Sunday, September 26, 2010

அலுவலக கலாச்சாரம்

அலுவலகம் என்பது பல்வேறு குணாதிசயங்களை கொண்ட பணியாளர்களின் சங்கமம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற சேர்ந்திசையே இங்கு எல்லோர் மத்தியிலும் லயத்தை ஏற்படுத்துகிறது. லயம் யாராவது ஒருவரால் பாதிக்கப்பட்டாலும் சுருதி பேதம் தவிர்க்க முடியாது.

இதற்கு நாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை சில உண்டு.

* போனிலோ, செல்போனிலோ பேசும்போது மற்றவர் கவனத்தை குலைக்காத வண்ணம் குரலைத் தாழ்த்திப் பேசுங்கள்.

* உங்கள் முகத்திற்கு நேரே சத்தம் போடதய்யா, நாங்க வேலை பார்க்க வேண்டாமா என்று பலர் கேட்கத் தயங்கி முணுமுணுக்கலாம். அப்படி யாரேனும் கேட்பதற்கு முன் இத்தகைய சூழலை தவிர்க்கலாமே.

* உங்களது விவாதம் எதுவானாலும் யாரோடு விவாதிக்க விரும்புகிறீர்களோ அவரை மட்டும் அழைத்து குரலை தாழ்த்தி பேசுங்கள். உங்கள் விவாதம் மற்றவர்களின் வேலையை பாதிக்காதபடி இருக்கட்டும்.

*அலுவலகம் என்பது அதற்காக மயான அமைதி நிலவவேண்டிய இடமோ, தியேட்டர், பார் போல ஆரவாரம் இடம் பெறவேண்டிய இடமோ அல்ல.

* சிறு சிறு நல விசாரிப்புகள், பணிக் குறிப்புகளை பகிர்ந்து கொள்வது, நகைச்சுவை பரிமாற்றம் இதெல்லாம் அவசியமே. இதுவும் இல்லையென்றால் ராணுவத்தில் பணியாற்றுவது போல ஆகிவிடும்.

* அலுவலகத்தில் பணிக்கு வருகிறவர்கள் ஓரளவு மன முதிர்ச்சி பெற்றவர்களே. (அப்படித்தான் கருதப்படுகிறது) உயர் அதிகாரிகளோ, நிர்வாகத்தினரோ குறை சொல்கிற மாதிரி நடப்பதை நாமே தவிர்ப்பது நமக்கு கவுரவத்தை தரும்.

* ஒவ்வொரு அலுவலகத்திற்கும் ஒவ்வொரு விதி முறை இருக்கும். அதை கடைப்பிடிக்க வேண்டியது பணியாளர்களின் கடமை.

* நேரந்தவறாமை, அடையாள அட்டை அணிவது முக்கியம்.

* அடிக்கடி காலதாமதமாக வருவது, காலதாமதத்திற்கு காரணம் சொல்வது, அடிக்கடி விடுப்பு எடுப்பது, இதெல்லாம் உங்கள் மீது அவநம்பிக்கையை நிர்வாகத்திடம் ஏற்படுத்தும். எந்த நேரத்திலும் நீங்கள் வேலையை விட்டு நீக்கப்படும் அபாயத்திலேயே இருப்பீர்கள். வேலை தொடங்கும் நேரத்தில் போன் மூலம் விடுப்பு தெரிவிப்பதை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். முன்கூட்டியே தாமதம், விடுப்பு ஆகியவற்றை தெரிவிப்பது நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய உதவும்.

* சக ஊழியர்களின் வேலைகளில் வழிகாட்டுவது, பகிர்ந்து கொள்வது, விரைந்து முடிக்க உதவுவது, ஊழியர்கள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தும்.

* எந்த நேரத்திலும் இவரை அணுகினால் எந்த தகவலாக இருந்தாலும் பெறலாம் என்ற அபிப்ராயம் நிர்வாகத்திற்கு ஏற்படும்படி நடந்து கொண்டால் நிறுவனத்தில் உங்கள் முன்னேற்றம் நிச்சயம்.

* அலுவலக தொலைபேசியை சுருக்கமான தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்துங்கள்.

* இணையத்தள பயன்பாடு தவிர்க்க முடியாதது. இருப்பினும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். அவசரத் தேவைக்கு தகவலறிய பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாததே.

* தங்களது இருக்கையை விட்டு அடிக்கடி காணாமல் போகிற ஒருவர் மீது நிர்வாகம் எப்போதும் பரிவு காட்டாது.

