கடலுக்குள் வா வா என்றழைக்கிறாள். கடலை விட்டு தொலைதூரமிருந்தாலும் தேடிவருகிறாள். வா முத்துக்கள் பவளப்பாறைகள் கடல்குதிரைகள் இன்னும் இன்னுமென்று ஏராளமாக உன் காலடிபடக் காத்துக்கிடக்கின்றன வா. சூரிய ஒளியே அறியாது கடலின் அடியாழத்தில் விளைந்த தானியக்குமரி காத்திருக்கிறாள் வா. விளைந்த சங்குகளில் தன் நாதத்தை மூல மந்திரமாக்கி ஒடுங்கி ஒரு சங்கில் உயிர் வாழும் சித்தன் உனக்கென ஒரு மந்திரத்தோடு காத்திருக்கிறான் வா.
அகல்யை அள்ளிய நீரில் காமுறச்செய்த இந்திர விந்து அடைக்கப்பட்ட சங்குள் கருவாய் வளர்கிறது. வந்தெடுத்து கப்பாற்று. வராக அவதாரத்தின் போது உண்டாக்கிய பாதாள லோகம் பார்க்கலாம் வா.
ஆழிப் பேரலையில் அள்ளிச் சென்ற மழலைகள் அங்கே குதூகலத்தி கொண்டாடுகின்றன வா. பூரண சந்திரனின் பௌர்ணமியை கபளீகரம் செய்த வெண் சங்கு விளிக்கிறது வா. கரையிலிருந்து அள்ளிச் சென்ற காதல் கதைகளின் பெருந்திரள் ஏடு பத்திரமாக இருக்கிறது வா. கற்பக விருஷ்ம் கைவிரித்து காத்திருக்கிறது வா. வந்து தழுவி ஐஸ்வர்யம் பெறு. சூட்சம சரீரியாகி உன் தழுவலுக்காக யுகாந்திரமாய் காத்திருக்கிறாள் வா. ஏ! கசனே உயிர் மீட்கும் மந்திரமறிந்த நித்ய பிரம்மச்சாரியே வா. உன் தேவகச்சயாணி திகைப்பூட்டும் பாடல்களையும் நனையும், நாட்டியங்களையும் கற்றுத் தேர்ந்து காத்திருக்கின்றாள் வா.
கால காலமாய் உன் காலடியைத் தொட்டு கொஞ்சி கூவி, அலறி கூப்பாடுபோட்டு அழைத்துச் கொண்டேயிருக்கிறாள் வா. ஒவ்வொரு அலையின் அழைப்பையும் நீ உதாசீனம் செய்தாலும் இரவு பகல் மழை வெயில் பாராமல் அலைஅலையாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது அழைப்புகள்.
எவனும் அறியாத ரகசியங்களோடும் வனப்போடும் திமிரோடும் ஓயாத பெருந்துயரோடும் தீரா மோகத்தோடும் காத்திருக்கிறாள். நொடிக்கு நொடி அழைப்பு விடுத்து ஓயாத அலைகளோடு காத்திருக்கிறாள் வா.
எத்தனை உடல்கள் நனைந்தாலும். எத்தனை தூரம் கடந்தாலும், எத்தனை வயல்களில் ஒடினாலும் எத்தனை கைகள் அள்ளினாலும் எத்தனை கால்கள் மிதித்தாலும், கால தூரம் கடந்தும் குளிர்ச்சியை தனக்குள் ஒளிந்து வைத்திருக்கிறது ஆற்றுமணல் புதையலாய். தட்ப வெப்ப நிலையில் தன் சுயமிழக்காமல் காலங்காலமாய்.
அருவியின் தலைமகள். தனித்து ஒடிக் கொண்டே யிருக்கிறாள் பகவதியருளாய். பாவம் தீர்க்க பாண்டியன் வருவானென்று. கூடி நின்று கூட்டமாய் கவனம் கொள்கின்ற தாவரக்கூட்டம் மலையாள மண்ணில் திரண்ட மேகம் பொதிகையில் இறங்கி பொங்கி பொழிகிறது அருவியாய். யார் கண்ணிலும் படாத அரிய மூலிகைகளின் தலைதடவி வழிகிறது கவிதலையருவி. மாமரத்தில் சூட்சம சரீரியாகி அமர்ந்து சிரிக்கிறாள். பகவதி, சேரன் குடத்தில் இட்ட உயிர் மீட்க வருவோனை எதிர்நோக்கி.
No comments:
Post a Comment