முற்றத்தில், வீட்டுக்குள், படுக்கையில் தெருவில், தோளில், திசைக்கொரு குதிரை கால் உதறிப் புறப்படத் தயாராக வீரனின் கால் தட்டலுக்கு காத்துக் கிடக்கும்.
புல் மட்டும் இல்லாது சாராயநெடி மறவாத குதிரைகள். காப்பிலிங்கப்பட்டியில் மரப் பட்டை சாராயமாக ருசி மாறும் போதே குதிரைகளின் கனைப்பும் அதிரும். காளியின் மகன் அவன். பீடத்தின் பின்னே கார் ட்யூப்களில் தளதளக்கும். சாராயம், கிளாஸ், கிளாசாக பின் யார் வாய்க்கோ.
சங்குமார்க் லுங்கியும், வெளேர் சட்டையிலும் வரிச்சியாய் மினுக்கும் திரேகம் குதிரை வீரனுக்கு. இடைவாரில் நீண்ட அரிவாள் தொங்கும். எந்த வேலையிலும் பச்சைரத்தம் பார்க்கதுடித்தபடி குலவைகளில் காளியோடு அவனும் குதூகலிப்பான்.
வீடற்று வந்தவனைக் காளிதான் தத்தெடுத்து தனது காலடியில் இருக்க வைத்துக்கொண்டாள். வட்டாரச் சண்டியர்கள் எல்லாம் சில்வர் தம்பளர்களில் காளியின் காலடியில் சாராயம் பருகி அருள்பெற்று பலமாகி ரத்தம் பார்த்தார்கள். காக்கி சட்டைகளைக் காலடியில் போட்டு கசக்கிச் சிரித்தார்கள். சாதி மதபேதமற்று சண்டியர்களின் அரிவாள்களுக்குள் பூமணமாய் கசிந்திருந்தது பாசம் ஜாக்கிரதை உணர்வோடு.
தூக்கக் கலக்கத்தில் சடேலென எழுந்து தலையணைக்கு அடியிலிருந்து அரிவாள் எடுத்து ஒன்றுக்கு போனான் குதிரை வீரன் ஒற்றையாக பூனையின் பீதியோடு காலடி எடுத்து வைத்து.
சரவிளக்குகளின் வெளிச்சத்தில் அந்தக் கூடாரத்தில் நெற்றியில் சந்தனக் கீற்றோடு நின்றாள் சௌபர்னிகா.
குதிரை வீரன் வளையங்களை வாங்கி வாங்கி வீசியெறிந்தான்.
வளையங்களில் எதுவும் சிக்கவில்லை. சௌபர்னிக்காவை இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.
சௌபர்னிகாவின் நீண்ட கூந்தலை முகம் அள்ளிப் பூசிக் கொண்டான். மாரில் ஏந்திக் கொண்டான். கால்தொடும் கூந்தலை நடக்கவிட்டு ரசித்தான். அரிவாள் அந்த நாட்களில் எரவாணத்தில் ஓய்வு கொண்டது.
அவளது கூந்தல் நீண்டு நீண்டு தெரு தாண்டி பல ஊர்களில் எட்டிப் பார்த்தது. ஜனங்களின் பேசுபொருளில் சௌபர்னிகாவின் நீண்ட கூந்தல் சிக்கு எடுக்கப்பட்டது.
இளவட்டக்கல் தூக்கி எறிந்தவன் காதில் சௌபர்னிகாவின் கூந்தல் நீண்டு குறுகுறுத்தது. ஜன்னல் வழியே அவள் கூந்தல் உலர்த்துவதைக் கண்டு ஸ்கலிதமடைந்தான். மீண்டும் மீண்டும் நீண்ட கூந்தல் கண்டு ஸ்கலிதமடைந்தான்.
வேட்டைக்குப் போன குதிரை வீரன் ஜன்னலோரம் கூந்தல் உலர்த்துவதறிந்து திரும்பி வந்தான். பரணில் ஏறி பதுங்கினான்.
ஜன்னலோரம் கருமேகமாய்த் திரண்டது சௌபர்னிகாவின் கூந்தல். இளந்தாரியின் கண்ணில் சூர்ய பிரகாசம். எட்டி உதைத்தான் குதிரையை எரவாணத்து அரிவாளை எடுத்து இடுப்பில் சொருகினான்.
இளந்தாரியின் தாட்டிக்கம் தயக்கம் விளைவித்தது.
செங்கோட்டை சென்று தாழம்பூ வாங்கி வந்தான் தாதி மார்களை விட்டு சௌபர்னிகாவின் கூந்தலில் தாழம்பூ தைக்கச் சொன்னான்.
நீண்ட கூந்தலை விரித்து தூங்கினான். மார் வியர்வை அள்ளி துடைத்தான். ஏகாந்தமாய் தூங்கி விழித்தான் பரவசத்தோடு.
குளித்து நுனி முடிச்சிட்ட அவளது நீண்ட கூந்தல் ஜன்னலோரம் மேகமாய் கருத்திருந்தது.
அரிவாளின் கூர்பார்க்க சுண்டு விரல் தீட்டி ரத்தம் ருசித்தான் சாராயம். நுரைத்து நெஞ்சில் கனல் பறந்தது.
இடக்கையால் நீண்ட கூந்தலை அள்ளினான். தாழம்பூ வாசனை கிறுகிறுத்தது. மூச்சிழுத்து அரிவாளால் கொற கொற வென அறுத்தான்.
பல்லக்கில் நீண்ட கூந்தலை மடி ஏந்தி ஊர்வலமாக போய் மயானத்தில் எரித்தான்.
பதினெட்டு பட்டிக்கும் தாழம்பூ கூந்தல் வாசனை பரவி பேச்சானது.
வீடு திரும்பினான் குதிரை லாயம் காலியாக இருந்தது.
அவன் ஓங்கி குரலெடுத்து வாய்விட்டு அழுதான் கண்ணீர் ஆறாய் பெருகி பதினெட்டு பட்டிகளிலும் தாழம்பூ வாசமோடு பரவியது.
No comments:
Post a Comment