Thursday, October 14, 2010

சுமை - சிறுகதை

பஸ்புறப்படத் தயாராயிருந்தது. நண்பனின் சட்டையில் அவனிருந்தான். “இந்தப் பய ஊருக்கு நீ சொல்ற உலகமும் தெரியாது. சினிமாவும் தெரியாது. எப்படியோ உனக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யி.. நான் சொல்றதுக்கு ஒன்ணுமில்ல. எங்காலம் இப்பவோ அப்பவோ” அப்பாவின் குரலில் சொல்ல முடியாதசோகமிருந்தது.
ஸோல்னாப் பைக்குள்ளிருந்த சங்கரன் சிலையை அப்பாவிடம் காட்டலாமா என்று யோசித்தபோது, பஸ் ஸ்டார்ட்டாக, “பாத்துக்கோப்பா. போயி லெட்டர் போடு” என்றபடி அப்பா பிளாட்பார்மிலிருந்து குரல் கொடுத்தார். பஸ்ஊருக்குள் வேகங்காட்டி ரயில்வே கேட் தாண்டி நிதானமாயிற்று. இவனுக்குத் தோளில் கிடந்த பை அதிகம் கனத்தது. இறக்கி பையை மேலே லக்கேஜில் வைத்தான்.
பிரம்மாண்டமான பெங்களூர் சௌடையா ஹாலில் அலங்கரிக்கப்பட்ட மேடை அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில்... நாகரிக உடை நங்கையர் இருவர் பூத்தூவ மைக்கில் இவன் போ. சொல்லி அழைக்க அமைச்சர் கைகுலுக்கி வரவேற்க பெரும் இயக்குநர் புட்டண்ணா அந்த ஆதிசங்கரர் வெண்கலச் சிலையை வழங்கியபோது...
தான் தானா வாங்கியது.. தனக்கா, தமிழகத்தின் தென்கோடி கிராமத்துப் பையனுக்கா, தேசிய விருதுபெற்ற உலகின் முதல் சமஸ்கிருத படத்தில் பணியாற்றியதற்கான விருது...
எழுதப்படிக்கத் தெரியாத அம்மாவிடம் ஊர்ப்பக்கமே வராத இந்தப் படத்திற்காக முழுமையாய் நாலுவருஷம் கடிதம் கூடப் போடாமல் ஈடுபட்டதை... டைரக்டர் ஐயரின் வளர்ப்பாய் பால் பாக்கெட் வாங்குவதிலிருந்து ராத்திரி அவர் தூங்க ஐயோடெக்ஸ் போட்டு கால்தேய்த்தது வரை...
குதிரைமுக்கில் சங்கரன் வேட்டியில் காலருகே X 163 காதிபோர்டு எழுதியிருந்ததை கவனிக்காததற்காக யூனிட் வேடிக்கை பார்க்க அவர் அடித்து விரட்டியதை...
காசர்கோடில் ‘இந்த ஷாட்ல சிஷ்யர்கள் அத்தனை பேரையும் பேக்ட்ராப்பா வச்சு கம்போஸ் பண்ணு மது.. டே தொரை கூடப்போ... பிரகாஸா காமிராப்பக்கம் திரும்புனதும் ஸ்டார்ட் சொல்லு... சங்கரன் எழுந்து காமிராவை நோக்கி வரவும் கட்சொல்லு’ தைரியம் கொடுத்து செகண்ட் ஷெட்யூலிலேயே ‘ஸ்டார்ட் கட்’ சொல்லி யூனிட்டையே ஒப்படைத்ததை... இந்தியாவில் ஓடும் அத்தனை நதிகளிலும் குளித்ததை... பத்ரிநாத், கேதரிநாத்... இதையெல்லாம் எப்படிம்மா வார்த்தையில் சொல்வேன்?
கமலஹாசன் நடிக்கலியா... ஸ்ரீதேவி அப்புறம் ஹீரோயாரு சிவகுமாரா என்று கேட்கப் போகும் பக்கத்து வீட்டாருக்கு கிரிஷ்கர்னாடையும், காரந்தையும் சொன்னால் சிரிப்பார்களா...
பூரித்துப் புறப்பட்ட மனதில் ஏகப்பட்ட கேள்விகள். அப்பா பரவாயில்லே ஏதோ சினிமாவிலிருக்கிறான் என்ற வகையில் சந்தோஷப்பட்டுக் கொள்வார்.
