகுத்துக் கொடுத்தவர் துரைதான். துரை, ஒரு நல்ல ‘எடிட்டர்’; தகுதியும் திறமையும் உணர்ந்தே தொகுப்பாசிரியர் பணியை அவரிடம் கொடுத்தேன். உள்ளூணர்வும் ஒரு தனி நுட்பமான மனசும் கொண்டவர்; கலை இலக்கியம் குறித்துத் தெளிவான சிந்தனை உடையவர். மண்ணின் மரபு தெரிந்தவர்; வாழ்க்கையிலிருந்து இலக்கியத்தைப் பார்க்கிறவர்; மனிதர்களிடமிருந்து உலகத்தைத் தெரிந்துகொண்டவர்; என்னையும் என் மனசையும் புரிந்துகொண்ட மிகச் சிலரில் ஒருவர்; என் கவிதைத் தொகுப்புகளுக்கு ஆசிரியராக இருப்பதற்குப் பொருத்தமானவர்.
‘ஆகாசம் நீல நிறம்’ தொகுதிக்குப் பிறகு என்னுடைய நல்ல கவிதைகள் பலவும், போதையில் நான் சொல்லச்சொல்ல நண்பர்கள் பதிந்து வைத்தவைதாம். ஆரம்பத்தில் சமயவேல்; ஈழ்த்துக் கவிஞர் ஆதவன்; வெகு அபூர்வமாய் விமலாதித்த மாமல்லன்; சில பொழுதுகளில் திருமேனி என்கிற சிவா; கொஞ்சக் காலம் வடிவேலு ராஜதுரை. என் கவிதை இலக்கிய வாழ்க்கையில் துரைக்கு முக்கியமான இடம் உண்டு என்பதைத் தெரியப்படுத்தவே இங்கே இதை எழுதுகிறேன். எனது நல்ல வாசகராகவும், நல்ல ரசிகராகவும், நல்ல விமர்சகராகவும் இருந்து என்னை ஊக்குவித்து மேனிலைப்படுத்தியதில் துரைக்குக் கணிசமாகவே பங்கு உண்டு. என்னுடைய நல்ல கவிதைகளையெல்லாம் வஞ்சகமில்லாமல் பாராட்டிப் பேசியிருக்கிறார். என்னை நானே நல்ல கவிஞன் என்று உணர வைத்ததிலும், இப்படி உணர்ந்ததில் உத்வேகம் கொண்டதிலும், உத்வேகம் கொண்டு நிறைய எழுதியதிலும் பின்னனியில் எப்போதுமே துரை இருந்து வந்திருக்கிறார். (இன்னொரு வகையில் சமயவேல், ஆதவன், நகுலன் முதலானோர்). நான் கவிஞன் என்றானதில் துரைக்கான பங்களிப்பு நிச்சயம் மகத்தானது. இன்னும் சரியாகச் சொன்னால், துரை எழுதியிருக்க வேண்டிய பல கவிதைகளை நானே எழுதிவிட்டேன், பத்து வருஷம் முந்திப் பிறந்துவிட்டதனால்.
திருநெல்வேலிக்காரர்கள் என்ற ஊர்ப்பற்று, தனிமை கொண்ட எங்கள் சென்னை வாழ்க்கை, ஒத்த மனசு கொண்ட சிநேகம், ஒரே இடத்திலேயே சேர்ந்து வேலை பார்த்ததில் ஏற்பட்ட உடனிருப்பு எல்லாமுமாக நாங்கள் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி அமைந்தது. நிறையப் பேசிக் கொண்டிருப்போம்; சூரியனுக்குக் கீழே உள்ள சகலவற்றையும் பேசியிருக்கிறோம்; கலை, இலக்கியம், நட்பு வட்டம், மனித உறவு, சொந்த வாழ்க்கையின் நொம்பலங்கள், பெண்கள், குடும்பம், நகர வாழ்க்கையின் வெற்றுத்தன்மை இப்படி….
முதல் காதல், அப்பா பருத்தி வியாபாரத்தில் ஆயிரமாயிரமாய் சம்பாதித்தது, கடைசிக் காலத்தில் கஷ்டப்பட்டது, கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட், தான் செக்கிங் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தது, செண்பகவல்லியம்மன் கோயில் மேடு, தேவதச்சனுடன் பேசிக்கொண்டிருந்தது, கௌரிஷங்கர் புஸ்தகங்கள் கொடுத்துப் படிக்கச் சொன்னது, ராசாத் தேவர், ஏழாயிரம் பண்ணை ஊர், செல்ல மாப்பிள்ளை கோணங்கி, ஜி.வி.ஐயரிடம் உதவி இயக்குநராக இருந்தது, ஊரில் இருந்த வீடு விற்றது -  எதைப் பற்றித்தான் யாரைப் பற்றித்தான் என்னிடம் மனம்விட்டுச் சொல்லவில்லை அவர். இந்த அண்ணாச்சியிடம் எதையும் சொல்லலாம் என்று தோன்றி, எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்று பட்டுச் சொல்லி வந்திருக்கிறார் துரை. துரை சொன்னதை வைத்துக் குறைந்தது பத்து கதைகளாவது எழுதியிருக்கலாம்; ஆனால் என்னை வெகுவாகப் பாதித்து தான் எழுதியது ஒரே ஒரு கவிதைதான்.
உண்மையிலேயே, இது துரையின் வாழ்வனுபவம்; இருபது ஆண்டுகளுக்கு முன்பு சமயவேலைப் பார்ப்பதற்காகக் கோவில்பட்டி போயிருந்தபோது; பஸ் ஸ்டாண்டுக்கு எதிரேயுள்ள முடுக்கில் இருக்கிற ஒரு பிள்ளைமார் மெஸ்ஸூக்குக் கூட்டிக்கொண்டு போயிருந்த சமயம்; சாப்பிட்டுவிட்டு வருகையில் கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு பெரிய வீட்டைக் காண்பித்துவிட்டுச் சொன்னார்.
‘’இதான் நம்பி… துரை வீடு.’’
எவ்வளவோ நொம்பலங்களுக்கு மத்தியிலும் என் மனசைப் பாதித்தது இந்த விஷயம்; தூரத்துப் பார்வையிலேயே பட்டது, பங்களா மாதிரி பெரிய வீடு; திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார் துரை; அப்பாவுடனும் அண்ணனுடனும் ரிஜிஸ்தரர் ஆபிஸ் போய்ப் பத்திரத்தில் கையெழுத்துப் போடுவிட்டு வந்த நாளைப் பற்றி; அழவில்லை; ஆனால், மனசுக்குள் அழுதிருப்பார்.