* நாலைந்து பேராக டீ குடிக்கப் போவது சாப்பிடப் போவதை தவிர்த்து அதற்கென உரிய நேரத்தில் வெளியே சென்று வருவதே மரியாதையை ஏற்படுத்தும்.

* எனக்கு உரக்கப் பேசினால் தான் விவாதித்த திருப்தி ஏற்படும் என்றால் நிச்சயம் சக ஊழியர்களால் மனசுக்குள் சபிக்கப்படுகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

* அலுவலகத்தில் எல்லோரும் ஒரே சீரான அனுபவம், திறமை பெற்றிருக்க வாய்ப்பில்லை. சிறு சிறு குறைகளுக்கெல்லாம் சத்தம்போட்டு அமர்க்களப் படுத்தாமல், அந்த வேலையை உங்கள் போக்கில் செய்து முடித்துவிட்டு இப்படித்தான் செய்யணும், நீங்கள் செய்ததில் இதெல்லாம் தவறு என்று விளக்குங்கள் இன்றில்லை என்றுமே அவர் உங்களை மறக்க மாட்டார்.

* எல்லாம் தெரிந்தவர் என்று ஒருவரோ, எதுவுமே தெரியாதவர் என்று ஒருவரோ கிடையாது. குறைவாகத் தெரிந்தவர், கூடுதலாகத் தெரிந்தவர்கள் மட்டுமே உண்டு.

* ஈகோ பார்க்காமல் தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது உங்களது வேலை சுமையை குறைக்கக் கூட உதவும். அதைவிடுத்து இது கூட தெரியலே என்று திரும்பத்திரும்பச் சொன்னால் இருவருக்குமிடையே தேவையற்ற வெறுப்புதான் வளரும். அதே போல தெரியாததை ஈகோ பார்க்காமல் கேட்டுத் தெரிந்து கொள்வது வேலை திறமையை கூட்டுவதோடு நல்லுறவையும் ஏற்படுத்தும்.

* அலுவலகத்திற்கு நீங்கள் அணிந்து வரும் உடை உங்கள் நிறுவனத்தின் மீது மரியாதையை உயர்த்துவதாக இருக்க வேண்டும். சீரமைக்கப்படாத கலைந்த தலையும், சீர் குலைந்த உடையும் உங்களது கவுரவத்தை மட்டுமல்ல, நிறுவன கவுரவத்தையும் பாதிக்கும்.

* தொழிற்சாலைக்கு செல்கிறவர் எப்படி அதற்கான ஆயுதங்களோடு செல்வது அவசியமோ அப்படியே ஒவ்வொரு தொழிலுக்கும் கருவிகள்.

* பத்திரிகை அலுவலகத்திற்கு பேனா எடுத்துச் செல்லாதவர் பார்பர் ஷாப்பிற்கு கத்தி எடுத்துவராத சவரத் தொழிலாளி போலத்தான் கருதப்படுவார்.

* அந்தந்த தொழிலுக்கான அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஸ்பேனரை எப்படி பிடிப்பது என்று தெரியாமல் தொழிற்சாலையில் வேலை பார்க்க முடியாது.

* அன்றைய செய்திகளை அறிந்து கொள்ள ஆர்வமில்லாதவர் ஊடகத்துறையில் எக்காலத்திலும் பிரகாசிக்க முடியாது. பொது நிறுவனங்களில் வேலை பார்ப்போர் தங்களது மத, ஜாதி சின்னங்களை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

* நெற்றி நிறைய பட்டையணிந்த காவல்துறை அதிகாரியை ஒரு இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ தயக்கத்துடனேயே அணுகுவர். இதே போலத்தான் நாத்திகவாதம் பேசுவதும். உங்கள் கருத்துக்களை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் அது எவ்வளவு மேன்மையானதாக நல்லதாக இருந்தாலும் மற்றவர் அனுமதியின்றி திணிக்காதீர்கள்.

* அலுவலகம், உங்கள் பிரச்சார மேடை அல்ல என்பதை மனதிற்கொண்டு செயல்படுங்கள்.

* தெரிந்தவர், தெரியாதவருக்கு சொல்லிக் கொடுத்து வழி நடத்துங்கள். தெரியாதவர், தெரிந்தவரிடம் தயக்கமின்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

* அலுவலகம் வெறும் வேலை பார்க்கும் இடமாக மட்டுமல்லாமல் தினமும் புதிதுபுதிதாக தெரிந்து கொள்ளும் பல்கலைக்கழகமாகவும் திகழும்.(நாளையும் சில...........)

No comments:

Post a Comment