Sunday, September 26, 2010

தகுமா தாமதம்?

ஒவ்வொரு உயிரும் தனித்தன்மை வாய்ந்தது. இதில் எந்தவொரு உயிரும், எந்த உயிரை விடவும் உயர்ந்ததோ, தாழ்ந்ததோ கிடையாது.

முதலில் மற்றவர்கள் நேசிக்க வேண்டும் என்று விரும்புகிற ஒவ்வொருவரும் தன்னை நேசிக்க வேண்டியது அவசியம்.

இங்கு நீ என்பது ஒருவன் மேற்கொள்ளும் தொழில் அதில் அவன் காட்டும் ஈடுபாடு. அதில் அவனது நுட்பம், அதனால் விளையும் பயன்பாட்டைப் பொறுத்தே அவனது தகுதி அல்லது உயரம் நிர்ணயிக்கப்படுகிறது.

வயிற்றுப் பிழைப்பிற்காக ஒருவன் மேற்கொள்ளும் தொழில் வேறு; ஒருவன் தேர்ந்தெடுக்கும் தொழில் என்பது வேறு.

கயிற்றில் இரு கம்புகளுக்கிடையே நடக்கிற கழைக் கூத்தாடி சிறுமிக்கு அதுவே இரண்டுமாக அமைந்துள்ளது.

அதற்கென அவள் மேற்கொண்ட பயிற்சி, மெய் வருத்தம், நுட்பம் எல்லாம் சேர்ந்து அதை கலையாகவும் மாற்றுகிறது. இது ஒவ்வொரு தொழில் புரிபவருக்கும் பொருந்தும்.

ஒரு விவசாயியின் வேலைநேரம் என்பதை இயற்கையே தீர்மானிக்கிறது. சூர்யோதயத்திற்கு முன்பே தண்ணீர் பாய்ச்சி, சூரியன் வந்ததும் ஓய்வெடுக்கப் போவதும், நெல் பயிர் முற்றிய நிலையில் வயலிலேயே இராவெல்லாம் கண்விழித்து களவு போகாமல் காவல் காப்பதும் என்று அவனது வேலை நேரத்தை இயற்கையே தீர்மானிக்கிறது. இதில் எந்த வேலை தாமதமானாலும் நேரடியாக விவசாயி பாதிக்கப்படுவதால் அவனுக்கு தெரியும் நேரத்தின் அருமை.

நகர வாழ்க்கையும், இங்குள்ள தொழில் முறையில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. இந்த திட்டமிடலில் யாரேனும் ஒருவர் மேற்கொள்ளும் தவறு மற்றவரையும் பாதிக்கும்.

பனிரெண்டு பக்க நாளிதழை 20 பேர் சேர்ந்து தயாரிக்கும் போது, ஒருவர் மட்டும் தனது பக்கத்தை தாமதமாக முடித்தால் அதனால் ஏற்படும் தாமதம் மற்றவர்களின் உழைப்பையும் இழிவுபடுத்தும்.

அச்சாக தாமதமாகும், விநியோகம் தாமதமாகும், விற்பனை பாதிக்கும். அவசர கதியில் செயல்படுவதால் நேர்த்தி தவறும், பிழைகள் கூடும். சரியான நேரத்திற்கு பேப்பர் பார்சல் போய்ச் சேராது; இங்கு ஒருவரின் தாமதம் 400வது கிலோமீட்டரில் பேப்பர் சப்ளைக்காக காத்திருக்கிறவர் வரை பாதிக்கும்.

தாமதம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

காலையில் செய்தித் தாளை புரட்டும் போதே மனதில் இன்று என்னென்ன நிகழ்வுகள் நடக்கிறது? இதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்ற திட்டமிடல் இருக்க வேண்டும்.

இன்று முதல்வர் தஞ்சையிலிருக்கிறார். இன்று இன்னார் பிறந்த நாள், இன்று இந்த தீர்ப்பு வருகிறது. நகரில் இங்கு இது தொடர்பாக பேரணி நடக்கிறது என்று அடுக்கடுக்கான தகவல்களில் சேகரம் மூளையில் பதிவாசி இருக்க வேண்டும்.

