Friday, February 23, 2018

கடைசிச்சிற்பம்


மதுரை மேலமாசி  வீதியில்
உள்ளது  ஆனந்த ஐயப்பன் கோயில்
பலரும் இங்கு வந்து
இருமுடி கட்டி
சபரிமலைக்குச் செல்கிறார்கள்
அடுத்து இருக்கும்
விடுதியின் மாடித்தளத்திலிருந்து
கோயில் சிற்பங்கள்
அத்தனையையும் பார்க்கலாம்

கோயிலின்
முகப்புத் தளத்தில்
நாலா புறமும்
சிலைகள் நான்கு திசை
நோக்கி நிற்கின்றன
தென்முகப்பின் மூலையில்
ஆணும் பெண்ணும் நிற்க
சிற்பி வடித்திருக்கிறான்

ஆண்
இறுகக் கட்டிய  தார்ப்பாய்ச்சியும்
தோளில் துண்டுமாய் நிற்க
பெண்ணோ
புட்டப்பிளவு தெரிய
சேலை நெகிழ
எப்போது அவிழ்ந்துவிடுமோ என
பதற்றப்பட வைக்கிறாள்

எத்தனையோ பேர்
தங்கிப் போயிருக்கலாம்
இனிமேலும் வந்து தங்கலாம்

இவனுக்கு ஏனோ
அந்தப் பெண்ணின் சிலை
பதற்றம் தந்தது

வேலைக்காக
மாதக்கணக்கில்
மனைவியைப் பிரிந்ததையா
பல மாதம் சேர்ந்து
பணியாற்றியும்
வசப்பட மறுத்த
பணிப் பெண்ணையா
அவளது புடைவையை
சரி செய்ய
கோயில் நிர்வாகிகள்
தன்னைத் தேடட்டும் என்றா
கும்பாபிஷேக நாள் குறித்த பின்
ரகசியமாய்ச் செய்த
கடைசிச் சிற்பமா
(கேள்விகள்
துளைத்தன இவனை)
சிற்பிக்கே தெரியும்
சிலை செதுக்கிய சூட்சுமம்.
                       
-    வித்யாஷங்கர்
‘’கவிதை என்பது அடிப்படையில் அனுபவம் சார்ந்த விஷயம்.

‘’சங்க இலக்கியத்தில் உள்ள சித்திரங்களாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும், நேரடியாகச் சொல்லப்பட்ட கவிதைகள் என்றாலும், அவற்றில் எல்லாம் ஓர் அனுபவம், அனுபவம் சார்ந்த ஒரு மனம், அந்த மனத்தில் இருந்து கிளர்ந்த உணர்ச்சிகள் ஆகியவைதான் முன்னால் வந்து நிற்கின்றன’’.
                              -கவிஞர் சுகுமாரன் (நேர்காணல்)
                              (’காலச்சுவடு’, டிசம்பர் 2008)

காட்சிகள் கிளை பரப்ப, மனம் நினைக்க, கற்பனை விரிய, தோன்றிய கவிதை; பதினான்கு பத்திகள்; நாற்பத்தொன்பது வரிகள்; நேர்க்கூற்று; எளிமையானது; காட்சிகளாலான கவிதையென்றாலும், மனம் சார்ந்தது.

முதல் பத்தி, மதுரை மேலமாசிவீதியில் உள்ள ஆனந்த ஐயப்பன்கோயில் பற்றிய விவரிப்பும், அங்கே ஐயப்ப பக்தர்கள் வந்து இருமுடி கட்டி, சபரிமலை செல்வதும்; இரண்டாவது, கோயிலையொட்டி விடுதி மாடித்தளத்திலிருந்து பார்வைக்குப் படும் கோயில் சிற்பங்கள்.

மூன்றாவது பத்தியில், கோயிலின் முகப்புத்தளத்தில், நாலாபுறமும் உள்ள சிலைகள் குறித்த விவரிப்பு,; நான்காம் பத்தியில்; தென்முகப்பின் மூலையில், சிற்பி வடித்திருக்கும் ஆண்/பெண்  சிலைகள் பற்றிய குறிப்பு.

