முதலாம் வகுப்பு
கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டையொட்டி அடுத்திருந்தது கோபாலகிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை. ஒண்ணாம் வகுப்பு டீச்சர் சீதாலஷ்மி பாட்டி. அம்மாவுக்கு ஒருமுறையில் சித்தி. பள்ளிக்கு எதிரே எங்கள் வீடு. இடையில் ரோடு.
கொளுகொளுவென்று எளிதில் தூக்கி சுமக்க முடியாதவனாக நானிருப்பேனாம். அதனாலேயே செல்லமாக பாலய்யா (டி.எஸ்.பாலய்யா) அக்காக்கள் அழைப்பார்கள். பிடறி தாண்டி முதுகுவரை நீண்டு வளர்ந்த முடி. காலில் கொலுசு.
வீட்டின் பின்புறம் பூத்துக் குலுங்கும் கனகாம்பரச் செடியிலிருந்து பூப்பறித்து பள்ளிக்கு மேல் சட்டையில் முடிந்து எடுத்துப் போவேன். டீச்சர் பாட்டி தலையில் கிருஷ்ணர் கொண்டை போட்டு கட்டிய பூவை தலையில் வைத்து, சொம்பு ஒன்றை கொடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பிவைப்பார். அம்மா புளிபோட்டு தேய்த்துக் கழுவி யாணைக்கிணறு தண்ணீர் நிரப்பி என்னிடம் கொடுத்தனுப்புவார். (இப்போது யாணைக்கிணறு தூர்ந்து போய் பாழுங்கிணறாக முள் மண்டி ஏ.கே.எஸ் தியேட்டர் பின்புறம் உள்ளது).
டீச்சரிடம் தண்ணீர் செம்பைக் கொடுத்ததும் அவர் மடியிலேயே தூங்கி விடுவேனாம். அப்புறம் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தால் மறுநாள் தான் ஸ்கூல்.
ராஜபாளையத்திலிருந்து பெரியம்மாவோ, ஏழாயிரம் பண்ணைகளிலிருந்து பாட்டி, தாத்தா, சித்தி இப்படி யார் வந்தாலும் ரோட்டை கடந்து வீட்டுக்குள் நுழையும் முன்பே வகுப்பிலிருந்து பார்த்தாலே தெரியும். அப்படியாரேனும் வந்துவிட்டால் டீச்சரிடம் சொல்லிவிட்டு வீடு கிளம்பிபோவேனாம். இதுதான் ஒண்ணாம் வகுப்பு படிப்பு.
கிருஷ்ணர் கொண்டையோடு என்னை மடியில் வைத்து பஸ் ஏஜண்ட் ராசாண்ணன் ஸ்டுடியோவில் போட்டோ எடுத்திருக்கிறார். போட்டோ எடுக்கும்போது நான் தூங்கியிருக்கிறேன்.
பிரிண்ட் போட்டபோது இறந்துபோன என்னை அவர் மடியில் வைத்திருப்பதுபோல வந்துவிட்டது.
அவ்வளவுதான் ராசாண்ணனுக்கு கோபமான கோபம். போட்டோவை கிழித்தெறிந்து ஸ்டுடியோவை உடைத்தெறிந்து விடுவேன் என்று ஒரே களேபரம்.
அப்புறம், ஸ்டுடியோக்காரர் காசுவாங்காமல் மறுபடியும் என்னை அழைத்து வரச் செய்து அவர் மடியில் உட்காரவைத்து படம் எடுத்து பிரிண்ட் போட்டுக் கொடுத்தாராம்.
நான் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ஸ்டுடியோக்காரர் இந்த தகவலைச் சொன்னார்.
தினமும் இன்டர்வெல் விட்டதும் எல்லோரும் வேப்பம் பூவை சேகரிப்போம். அஞ்சாங்கிளாஸ் வாத்தியாரும் ஹெட்மாஸ்டருமான கோபாலகிருணய்யர் அதை ஒரு துணிப்பையில் எடுத்துப் போய் வேப்பம்பூ ரசம் செய்து குடிப்பாராம் டீச்சர் சொன்னார்.
அண்ணன், சின்னக்கா, நான், தங்கை எல்லோருக்கும் இங்குதான் ஆரம்பக்கல்வி. இப்போது அது வளவு வீடாகிவிட்டது. அப்போது தினத்தந்தியில் கன்னித்தீவு படிக்க இருந்த மன்னன் டீஸ்டாலும் இப்போது இல்லை. ராசாண்ணனும் இல்லை.
காலத்தைப் திரும்பிப் பார்க்கும் தருணங்கள் மகிழ்வானவையே :-)
ReplyDeletethank u
ReplyDelete