Friday, September 10, 2010

காணாமல் போவது...

இன் டூ தி வைல்டு என்ற ஆங்கிலப்படம். நேற்றும் நேற்று முன் தினமும் இயக்குநர் ராஜேஸ்வரோடு பார்க்க வாய்த்தது. படம் என்னை உலுக்கிவிட்டது உலுக்கி இன் டூ தி வைல்டு என்பதை காட்டாறு அல்லது வனப்ரஸ்தம் என்று கொள்ளலாம்.


ரோச் என்ற இளைஞன் படித்து நல்லமார்க்குகளோடு பட்டம் பெறுகிறான். பட்டமளிப்பு விழாவிற்கு பின் விருந்தில் அவனது தந்தை அவனுக்கு புதிய மாடல் கார் ஒன்றை பரிசளிக்க முன்வருகிறார். அவன் அதை ஏற்க மறுக்கிறான். உயர் கல்விக்காக 24 ஆயிரம் டாலர் பணத்தை தந்து அனுப்புகிறார்.

அவனோ இதை எல்லாம் புறக்கணித்து தன்னைத் தேடிப் போவதாகச் சொல்லி அலஸ்கா புறப்படுகிறான் (நமது இமயமலை போன்ற பணிமலைப் பிரதேசம்) முதல்காரியமாக கையிலுள்ள சான்றிதழ்கள் டாலர்கள் எல்லாவற்றையும் கீழே போட்டு தீயிட்டு கொளுத்துகிறான்.

போகும் வழியில் ஒரு தம்பதிகளை சந்திக்கிறான். அவர்களோடு சில நாட்களை கழித்து விட்டு பயணத்தை தொடர்கிறான்.

வேறொரு பகுதியில் ஒரு இளம் பாடகியைச் சந்திக்கிறான். அவன் இவள் மீது காதல் கொள்கிறாள். இவனோ அவனை விலக்கி, பயணத்தை தொடர்கிறான் திருட்டுத்தனமாக ரயில் பயணம் மேற்கொண்டு பிடிபட்டு, கீழிறங்கி விடப்படுகிறான்.

வழியில் வேறொரு முதியவர் பிரிந்து போன தனது மகன், மனைவிக்காக காத்திருக்கிறார் அவரோடு சில நாட்கள் கழிக்கிறான்.

அலாஸ்கா பற்றி மேப், அங்கு கிடைக்கும் மிருகங்களை வேட்டை ஆடுவது எப்படி? எவ்வளவு நேரத்தில் அவற்றை சமைத்து சாப்பிட வேண்டும். அங்கு இயற்கையாக கிடைக்கும் கிழங்கு, கனிகளில் எவற்றை உண்ணலாம் என்ற புத்தகம், துப்பாக்கி குண்டுகளோடு அலாஸ்காவுக்கு ஒரு தோள் சுமையோடு ட்ரக் ஒன்றில் போய் சேருவான். (படம் இங்குதான் துவங்குகிறது. மற்றதெல்லாம் இடையிடையே தான் அவன் எழுதுவது காட்சிகளாக இடத்திற்கு வருகிறது) அடையாளமாக பனிப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளையில் தன் தொப்பியை சுற்றி விட்டு பனிமலை நோக்கி நடக்கிறான்.

நதியொன்றை நடந்து கடந்து பனிமலையை அடைகிறான். எங்கும் பனிமலை. நடக்க, நடக்க வேறு எதுவுமே தென்படவில்லை. பரவசத்தில், யாருமில்லை சிகரெட் இல்லை, வாகனச் சத்தமில்லை என்று வாய்விட்டு கத்துகிறான்.

ஒரு பள்ளத்தாக்கில் எப்போதோ விழுந்த மினிவேன் ஒன்று பனிமூடிக்கிடப்பது தெரிய அதையடைந்து பெரும் அரும்பாடுபட்டு அதை தனது இருப்பிடமாக மாற்றிச் கொள்கிறான்.

தனது பெரை அலக்ஸ்ட்ரைம் மரக்கட்டையில் பொறித்து விட்டு தனது அனுபவங்களை எழுதுகிறான். மிளா ஒன்றை சுட்டு சாப்பிடுகிறான். பனி உருகி வழிய சைலன்ரை மரத்தில் கட்டிவிட்டு ஷவர் போல குளிக்கிறான்.

இப்படியே எழுதுவதும், வேட்டையாடி சாப்பிடுவதுமாக சில மாதங்கள் கழிகிறது. எதையோ உண்ணக் கூடாததை உண்டதால் வயிறு கோளாறாகி படுத்த படுக்கையாகி மெலிந்து கிடக்கிறான்.