கவிதையின் ஐந்தாவது பத்தி, ஆணின் தோற்றம் பற்றிய விவரணம்; ஆறாவதாக, பெண் நிற்கும் கோலமும், அஃது ஏற்படுத்தும் பதற்றமும், ஏழாவது, எட்டாவது பத்திகள் அந்த விடுதிக்கு வரும் போகும் மற்றவர்கள் பற்றிய எண்ணமும், அவர்களுக்குத் தோன்றாத உணர்வு தனக்கு நேர்வது பற்றியதுமாக

ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரெண்டாம் பத்திகள், அந்தப் பெண்ணின் சிலையை, ஏன் அப்படி ஒரு வடிவில் சிற்பி செய்தான் என்ற யோசனைகள்; பிறையடைப்பில், இவன் மனநிலை.

முத்தாய்ப்பு, ‘’சிற்பிக்கே தெரியும்/சிலை செதுக்கிய சூட்சுமம்’’ என.

மதுரை மேலமாசி வீதி ஆனந்த ஐயப்பன் கோயில் ஆவணப்படுத்தப்பட்டு விட்டது, அதன் முகப்புத்தளச் சிலை ஒன்றினால்.

அந்தப் பெண் நிற்கும் ஸ்திதிதான் கவிஞனைப் பதற்றம்கொள்ள வைக்கிறது; இதுதான் கவிதைப் பொருளே.

‘’பெண்ணோ
புட்டப்பிளவு தெரிய
சேலை நெகிழ
எப்போது அவிழ்ந்து விடுமோ என
பதற்றப்பட வைக்கிறாள்.’’

‘’இவனுக்கு ஏனோ
அந்தப் பெண்ணின் சிலை
பதற்றம் தந்தது.’’

மற்றவர்களுக்கெல்லாம் நேராத  பதற்றம் இவனுக்கு ஏன் நேர வேண்டும். இவனை ஏன் அது படுத்த வேண்டும்.

ஸ்தபதி ஏன் இப்படிச் செய்தான், இதனாலா இதனாலா என்றெல்லாம் யோசித்துப் பார்க்கிறான்; அஃது எப்படிப் பிடிபடும்.

கவிஞனுக்குத் தோன்றியது கவிதையில் இருக்கிறது; சிற்பிக்குத் தோன்றியது?

கவிமனம்தான், கவிதைக்கு ஊற்றுக்கண்; தோற்றுவாய்; அப்படித் தோன்றி வந்த கவிதை, இது.

வித்யாசமான கவிதை; இதுபோல இருப்பதே நல்லதுதானே. கவிதை விதவிதமாக இருக்க வேண்டும். சும்மா, ‘இண்டோர்’ கவிதைகள். ‘பைபாஸ்’ கவிதைகள், ‘டொமஸ்டிக்’ கவிதைகளே பல்கிப் பெருத்து, வார்த்தைக்கூட்டங்களே மலிந்துபோய், நவீனகவிதை அயர்வூட்டும் வேளையில், இதுபோலக் கவிதைகள் புதியனவாகவும் அனுபவம் தருவனவாகவும் அமைந்து நம்பிக்கையேற்படுத்துகின்றன.

வித்யாஷங்கர், தொடர்ந்து கவிதையில் செயல்பட்டு வருவதும், அபூர்வமான கவிதைகளை வசப்படுத்திவிடுவதும் நல்ல விஷயங்கள். மூத்தகவிஞர்கள் நிறையப் பேர் இடறிவிழும் இடங்களை இவர் சுலபமாகக் கடந்துவிடுகிறார்; உள்ளபடியே, இது பெரிய காரியம். சத்துவமுள்ளவனுக்கே இது சாத்தியம். இதற்காக அவரை வாழ்த்தவேண்டும்.

(மாயம் செய்யும் கவிதை கட்டுரை நூலில் இருந்து, நக்கீரன் வெளியீடு)


No comments:

Post a Comment