Wednesday, October 6, 2010

கவிதலையருவி

கேரளத்து பகவதியின்
அருள் பெருக்கு
அருவியாய்
தாரை தாரையாய்
பொங்கி வழிகிறாள்
வேர் மண் நனைக்க

அகத்தியன் அமர்ந்து
தவசிருந்த அகண்டபாறை நிறைத்து
பெருகிப் பரவுகிறது
சித்தம் போக்கில்
கற்களை சிற்பமாக்கி

சங்கிலி பூதத்தான்
கட்டளைக் கிணங்க
மேகங்கள் குவிந்து
குதித்துப் பெருகுகின்றன
பேரருவியாய்
ஆனந்தப் பேரோசையோடு

பாண்டி மாதேவி
பசியார அள்ளிப்பருகிய நீர்
கைமணத்தோடு பெருகி
மேனி சிலிர்க்க
தோல் துளைத்து
உள் இறங்குகிறது
தாய் ஈரம்

தலை தட்டி
தோள் நழுவி
மயிர்க்கால்கள் சிலிர்ப்புற
வாய் பிதற்ற
அடி வயிற்றில்
அருவியின் நர்ந்தனம்

ஹே மாதா மூதாதையரே
வன தேவதா
வாட்களின் மோதல்
இரைச்சல் கேட்டு ஓய்ந்த
ரத்தம் கழுவிய
மூல அருவியே
மூச்சிரைக்க
பரவசத்தில்
பிதற்றுகிறான்
ஏழாம் தலைமுறை

துள்ளிக் குதித்தும்
தொடர் ஓட்டம் ஓடியும்
தவழ்ந்து பெருகியும்
தடாலென அறைந்தும்
ஆசிர்வதிக்கிறாள்
கவிதலையருவி
தலை தடவி

வரிசையாய்
யானைகள் இழுக்க
வன புத்திரர்கள்
மலை கடந்து
நதி கடந்து
வேரிழந்து
லாரிகளில் ஏற்றப்படுகிறார்கள்

கவிதலையருவி
வம்சவிருட்சம்
சிதையாமல்
வேரில் பாய்ந்து
உயிரூட்டுகிறாள்
வெட்டும் கோடாரிக்காரன்
தாகம் தணித்து...

வித்யாஷங்கர்

(கவிதலையருவி பாபநாசம் அணையிலிருந்து மலைமேல் 7வது கிலோமீட்டரில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான எஸ்டேட்டில் உள்ளது. என்னை அழைத்துச் சென்று தனித்து அருவியில் பொங்கிப் பெருகி நனைய வைத்து புலாலும் மதுவும் போதும்போதுமென அருவியிலேயே கிடைக்கும்படி  வந்து ஊட்டி மகிழ்வித்த முரளியின் அன்பிற்கு)

No comments:

Post a Comment