இந்த முன் தயாரிப்பு இல்லாமல் பணிக்கு வருபவரால்தான் உடனடியாக முடிவெடுக்க முடியாமல் தானும் திண்டாடி, மற்றவர்களுக்கும் திண்டாட்டத்தை ஏற்படுத்துகிறார்.

நீங்கள் மிகச்சிறந்த பாடகராக இருக்கலாம்; கவிஞராக இருக்கலாம்; பேச்சாளராக இருக்கலாம்; கணித மேதையாக இருக்கலாம்; விஞ்ஞானியாக இருக்கலாம்;

அதுவெல்லாம் நீங்கள் மேற்கொள்ளும் தொழிலுக்கு எப்படி பயன்படுகிறது என்பதுதான் உங்களை அடையாளப்படுத்தும்.

ஒரு காவல் துறை அதிகாரி நன்றாக நடனம் ஆடுவார்; நன்றாக கதை எழுதுவார் என்பது பெருமையாகாது.

அவர் தனது துறையில் செய்த சாதனைகளே அவருக்கு பெருமை சேர்க்கும்.

ஒரு நடிகன்நடிக்க மட்டும் தெரியாமல்எதைச் செய்தாலும் அவன் முதலமைச்சரேயானாலும் அவன் தொழில் துரோகியாகவே கருதப்படுவான்.

அவர் அரசியலை அக்குவேறு ஆணிவேறாக விவாதிப்பார்; மேடைகளில் நன்றாகப் பேசுவார், என்பவர் தான் அறிந்ததை நாலுபேர் புரியும்படி எழுதத் தெரியவில்லை என்றால் அவர் பத்திரிகையாளரே கிடையாது.

அவர் பேருந்து ஓட்டுனரை ஏன் சரியாக எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்றோ, ஒரு டாக்டரை சரியாக எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்றோ யாரும் கேட்கப் போவதில்லை.

எழுத்து துறையில் எழுதவந்துவிட்டு சரியாக ஒரு விஷயத்தை எழுதத் தெரிவில்லையென்றால் நாலுபேர் நாக்கை பிடுங்கிக் கொண்டு சாகிற மாதிரிதான் கேட்பார்கள்.

அதற்கு பதில் சொல்லியாக வேண்டிய கடமை, எழுதுகிறவருக்கு இருக்கிறது.

எழுத்து என்பது ஒன்றும் பிறப்பிலேயே, கருவிலேயே உருவானது அல்ல.

கூர்ந்த கவனிப்பும், தொடர்ந்த வாசிப்பும், எழுத்துப்பயிற்சியும் இருந்தால் எவரும் எழுதமுடியும்.

சிறப்பாக எழுத

பாராட்டும்படி எழுத

அனுபவமும், கூடுதல் பயிற்சியும்தான் தேவை.

எழுத்து என்பது எந்த ஜாதிக்கோ, மதத்திற்கோ மட்டும் சொந்தமானதல்ல.

“என் முன்னோர்கள் நாலுவரியில் சொல்லியதை என்னால் மூன்று வரியில் சொல்லி புரிய வைக்க முடியுமானால் அது நல்ல எழுத்து” என்பார் மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

வெறும் கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு தமிழில் எதையுமேஎவருடைய எழுத்து நடையையும்படிக்காமல் நானும் எழுதுவேன் என்று எழுதினார். அந்த எழுத்துக்கு வரவேற்பும் அப்படிப்பட்டதாகத்தான் இருக்கும்.

தமிழில் வ.ரா., ஏ.என்.சிவராமன், சுப்புடு, புதுமைப்பித்தன், மறைந்த கார்க்கி, அறந்தை நாராயணன், இப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் சோலை, சின்னக்குத்தூசி, இதில் ஜெயகாந்தன் கட்டுரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களை போன்ற ஜாம்பவான்களின் கட்டுரைகள் இன்றைக்கும் படித்து ரசிக்கக் கூடியகாலங்கடந்த புதையல்கள்!

No comments:

Post a Comment