பஸ் சாத்தூரில் நின்றதுமே ஸோல்னா பையை மேலிருந்து கீழிறக்கி தோளில் மாட்டிக்கொண்டான்.
சங்கரன் சிலையை லேசாக வெளித்தெரிய மேலே வைத்து ஜீன்ஸை அடியில் வைத்தான்.
ஊருக்குள் பஸ் நுழையும் போதே, மேற்கே கதிரேசன் மலை தெரிந்தது.
செல்வி ஜெயிச்சுட்டேன் செல்வி ஜெயிச்சுட்டேன்... “கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்படறவன் கதை எழுதிக்கிட்டு திரியக்கூடாது. அவஞ் சம்பாதிச்ச காசுல ஒரு முழம் பூ. ஒரு சினிமாவுக்காவது கூட்டிட்டுப்போக வக்கிருக்கணும்” உங்க அப்பாவை, வேலையத்தவன்னு பாத்த இந்த ஊரை ஜெயிச்சுட்டேன்.
ஜெர்மன்ல பார்ப்பான்.. அமெரிக்காவுல பார்ப்பான்.. என் பேர் உலகத்துக்கே தெரியும்
மனசுக்குள் சந்தோஷம் நிரம்பியிருந்தது.
பஸ்ஸ்டாண்டிற்குள் நுழைந்து பஸ் நின்றது.
இறங்கியதும் பஸ்ஸ்டாண்டு சுவர்க்கடிகாரம் பார்த்தான். மணி எட்டு. பின் பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து தலையையும் தாடியையும் சீவி சரி செய்து கொண்டு வீடு நோக்கி நடந்தான்.
சந்தில் நுழைந்ததுமே வாசல் தெளித்தபடி மாரியக்கா எதிர்ப்பட்டாள்.
“யாரு தொரையா... என்ன இப்படி சாமியார் மாதிரி தாடியும் மீசையுமாயிருக்க.. மெட்ராசுக்கு போயி எத்தனை வருஷமாச்சு. அம்மாவுக்கு ஒரு லெட்டராவது போடக்கூடாது.. இப்பிடியா இத்தனை வருஷம் பேசாமயிருப்ப.. அம்மா இப்ப வீடு மாத்திட்டாகள்ள..”
வீடு மாற்றமா.. மூன்று தலைமுறையாக வாழ்ந்த சொந்த வீட்டிலிருந்து வேறு வீடா.. மனங்கலங்கியது.
“இதை வித்துட்டு.. சரஸ்வதி தியேட்டருக்குப் பின்னாலே உடையம்மா பாட்டி வீட்டுல வாடகைக்கு இருக்காக.. இப்ப நாந்தான் இதுல குடியிருக்கேன்.. வந்துட்டு அப்படி நிக்க.. இரு காப்பி குடிச்சுட்டு போகலாம்..”
“வேண்டாக்கா.. நான் வீட்டுக்குப் போய்ட்டு அப்புறமா வர்றேன்.”
சொல்லிவிட்டு நடந்தவனுக்கு சொந்தவீடு பறிபோயிற்றென்பதே தெருவில் நடக்கக் கூசிற்று.
சின்னவீடு. தகரம்பதித்த கதவு. தள்ளினான்.
“ஏ யப்பா தொரையா சித்தி.. தம்பி வந்திருக்கான்”
பேச்சியம்மக்கா குரல் கொடுத்தாள்.
கையில் காப்பி டம்ளரோடு வந்த அம்மா வா! என்று ஒற்றைச் சொல்லில் வீட்டுக்குள் அழைத்தாள்.
அவனுக்கு இடிவிழுந்தது போல மனசு திக்கென்றிருந்தது. மூன்று வீடு வாடகைக்கு விட்டு அவ்வளவு பெரிய வீட்டில் பார்த்த அம்மா அடுப்பும் இருப்பும் படுக்கையுமான ஒரே பத்தி வீட்டில் அவனுக்கு எது பேசவும் நா எழவில்லை.