திரும்ப போவதற்காக நெடுந்தூரம் நடந்து திரும்பி தன் தொப்பியை வைத்த நதியருகே வந்து சேர்கிறான். அவன் நிதியிலறங்க வேகங் கொண்டு சுழல் இழுக்கிறது உடல் பலவீனமாக இருப்பதால் நீந்த முடியாமல் திரும்ப பஸ்சுக்கே திரும்புகிறான்.

உடல் முழுக்க மூடிப்படுக்கிறான். உயிர் கொஞ்சம் கொஞ்சமாகபிரிய, காரின் ஒட்டை வழியாக உயரே பார்க்க ஆகாயம் விரிகிறது.

அப்போது கடைசி வரிகள் எழுதிவிட்டு கண்ணில் நீர்வழிய கண் மூடுகிறான்.

அவன் எழுதி வைத்த அட்டையில் பகிர்ந்து கொள்வதே சந்தோஷம் என்று படம் முடிகிறது. பகிர்ந்து கொண்டேன் சந்தோஷம்.

Thursday, September 9, 2010

மைதானப் பந்து

கிழக்கு நோக்கி


உதைக்கிறான் ஒருவன்

தடுத்து

மேற்கு நோக்கி

உதைக்கிறான் இன்னொருவன்



தெற்கு வடக்கென்று

திக்கிற்கொரு ஆளாக நின்று

பலங்கொண்டு உதைக்கிறார்கள்



உதைப்பவர்க்கெல்லாம்

ஒரு திசை இலக்குண்டு



எட்டுத் திக்கும்

அலைபாயும் பந்துக்கு

எந்த திக்கு

சொந்த திக்கு

வித்யாஷங்கர்

Saturday, September 4, 2010

பிப்லி லைவ்வும் போப்ஸ் டாய்லெட்டும்

பிப்லி லைவ் அமீர்கான் தயாரிப்பில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம். இந்திய விவசாயியின் மனசாட்சியாக இருந்து இந்தப்படத்தை தயாரித்துள்ள

அமீர்கானுக்கு முதலில் சல்யூட்!

படம் பார்க்கும் போது மீடியாக்காரர்களின் முகத்தில் விவசாயி ஒருவர் காரித்துப்பிய எச்சில் தான் தெரிகிறது.

விவசாயத்தை ஆதரமாகக் கொண்ட பிப்லி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்.

அவர்கள் வாங்கிய கடனுக்காக நிலத்தை விற்று தரும்படி வங்கி கேட்கிறது.

உள்ளுர் பணக்காரரும் அரசியல் புள்ளியுமானவரிடம் இருவரும் போய் உதவி கேட்கிறார்கள்.

விவசாயி தற்கொலை செய்துகொண்டால் அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் தருகிறது. உங்களில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து விட்டு, பணத்தை வைத்து நிலத்தை தாய்பாற்றிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்கிறார்.

அண்ணன் தம்பி இருவரும் ஆலோசிக்கிறார்கள் தம்பி தற்கொலை செய்து கொள்வதென்றும் அதில் வரும் பணத்தை வைத்து அண்ணன் குடும்பத்தையும் விவசாயத்தையும் பார்த்துக் கொள்வதென்று முடிவு செய்கிறார்கள். இதை இருவரும் ஒரு டீக்கடையில் வைத்து தெரிவிக்கவும் செய்கிறார்கள்.

இதைக் கேள்விப்படும் அந்தப் பகுதியில் அச்சகத்தில் பணியாற்றும் நிருபர் தனது பத்திரிகையில் இதை வெளியிடுகிறார்.

இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் செய்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் தற்கொலை செய்து கொள்ளப்போகும் விவசாயி நாதா வை லைவ்வாக காட்ட முடிவு செய்து அப்லிங்க் வேனோடு கிராமத்திற்கு போகிறது.

நாதாவின் பேட்டி டி.வி.யில் வந்ததும் முதலமைச்சர் கோபமாகி கலெக்டரிடம் பேசுகிறார்.

கலெக்டர் நாதாவின் சீட்டிற்கு போய் சாஸ்திரி திட்டம் என்று ஒரு அடிபம்பை தந்துவிட்டு செல்கிறார்.

வேறொரு சாதிக்கட்சி தலைவர் வந்து நாதவை சந்தித்து அவனை சாகவிடமாட்டோம் என்று சூளுரைக்க அதுவும் டி.வி.யில் வருகிறது.

