Friday, September 17, 2010

அம்மாவின் திதியும் அண்ணாச்சியோடு குற்றாலக் குளியலும்

(தொடர்ச்சி)


திங்களன்று காலையிலேயே முரளி போன் அடித்து புறப்பட்டுவிட்டதாக தகவல் சொன்னார்.

நான் எர்னர்ஸ்ட் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும் படித்து முடிந்துவிட்டு குளித்து பஸ்ஸ்டாண்டுக்கு பேக் கோடு புறப்பட்டு வந்தேன். காலையில் தங்கை சாப்பிடச் சொல்லியும், வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.

ஒன்பது மணிவாக்கில் முரளி வந்ததும் ஒரு கப் காப்பியோடு நெல்லை பேருந்தில் ஏறினோம். ஒரு மணி நேரப்பயணம் மீண்டும் ஆளுக்கொரு கப் காப்பி, சிகரெட் முடித்து தென்காசி பேருந்தில் பயணம்.

11 மணிவாக்கில் தென்காசி போஸ்டாபிஸ் ஸ்டாப்பில் நம்பியண்ணன் போனில் கேட்டுக் கொண்டபடி இறங்கி சிகரெட் பற்றவைத்தோம்.

சிகரெட்டை குடிப்பதற்குள் அண்ணாச்சி வந்துவிட்டார். சிறு உபச்சார விசாரிப்புக்கு பின் பரதன் தியேட்டர் தாண்டி அவரது வீட்டை அடைந்தோம். இருவரும் பாத்ரூமை கேட்டு சிறு உபாதையை தீர்த்துக் கொண்டோம்.

கையில் எடுத்துச் சென்ற அவரது புத்தகங்களை கொடுத்தான். சென்னையில் அவரது அறையில் விட்டிருந்த எனது பேண்ட், ஷர்ட்களை அவர் ஒரு பையில் போட்டுக் கொடுத்தார். கூடவேஒரு பேன்சி டீ ஷர்ட்டையும் கொடுத்தார். அருவியில் குளித்துவிட்டு அதை அணிந்துக்கொண்டு தான் போட்டோவில் நிற்கிறேன்.

அவர் ஒரு துண்டு மட்டும் எடுத்துக் கொள்ள வீட்டைப் பூட்டிக்கிளம்பினோம். மதினியை பள்ளியில் சந்தித்து செல்போனையும் சாவியையும் ஒப்படைக்க நாங்கள் போன நேரம் பள்ளி விட்டிருந்தது.

திரும்ப வீடு நோக்கி நடந்தோம். காசி விஸ்வநாதர் ஆலய வாசல் ஆட்டோ ஸ்பிஸ்டருகே மதினியும் எங்களை தேடி வந்து கொண்டிருந்தார்.

நலவிசாரிப்புக்குப் பின் அண்ணாச்சியை பத்திரமா அனுப்புறதா இருந்தா கூட்டிட்டுப் போங்க என்ற நிபந்தனையோடு அனுப்பினார்.

அடுத்த ஐந்தாம் நிமிடம் டாஸ்மாக் பாரில் ஒதுங்கினோம். முதலில் ஒரு அரைபாட்டில் காலியானது. அப்புறம் ஒரு குவார்ட்டர், இன்னொரு குவார்ட்டர்.

நான் அம்மாவின் ஆசியாக அருவியில் குளிப்பது முதல் வேலை. இரண்டாவது பத்திரமாக நாளைக்குள் சென்னை சேர வேண்டியது என்று குடிக்கும் போதே இருவரிடமும் கறராகச் சொல்லிவிட்டேன்.

குற்றாலத்தின் சாரல் விழும் 5வது கிலோமீட்டர் வந்துவிட்டு, குளிக்க முடியாமல் போய் விடுமோ என்ற பதற்றம் என்னிடம் தொற்றியிருந்தது.

அம்மாவின் மறைவிற்குப் பின் எனக்கு குற்றால அருவிகளே அம்மாவாக என்னை வர்ஷித்துக் கொண்டதாகப் பட்டது.

இந்த வருட சீசனில் ஒரு மாதத்திற்குள் இது இரண்டாவது அருவிக் குளியல் (முதல் குளியல், குடியல் தனிட்ராக்)

தீராத காமம் போல் இப்போது அருவிக் குளியல் என்னை ஈர்த்திருப்பது எனக்கே வியப்பாகத் தானிருக்கிறது.

பாரை விட்டு வெளியேவந்தோம் பஸ்ஸில் போகலாம் என்றார் அண்ணாச்சி. அதற்குள் முரளி ஆட்டோ பேசி விட, அடுத்த 1வது நிமிடம் குற்றாலம் பேரறுவி!

(மெயின் பால்ஸ்)

முரளியும் நானும் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டோம். அண்ணாச்சி எங்களது உடைமைகளை தலைக்கு வைத்து படுத்துவிட்டார். முரளி எண்ணெய் ஊறுவதற்காக சிகரெட் பிடித்தபடி அமர்ந்தார்.

நான் துண்டு அணிந்து அருவிக்குள் புகுந்தேன். சற்றுநேரம் பேரறுவியில் உட்கார்ந்தேன். சந்தோஷம், இழப்பு, பரவசம், கண்ணீர் என்று மாறிமாறி மனசுள் பரவிய உணர்வலைகளில் அலைக்கழிக்கப்பட்டேன்.

சட்டென வெளியேறி விலகி அருவியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் அருவிக்குள் புகுந்தேன். சற்று நேரத்திற்குப் பின் முரளியை அழைத்து வந்து மீண்டும் அருவிக்கு என்னை கொடுத்தேன்.

இருபது நிமிடத்திற்கு மேல் இருவரும் அருவியிடம் ஒழிந்தோம்.

உடல் வெடவெடக்க வெளியேறி சிஞ்சித்தும் போதையில்லாமல் பசி கிளறியது.

குற்றாலநாதர் கோவிலருகே சுடச்சுட மிளகாய் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தவரிடம் முதலில் இரண்டு, மீண்டும் ஒன்று அவருக்கு ஒன்று, இன்னும் இரண்டென்று எட்டு பஜ்ஜிகளை முழுங்கினோம்.

முரளி உடைமாற்றினார். தூங்கி எழுந்த அண்ணாச்சியை துண்டை கட்டச் சொல்லி அருவிக்கு கூட்டிப்போனேன்.

இருவரும் கை கோர்த்து பேரறுவி பெருந்தருவாயில் ஆசிர்வாதிக்கப்பட்டவர்களாய் நின்றோம்.

பேரறுவியின் இரைச்சலையும் மீறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசைக் குறிப்பில்லாத ஒலிகளை வாய் விட்டு எழுப்பிய சேர்ந்திசை பரவசப்படுத்தியது.

இருவரும் வெளியேறினோம். உடைமாற்றினோம். முரளி தன் செல்போனில் இருவரையும் அருவியின் பின்னணியில் நிற்கவைத்து படமெடுத்தார். சுமாராகத்தான் வரும் என்றார். இப்போது பார்க்கையில் நன்றாக வந்திருப்பதாகவே படுகிறது.

No comments:

Post a Comment