காப்பி டம்ளரை வைத்தவள்
“என்ன திடுதிப்புனு வந்துட்டே... உங்கப்பாவும் நானும் உயிரோட இருக்கமா செத்துட்டோமான்னு பாத்துட்டு போக வந்தீயா” அதற்குமேல் பேசமாட்டாமல் சேலை முந்தானை எடுத்து முகம் புதைத்து அழுதாள்,
மாதா நாஸ்தி
பிதா நாஸ்தி
நாஸ்தி பந்து சகோதரஹா
அர்த்தம் நாஸ்தி
கிரஹம் நாஸ்தி
சம்பந்தமில்லாமல் வரிவரியாய் ஆதிசங்கரர் படப்பாடல் மனசுள் ஓடியது.
“யாரு தொரையா நீ எப்ப வந்தே?”
ஈரவேட்டி காயவிட்டபடி எங்கோ போய் குளித்துவிட்டு வந்த அப்பா வாசலில் நின்றபடி கேட்டார்.
“இப்பத்தான்”
அப்பாவின் நொடிந்த தேகம். அம்மாவின் இற்றுப் போன கம்பீரம் எல்லாம் விளங்கிவிட எங்கேயாவது வெளியே போய்விட்டு வந்தால் தேவலாம் போலிருந்தது.
ஸோல்னாப்பையை ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு காப்பியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு வெளியேற எழுந்தேன்.
“இதுதான் உந்துணிமணியா?” அப்பா ஸோல்னாபை பார்த்துக் கேட்டார்.
“ஆமா...”
”வர்றது வர்றீயலே.. நல்ல துணிமணியோட வரக்கூடாதா.. நாங்கயிருக்கிற கோலம் போதாதுன்னு நீ வேற இப்படி சந்நியாசி மாதிரி ஜிப்பாவும் தாடியுமா வந்தியாக்கும். வெளியே போறதுன்னா இதையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு உங்கண்ணன் சட்டையொண்ணு பெட்டியிலேயிருக்கு. அதை போட்டுக்கிட்டு வேட்டியக் கட்டிக்கிட்டு போ.. மொதல்ல இந்த தாடியச்செர...”
ஜீன்ஸையும் ஜிப்பாவையும் கழற்றி கொடியில் போட்டுவிட்டு வேட்டி சட்டையை மாட்டிக் கொண்டு வெளியேறினான்.
தெருத்திருப்ப டீக்கடையிலேயே சமயவேலை பார்த்துவிட்டான். டீ குடித்து சிகரெட்டோடு நண்பனறைக்குப் போனான்.
இவன் குடும்பம் ஏன் இப்படியானதெனக் கேட்க, அவன் அதைவிடு.. படம் எக்ஸ்பீரியன்ஸ் எப்படியிருந்திச்சு என்றான் பதிலாய்.
கிட்டத்தட்ட இவன் மாநிலவாரியாக ஷெட்யூல் வாரியாக எடுத்ததை பார்த்ததை சொல்லிமுடிக்க மணி பனிரெண்டானது.
அவனறையிலே குளித்து வீடு போனான். திண்ணையில் உட்கார்ந்தான்.
வீட்டுக்குள் பெரிய பெரிய இரண்டு சூட்கேஸ்கள் இருந்தன. தண்ணீர்க் குடத்தோடு வந்த அம்மா, ”என்ன இங்கண உக்காந்துட்ட.. உங்கண்ணன் மச்சினன்மார் ரெண்டு பேரும் துபாய்லேர்ந்து வந்துருக்காங்க. அவுங்க சூட்கேஸ்தான் அது. அவுக தங்கச்சிமார்களை கூட்டிட்டு வர காரெடுத்துப் போயிருக்காங்க. ஒனக்கப்புறந்தான் அவங்களும் ஊரவிட்டு போனாங்க” பேசியபடி வீட்டுக்குள் போய் குடத்தை வைத்து விட்டுச் சாப்பிடத் தட்டெடுத்து வைத்தாள்.
இவன் சாப்பிட்டான்.
”வாங்க மாமா எப்ப வந்தீக”
என்றபடி துபாய் ரிட்டர்ன் மச்சினன்மார் இருவரும் வந்தனர்.
பளபளா சட்டை, ஃபாரின் வாட்ச், கழுத்தில் தடிதடியான செயின்கள். புது மெருகோடிருந்தன எல்லாமே.
அண்டைவீடு அயல்வீடு மச்சினரின் அக்கா தங்கைகள் என வீடு நிறைய ஆளாக.
இவன் ஆளாளுக்கு ஒரு வார்த்தை பதிலை உதிர்த்துவிட்டு நண்பன் அறைக்குப் போனான்.
