Monday, December 13, 2010

இன்னும் சில கவிதைகள்

லாட சன்யாச மொழிக்குள்


உறைகிறாள் ராக்காச்சி

பறிபோன ஊற்றுக் கண் நோக்கி



தலைபோன சமணர் சிலையில்

தூமைச் சேலை துவைக்கிறாள் ஒருத்தி



கரிசக் காட்டின் கம்மாயோரம்

காவலுக்கு நிற்கிறார்கள்

இருளப்பசாமியும் பொன் இருளப்பனும்



இடைவாரில் சூரி சொருகிய

சண்டியர்கள்

தூண் சரிந்த அரண்மனை வாசலில்.

ஆடு புலி ஆட்டம் ஆடுகிறார்கள்



தீப்பெட்டி ஆபி ஸ் முதலாளியான

பழைய ராசா

பைக்கில் வலம் வருகிறார்

ஊரொதுங்கி வழிவிட



தீப்பெட்டி பெட்டிகளில்

குச்சி அடுக்கியபடி

மானாட மயிலாட ரசிக்கிறார்கள்

கந்தகத்தில் மார் சுருங்கிய குமறுகள்

அமெரிக்காவிலிருந்து

செல்போனில் அழைக்கிறாள்

முத்துமாரி



பேச்சியக்கா

வீ ட்டு வாசலில் நின்று

தெரு கேட்கச் சொல்கிறாள்

“பங்குனி பொங்கலுக்கு

பயலுக்கு மொட்டை போட வாராகளாம்”

       000---------000



அவளை பின் தொடர்ந்து

சைக்கிள் தடம் பதிந்த

சாலைகளின் முகம் மாறிப் போனது



சைக்கிள் மணி கேட்டு

அள்ளிப்போட்ட தாவணியோடு

அரக்கப் பறக்க வாசலுக்கு வந்தவள்

இல்லாமல் தெருமட்டும் இருக்கிறது

விச்ராந்தியாய் இருக்க

விட்டு வைக்கப்பட்டிருந்த

ஊர் ஒதுங்கிய கதிரேசன்மலை

சொர்ணமலையாகி

எப்போதும் ஜனக்கூட்டத்தில்

ஜொலிக்கிறது



டீக்கடைகளில்

ஸ்பெக்ட்ரம் முதல் ஒபாமா வரை

விளக்கும் தோழர்கள்

இருக்கிறார்கள்

வேலையற்ற பையன்களோடு



நகைக்கடைகள் துணிக்கடைகள்

பாரம்பரியம் துடைத்தெறிந்து

நவீனம் பூசிக்கொண்டிருக்கிறது



காட்டுக்கு போகும்

காளியம்மக்கா மகள்

சாயம் போன சுடிதாரோடு

களை கொத்தி எடுத்துப் போகிறாள்

"ரொம்பத்தான்

மாறிப்போச்சு ஊரு "



         000-----------000





மாதத்தில் ஒருமுறையேனும்

பாரில் சந்திக்க நேரும் சுந்தர்



பிரியும்முன்

‘கவிதையொன்று

சொல்லிப் போங்களய்யா’

தவறாமல் கேட்பது வழக்கம்

சமீபத்திய சந்திப்பில்

சொன்னது

இருப்பை காலி செய்ய

ஏதோ எழுதுகிறேன்

கழிக்க .. கழிக்க

சேர்ந்து கொண்டேயிருக்கிறது

குப்பை

      000-----------000





வனாந்தரப் பச்சைகளின் விநோதம்

வர்ணிக்க முடியாதது



எத்தனை பச்சை

எத்தனை வனப்பு



இளம்பச்சை

எழுமிச்சைப் பச்சை

கரும்பச்சை

நீலப்பச்சை

செவ்வரியோடியபச்சை

நரம்புக்களுக்கு தனி வர்ணம்

பூசிப் படர்ந்த பச்சை



பச்சை பச்சையாய்

பார்வையெல்லாம் நிறைந்தது

பசக்கென்று ஒட்டிக்கிடக்கிறது

மனசில் டீசல் பெரு வெளி தாண்டி.....



         000------------000

No comments:

Post a Comment