எனது கவிதை
கரையான்
இற்று
விழப் பார்க்கிறது உத்தரம்
தேக்குமரங்களை விலைபேச
வருகிறார்கள் தரகர்கள் சிலர்
வெள்ளையடிக்கப்பட்டு
தயாராக இருக்கிறது வாடகை வீடு
தாத்தா மனசுநோக
பேரப்பிள்ளைகள் அறியாது
பேரத்தில் இழுபடுகிறது ஜீவன்ஆனாலும்
ஆச்சியின் துக்கம்
அந்தரத்தில் நிற்கிறது எதிர்பார்த்து     

-    வித்யாஷங்கர் கவிதை

வீடு பேசி முடித்தாயிற்று
விற்பனை பத்திரத்தில்
கையெழுத்திட
அப்பா
அண்ணனையும் என்னையும்
தயங்கியே அழைத்தார்

திரும்பும் போது
ஏனோ
பேச எதுவுமற்றவர்களாய்
நடந்தோம்

‘கும்பிட்ட
குலதெய்வம்
குடிகொண்ட வீடென்று’
அரற்றினாள் அப்பத்தா



குலதெய்வத்துக்கு எங்கேனும்
குடியிருக்கக் கிடைக்குமோ

வாடகை வீடு?                                                                                                                        

No comments:

Post a Comment