மேலும் டென்ஷன் அதிகரிக்கிறது. இதற்குள் நாதாவின் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான காமிராக்கள், வீடியோ காமிராக்கள் ஆப்லிங்க் வேன்கள், போலீஸ் பாதுகாப்பு என்று அந்த ஊரை அமளிப்படுகிறது.

தொடர்ந்து நாதாவைப்பற்றி ஊராரின் பேட்டிகள் நாதா சொன்னபடி செத்துருவான் என்று உறுதி செய்கிறது.

முதல்வருக்கு எதிராக சதி செய்யும் ளஅதே கட்சியைச் சேர்ந்த நாதாவை சந்தித்து 2 நாளில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றால் சொன்று விடுவதாக மிரட்டிவிட்டு வேறு மாதிரி டி.வி.க்களுக்கு பேட்டி கொடுத்து விட்டு போகிறார்.

இரவும் பகலும் டி.வி.க்காரர்கள் நாதாவை கண்காணித்தபடி இருக்கிறார்கள்.

அவனது தற்கொலை அப்படியே லைவ்வாக காட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.

நாதாவை குடும்பத்தோடு, ஆட்டுக்குட்டியோடு என்று விதம் விதமாக ஒவ்வொரு டி.வி.யும் போட்டி போட்டு காட்டுகின்றன.

முதலமைச்சரே நாதாவின் கிராமத்திற்கு வந்து ஒரு லட்ச ரூபாய் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து சாதித் தலைவரோடு வந்து செல்கிறார்.

கிராமம் திருவிழா கோலம் கொள்கிறது.

எப்போதும் கார், ஜீப் பறந்து கொண்டேயிருக்கிறது.

டி.வி.காம்பயர்கள் முகத்துக்கு மேக்கப் போட்டு லிப்ஸ்டிக் பூசி தினமும் காலையில் நாதாவை குறித்து செய்திகளை லைவ்வாக தந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒருநாள் அதிகாலையில் காலைக்கடன் கழிக்க நாதா ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒதுங்க அதையும் ஒருவர் டவரிலிருந்து காமிராவில் சுருட்டிவிடுகிறார்.

அதற்குப்பிறகு நாதாவை காணவில்லை.

நாதா மலம் கழித்ததைக் கூட தொலைக்காட்சிகள் காட்டி அவன் எங்கே என்று கேள்வி எழுப்புகின்றன.

ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு வீட்டில் நாதா சிலரால் கடத்து வைக்கப்பட்டிருப்பது உள்ளுர் நிருபருக்கு தெரியவருகிறது.

அவர் தொலைக்காட்சி நிருபருக்கு போன் செய்து தெரிவிக்க அந்த வீடு நள்ளிரவில் தொலைக்காட்சி நிருபர்களால் முற்றுகையிடப்படுகிறது.

அப்போது ஏதோ வெடிக்க தீ விபத்தில் நாதா இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

நாதா பேரில் ஏழை விவசாயிகளுக்கு உதவி கார்டு திட்டத்தை முதல்வர் அறிவிக்கிறார்.

நாதாவின் அண்ணன் பணத்திற்காக அலைய விபத்தில் இறந்தவருக்கு பணம் தரமுடியாது தற்கொலைக்குத் தான் 1 லட்சம் என்று அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.

அடுத்தடுத்து வரிசையாக மீடியா கார்கள் ஏமாற்றத்தோடு ஊரைவிட்டு கிளம்புகின்றன.

நகரின் உயர்ந்த கட்டிடங்கள் நாற்கரச் சாலைப் பணி நடைபெறுகிறது. விவசாயத்தை கைவிட்ட பலர் மண்வெட்டிக்கொண்டுஉள்ளனர். அவர்களுக்கிடையே நாதாவும் இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு நகர்புறத்தில் வேலைக்கு குடியிருப்பதாக எழுத்தில் காட்டப்படுகிறது.

நையாண்டியாக மீடியா குறித்து கதை பேசினாலும் போகிற போக்கில் இப்போதுள்ள அரசியலமைப்பை, அதிகாரவர்க்கத்தை மீடியாக்களின் சொரணையற்ற தன்மையை விவசாயிகளின் நலிவை சுட்டிக் காட்டத்தவறவில்லை.

இப்படியொரு படத்தை முதல்வர் குடும்பத்து வாரிசுகள் காலநிதி, உதயநிதி, தயாநிதி யாராவது தயாரிக்க முன்வருவார்களா? மாட்டார்கள் (இது மல்லாக்கப்படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து கொண்டு எச்சில் துப்பும் விஷயமாகிவிடும்)

அதேசமயம் பிரேசில் படமான போப்ஸ் டாய்லெட் இதைபார்க்கும் போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.

