‘மதகுரு’ செல்மா லாகர்வெல் என்ற ஸ்விடிஸ் எழுத்தாளர் எழுதி 1891ல் வெளியான நாவல் 1909ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. 1956ல் க.நா.சு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட இந்த நூலை, மருதாபதிப்பகம் பாலகுரு கடந்த ஆண்டு நேர்த்தியான அட்டை வடிவமைப்போடு கொண்டு வந்திருப்பதற்கு தமிழ் இலக்கிய உலகம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. இதே மறைந்த இலக்கிய மகான் க.நா.சு. எழுதிய முன்னுரையிலிருந்து........
1931ல் கல்கத்தாவில் இம்பீரியல் லைப்ரரியில், என்னுடைய பத்தொன்பதாவது வயதில், நான் முதன்முதலாக இந்தக் கெஸ்டா பெர்லிங் ஸாகாவைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருஷங்களில் நான் இதை, ஆதிமுதல் அந்தம்வரை, ஐம்பது தடவைகளாவது படித்திருப்பேன். இப்போதும் மொழிபெயர்க்க உட்காரும் போதுகூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால், தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலு பக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது.
படிக்கும்தோறும் படிக்கும்தோறும் இந்த நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிதுபுதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை கவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் எனக்குத் தோன்றுகின்றன. செல்மா லாகர்லெவ் என்கிற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் கெஸ்டா பெர்லிங்கைப் படித்து முடிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக்கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் கெஸ்டா பெர்லிங்கும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்.
கெஸ்டா பெரிலிங்க்கு ஈடான வேறு நூல் உலக இலக்கியத்திலேயே மிகவும் சிலவேதான் இருக்கின்றன என்றே கருதுகிறேன். இந்தியாவின் இதிஹாஸங்களான ராமாயணமும், மஹாபாரதமும், கிரேக்க பாஷையின் காவியங்களான இலியாதும் ஓடிஸியும், இத்தாலிய டாண்டேயின் தெய்வநாடகமும், ஜப்பானின் நாவல் லேடி முரஸாகி, ஸ்பெயின் தேசத்து டான் க்விஜோட், ஆங்கிலேயரின் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இவற்றையே இந்த நாவலுக்கு ஈடாகச் சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. மேலே சொன்ன நூல்களிலுள்ள ஒரு பூரணத்வம் என்கிற தன்மைகளை இந்தக் காலத்திய எழுத்துகளில் காணக்கிடைப்பது அரிதாக இருக்கிறது. இந்த மாதிரியான பூர்ணத்துவம், கெஸ்டா பெர்லிங் ஸாகாவில் இருப்பது, அதைத் தனி ஒரு சிகரமாக உயர்த்துகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.
கதை சொல்வதில் செல்மா லாகர்லெவின் பாணி அலாதியானது, கலையை, மணக்கும் ஒரு கலையுடன், எளிய உதாரணங்களுடன், கவித்வம் நிறைந்த வார்த்தைகளைக் கொட்டி ஒரு சம்பவத்தை உருவகப்படுத்துகிறாள். இந்தமாதிரிக் கதை எழுதியவர்கள், காவியம் எழுதிய கவிகளைத் தவிர, வேறு யாருமில்லை என்று தைரியமாகக் கூறலாம்.
*கையில் எடுத்தும் இரண்டு அத்தியாயங்கள் (35 பக்கங்கள்) படித்து முடித்து விட்டேன். அத்தனை எளிய, ருசிகரமான நடை, க.நா.சு மகான் தான். இதுகுறித்து பாலகுருவிடம் தொடர்பு கொள்ள:9500061608
No comments:
Post a Comment