”எனக்கு டூட்டி.. நீ வேணா இரு”
என்று சாவி கொடுத்துவிட்டுப் போனான்.
பாய்விரித்துப் போட்ட புத்தகம் தேடினான். சிகரெட் பாக்கெட் கூடவே பொட்டலமிருந்தது.
சிகரெட்டில் நிறைந்தான், நிறைய புகையை உள்ளிழுத்தான்.
ஆகாஸ பதிதந் தோயம்
ஸாகரம் பிரதி கஸ்ஸதி
புனரபி ஜனனம்
புனரபி மரணம்
பிக்ஷாந்தேகி க்ருபா வளம் பனகிரி
மாதன்ன பூர்ணேஸ்வரி..
அகம் பிரம்மாஸ்மி அகம் பிரம்மாஸ்மி
அகம் பிரம்மாஸ்மி.. அகம் பிரம்மாஸ்மி
சுதேசோ புவனேத்ரேயம்
எத்ராசம் கிரஹாவயம்
காலடி இருஞ்ஞாலக்கூடா சத்யம் நம்புதிரிகள் மாடம் பூ குஞ்சுக் குட்டனின் பிருஷ்டம்.. கிருஷ்ணன்ட அம்பலம்.. சிருங்கேரி நவராத்திரி விழா காணவந்த ஆப்ஸாரிபணியாத இளம் பெண்கள்.. உடுகா உடுகா சிக்கலா தா பின்னணியில் அதிகாலை நர்மதையில் நீர் சுமந்து போகும் பெண்கள்.. திரிவேணி சங்கமம்.. டாக்டர் பேனர்ஜியின் பிரமாண்டமான விருந்து.. சரஸ்வதியே போன்ற அந்த டெல்லி மாடர்ன் ஆர்டிஸ்டின் மனைவி.. பனிமலைகளில் காற்றில் பறந்து வந்த ஐஸ்கட்டிகளை நடிக்க வந்த பெண்கள் மீது போட்ட தோடகச்சாரி மட சாமியார். இரவிலே காணாமல் போய் இரவெல்லாம்தேடியும் கிடைக்காமல் யூனிட் அயர..
பத்ரிநாத்தில் வேறொரு குஷ்புக்கு பிறந்த குழந்தை.. அதை அப்படியே விட்டு விட்டு யூனிட்டோடு புறப்பட்ட விந்தை. பிறந்தவன் சங்கரனா? புத்தனா.. துபாய் ரோலர் சூட்கேஸ்கள்.
ஓயாத நினைவலைகளின் ஓவர்லாப்பில் அயர்ந்து தூங்கிப் போய் எழுந்தபோது இருட்டியிருந்தது.
தலை கனக்கிற மாதிரியிருக்க, எழுந்து வேட்டி சட்டையைச் சரிபண்ணியபடி வீட்டுக்குப் போனான்.
அண்ணி கையில் ஒரு பாரின் நெக்லஸ். அண்ணியின் அக்கா கையில் ஹேண்ட்பாக். குழந்தைகள் கைகளில் டீசர்ட்டுமாய் வைத்து பார்த்துக் கொண்டிருக்க ஒரே அமளியாயிருந்தது.
இவன் திண்ணையிலமர்ந்தவன் அப்படியே தூங்கிப் போனான்.
அம்மா எழுப்பி சோறு வைத்துக் கொடுத்தாள். இவன் சாப்பாட்டுத் தட்டு முன் சும்மா இருக்க சோறு உருட்டிக் கையில் கொடுக்க கொடுக்க சாப்பிட்டான்.
தனது ஜோல்னாபையில் வைத்திருந்த அமர்ந்த நிலை கொண்ட சங்கரன் சிலையை அம்மாவிடம் காட்டலாமா என்று நினைத்தவன், காட்டாமலே தூங்கிப்போனான்.
மாலையில் எழுந்து நண்பன் எடுத்து வைத்திருந்த டிக்கெட்டோடு பஸ் ஏறினான். பஸ் ஊரைவிட்டு அவுட்டர் வந்ததும் கண்டக்டர் இவனைப் பார்த்து ”அதென்ன லக்கேஜா? சீட்ல வைக்காதீங்க.. இப்ப ஆள் ஏறும். எடுத்து மேலே வைங்க” என்றார்.
இவன் பதிலேதும் சொல்லாமல் அவர் சொன்னபடி செய்தான்.

No comments:

Post a Comment