இன்னமும் கிராமமென்றால் பச்சைதாவணி மாமன் மகனும், அருவாளோட திரியும் இளந்தாரியும் அவிங்கா வீம்பு பண்றாங்கே பெருசு சொல்லிருச் என்று வசனங்களால் கிராமத்தை காட்டாமல்

விளைநிலங்கள் அடுக்குமாடி வீடுகளாகவும், கல்லூரி கட்டிடங்களாகவும் மாறிவருவதை புதிய தலைமுறை சினிமாக்காரர்கள் திரைக்கு கொண்டு வர வேண்டும்.

கவிஞர் தேவதச்சன் சொன்னது போல கிராமங்கள் மேலும் மேலும் நோய்வாய்ப் பட்டுக்கொண்டிருக்க நகரங்கள் டானிக் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதை என் இளைய தலைமுறை எடுத்துச் சொல்ல பிளிப்லைவ் போப்ஸ் டாய்லெட் போன்ற படங்களை பார்க்கவேண்டுமென பரிந்துரைக்கிறேன்.

போப்பின் வருகையையொட்டி தொலைக்காட்சிகளும், மற்ற மீடியாக்களும் அந்த ஊரில் உள்ளவர்களின் பேட்டியை தொடர்ந்து வெளியிட்டுவரும்.

இந்தநிலையில் பக்கத்து நகரிலிருந்து சிறுசிறுபொருட்களை கடத்து வரும் நண்பர்கள் போப் வருகையை வைத்து சம்பாதிக்க திட்டமிடுவார்கள்.

மீடியாக்கள் லட்சம்பேர் கூடக்கூடும் என்று திரும்பத்திரும்ப சொல்லும்.

இதை நம்பி ஒருவர் ஆயிரக்கணக்கான விதவிதமான கேக்குகள் தயாரிப்பிலும் இன்னொருவர் பீட்சா தயாரிப்பிலும் ஈடுபடுவார்கள்.

கதாநாயகன் வேறுமாதிரி யோசிப்பான். இவ்வளவு பேர் கூடுமிடத்தில் ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்தால் இதற்காக அவன் படும்பாடுதான் கதை. ரேடியோ ஜாக்கியாக மாற விரும்பும் மகளின் டிரான்சிஸ்டருக்கு பேட்டரி கூட வாங்கித்தராமல் பைசா பைசாவாக சேர்த்து கட்டண கழிப்பிடத்தை கட்டிவிடுவான். போப் வருகையன்று அவன் கழிப்பிட கோப்பையை ஏந்திவரும் போது போப் சிலநிமிடங்கள் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுவிடுவார்.

அவன் பைத்தியம் பிடித்தவன்போல் டி.வி.மீது பீர் பாட்டிலை எறிவான் இப்படி முடியும் கதை.

இதில் மகளின் ஆசை, இவனது கனவு, மனைவியின் பாடுகள் எல்லாமே நிராசையாவது பெருத்த சோகம்.

பிப்ளி லைவ் படத்தில் விவசாய குடும்பத்தின் உறவு நெருக்கங்கள் நிலத்தின் மீதான ஈடுபாடு எவையும் கண்டுகொள்ளப்படாதது வருத்தத்திற்குரியதே.

ஆனாலும் படத்தின் முதல் காட்சியிலிருந்து கிணறு வெட்டும் ஒ

ருவன் (பசி பட்டினியோடு) தண்ணீரை பார்க்காமலே மடிந்து போவது தனிக்கதை. (கி.ரா.வின் கிணறு கதைதான் நினைவுக்குவந்தது)

இதில் கதாநாயகனோடு அவளதுகுடும்பத்தாரும் அவனது ஆசையோடு பயணித்து நிராசையில் தத்தளிப்பது மிகவும் நெகிழ்ச்சியானது. திரைக்கதையில் பிப்ளி லைவ்வில் அது மிஸ்ஸிங்.

இருப்பினும் சமகால பிரச்சணையை விமர்சனக் கண்ணோட்டத்தோடு முன் வைத்த அமீர்கானுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

வித்யாஷங்கர்.

