Saturday, October 2, 2010

அருவி குறித்து....

மணல் வீடு கவிதை




அவன் இப்போது எழுதுவது

எத்தனையாவது கவிதை

தெரியாது



மனிதன் செய்வதற்கு எத்தனையோ இருக்க



யாரும் சீந்துவாரற்ற

கவிதை எழுதுவதை ஏன்

தேர்ந்தெடுத்தான்



கவிதை என்பதோடு

அவனும் அப்படியே

என்று பட்டிருக்கவேண்டும்



ஆள

சம்பாதிக்க

பேர் வாங்க

படைதிரட்ட

போர் புரிய



இப்படி எத்தனை

எத்தனையோ உண்டும் தான்

இதற்கும் ஆயிரமாயிரம்

பேர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்



குழந்தைகள் நதிக்கரையில்

மணல் வீடுகட்டி கலைத்துப் போவதுபோல்



அவன் போக்கில்

இருக்கட்டும்

கவிதையும்

அவனும்



அருவி குறித்து....



எப்போதோ

அவளும் தலை நனைத்திருக்கலாம்

இவனும்

தேடிவந்து இங்கு தலை நனைப்பான்

என்றறியாமல்



கொலையானவனையும்

கொலையாளியையும்

ஒரே போல

குளிர்வித்தே அனுப்புகிறாள்

அருவித்தாய்

...................

ஒரு பைத்தியம்

ஒரு கவிஞன்

ஒரு குழந்தை



மூவருக்கும்

அருவி சிலிர்ப்புதான்

ஆனந்தம் தான்



கட்டற்றவர்கள்

மீது

கட்டற்றவர்கள்

காதல் கொள்வது

இயற்கை தானே (வா)

இயல்பு தானே (வா) அண்ணாச்சி?

........................



மூலிகைகளின்

வேர் தழுவி

பெரு மரங்களின்

கால் பரவி

பெருமலை பாறைகள்

பள்ளங்களில்

இடறி விழுந்து

சறுகி

பெருகி

பொங்கி

பேரிரைச்சலோடு

தாயற்ற பிள்ளை

ஒருவனின்

தலைதடவித் தழுவி

ஆசிர்வதிக்கும்

தண்ணீர்க்கேது விலக்கு?



வித்யாஷங்கர்

No comments:

Post a Comment