கொடுக்காப்புளி மரம்
இப்போது இல்லை
கனகாம்பரச் செடி
இப்போது இல்லை
சித்தரத்தைச் செடி
இப்போது இல்லை
வேப்பமரம்
இப்போது இல்லை
முருங்கை மரமும்
இப்போது இல்லை
இவற்றின் நடுவே
நாங்கள் வாழ்ந்த வீடும்
இப்போது எம் வசமில்லை
..............
கனவில் கத்தியோடு
குத்த வந்தவன்
தடுக்கி விழுந்ததில்
தப்பித்தேன்
என்றேனும் ஒருநாள் கனவில்
அவன் எழுந்து வருவானோ?
பயம் பிடித்தாட்டுகிறது
அன்று முதல்
..............
துப்பாக்கி வைத்திருக்கும்
நண்பர்கள் சிலரைத் தெரியும்
எனக்குத் தெரிந்து
இத்தனை வருடங்களில்
அவர்களில் யாரும்
அதைக்காட்டி யாரையும்
மிரட்டியதில்லை.
அடிக்கப் பார்த்திருக்கிறேன்
உதைக்கப் பார்த்திருக்கிறேன்
ஆம் அவர்களிடம் தான்
துப்பாக்கி இருக்கிறதே.
..............
முன் அறிவிப்பு
“மரணம் துரத்திய மனிதன்”
எழுதிய பத்திரிகையாளன்
இளம் வயதிலேயே
எதிர்பாராத விதமாக இறந்துபோனான்
“முதலில் இறந்தவன்”
கவிதை தொகுப்பு எழுதியவனும்
எங்களைவிட குறைந்த
வயதில் இறந்து போனான்
எனக்கு விருது வழங்கிய
இயக்குனர்
“மயானத்த கூவு”
படப்பிடிப்பில் இறந்து போனார்
மனசுக்குத் தெரியுமா
மரண வருகை
..............
குறித்துக் கொள்ளுங்கள்
எப்போதேனும் உதிர்கிற
அவனது வாழ்க்கை சிதறல்களை
உங்களுக்கு நேர்ந்திருக்கலாம்
அவன் போல அதை
வார்த்தைக்குள் வசப்படுத்த முடியாது
எப்படிச் சொல்கிறேனென்றால்
வார்த்தைகளின்
வசீகரத்தில் தான்
வயிறு வளர்க்கிறான்
வார்த்தைகள்
திருவிழாவில் கை நழுவிய
பலூனாக காற்றில் அவனை
வெவ்வேறு திசைகளுக்கும்
இட்டுச் சென்று
திகைப் பூட்டுகின்றன
அவனால் வார்த்தைகளற்று
வாழ முடியுமா
தெரியவில்லை
வாழ்வின் ஒரு நாளைக்கூட.
..............
என்ன பிராண்ட் சிகரெட் பிடிப்பது
வாங்கித்தரும் நண்பர்கள் தீர்மானிக்கின்றனர்
என்னை பிராண்ட் மது குடிப்பது
வாங்கித்தரும் நண்பர்களே தீர்மானிக்கின்றனர்.
என்ன உடை உடுத்துவது
வீடு நிர்ணயிக்கிறது
என்ன சாப்பிடுவது
எங்கு தூங்குவது
எல்லாமே அப்படித் தான்
அலுவலக நேரத்தில் குடிக்காதே
அரட்டை அடிக்காதே
காதல் கொள்ளாதே
ஏகப்பட்ட விதிமுறைகளை
நிர்வாகம் விதிக்கின்றது
எது உங்க பிராண்ட்
யாரேனும் எப்போதாவது கேட்டு
திகைப்பில் ஆழ்த்துகிறார்கள்
என் சுயத்தை எழுப்பிவிட்டு.
..............
உலுக்கும் கவிதைகள் வித்யாஷங்கர்.
ReplyDeleteஇழந்தவைகள் நம்மை அலைபாயவைக்கின்றன. கூட்டை இழந்த பறவையின் கூவலை நினைவு படுத்துகின்றன இக்கவிதைகள்.
அடிக்கடி எழுதுங்கள்.
my heartly thanksto u
ReplyDelete