Thursday, September 2, 2010

காலடிச்சுவடில் கவிதை

சுலபமாக இருந்தது

சோவியத் கலாச்சார
அரங்கின் இருளில்
அருகருகேயமர்ந்து
ரோஷமான் பார்த்த போது

சாப்ளின் படவிழாவில்
பாப்கார்ன் கொறித்தபடி
சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டது

குளிர் இரவில்
கடற்கரையில்
துப்பட்டா தலை போர்த்திய
நிலவாய்
நீ கண்ணீர் உகுத்தது

சீசா ஆடிய
சிறுவர் சிறுமியாய்
மாறிய மகிழ்ச்சி
எல்லாமே சுலபமாகவும்
சந்தோஷமாகவும் இருந்தது

நீ உயர்ந்த இடத்தை
அடையும் வரை

இப்போதோ
எத்தனை திரைகள்
எத்தனை தடைகள்
நீயொருநாள்
இறங்கி வரும் வரை
காத்திருப்பேன்
கடற்கரை
காலடிச் சுவடுகளின்
கவிதையைக் கேட்டபடி
வித்யாஷங்கர்

Sunday, August 29, 2010

தேசத்தை விற்பவர்கள் தான்
தேசப்பற்று பேசுகிறார்கள்

திவிரவாதத்தை உருவாக்குபவர்கள் தான்
அதை ஒழிக்கவும் முற்படுகிறார்கள்

வறுமைக்கு காரணமானவர்கள் தான்
வறுமையை ஒழிக்கப்போவதாய் சொல்கிறார்கள்

அதிகாரம் இருந்தால்
ஆக்கலும் அழித்தலுக்கும்
அவரே கடவுள்

காத்தல் மட்டுமே
காது கேளாத
கண்ணற்ற கடவுளிடம்

சாமான்யர்களின் கடவுள்
என்றும்
அன்றன்றைய
உணவு தான்
----------------------------------


இருக்கலாம்
எவரிடமும்
யார் குறித்தும் புகார்

நல்ல டீ தராமல்
காசு வாங்குவதாக

நல்ல சாப்பாடு தராமல்
பணம் பறிப்பதாக

சிறுசிறு
புகார்கள்
சகலர்க்கும் உண்டு

புகாரற்றவர்கள்
புண்ணியாத்மாக்கள்
-----------------------------------------

எப்போதும்
எதையாவது செய்து கொண்டிருப்பது
வழக்கமாகிவிட்டது

இருத்தலின் அவஸ்தை
அனலாய் தகிக்கிறது
மூலையில்

செய்தி நிறுவனத்தில் பணியாற்றுவதும்
ஓயாது அரசியல் பேசுவதும்
நியாய தர்மங்களை விவாதிப்பதும்
கவிதை எழுதுவதும்
ஒன்றாகிப் போனது

சும்மா இருக்கும் சுகமறியேன்
---------------------------------------------

ஒரு சிசு கண்விழித்த நாளில்
அதற்கென்று
பேரில்லை
சாதியில்லை
மதமில்லை
யார் யார்
என்ன உறவென்றும்
சிசு அறியாது

வளர வளர
சகல தீயவைகளும்
விருப்பமில்லாமலே
கற்பிக்கப்படுகின்றன

ஆனாலும்
சிசு
வளர்ந்தே தீரும்
சிசு சிசுவாகவே இருக்கவோ
வளர்ந்தபின்
சிசுவாக மாறவோ
வாய்ப்பில்லை
ஒன்வே உலகில்
                              வித்யாஷங்கர்


Friday, August 20, 2010

makkal kural

முதல்வர் கலைஞர்
அல்லும் பகலும்
அயராது
மக்களுக்காக உழைக்கிறார்

மு.க.அழகிரி
சொல்கிறார்
மு.க.ஸ்டாலின்
சொல்கிறார்
மு.க.கனிமொழி
சொல்கிறார்.

Wednesday, August 18, 2010

konjam kavithaigal

இப்படியாக்கும்
அப்படியாக்கும்
விமர்சனங்கள்
எளிது
எப்படியாபட்டவர்களுக்கும்
தப்படி நேர்வது
தப்பாமல் நடக்கிறது
---------------------------------

இது மூதாதையர்
எறிந்த கல்

கல்லால் தீ மூட்டி கல்லிடுக்கில்
பானை வைத்து
கறிசமைத்து
சாப்பிட்ட கல்

அமரக்கல்
படுக்கக்கல்
கையில்கல்
கல் கடவுளானது
எப்போதும்
ஆயுதங்களே
காப்பவை
கல் கடவுளானது இப்படித்தான்
----------------------------------------------
உங்களிடமும்
இருக்கலாம்
அவரிடமும்
இவரிடமும் கூட இருக்கலாம்

எவரிடமும்
இல்லாத தொன்று

எல்லா உயிரும்
தனித் தனிதானே!

இப்படி செய்திருக்கலாம்
என்பது
செய்து முடித்தபின்பே
தெரிகிறது

முன்னும்
பின்னும்
முரணாகிக் கிடக்கிறது