Friday, October 1, 2010

பிப்லி லைவ்வும் போப்ஸ் டாய்லெட்டும்

பிப்லி லைவ் அமீர்கான் தயாரிப்பில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம்.
இந்திய விவசாயியின் மனசாட்சியாக இருந்து இந்தப்படத்தை தயாரித்துள்ள
அமீர்கானுக்கு முதலில் சல்யூட்!
படம் பார்க்கும் போது  மீடியாக்காரர்களின் முகத்தில் விவசாயி ஒருவர் காரித்துப்பிய எச்சில் தான் தெரிகிறது.
விவசாயத்தை ஆதரமாகக் கொண்ட பிப்லி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்.
அவர்கள் வாங்கிய கடனுக்காக நிலத்தை விற்று தரும்படி வங்கி கேட்கிறது.
உள்ளுர் பணக்காரரும் அரசியல் புள்ளியுமானவரிடம் இருவரும் போய் உதவி கேட்கிறார்கள்.
விவசாயி தற்கொலை செய்துகொண்டால் அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் தருகிறது. உங்களில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து விட்டு, பணத்தை வைத்து நிலத்தை தாய்பாற்றிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்கிறார்.
அண்ணன் தம்பி இருவரும் ஆலோசிக்கிறார்கள் தம்பி தற்கொலை செய்து கொள்வதென்றும் அதில் வரும் பணத்தை வைத்து அண்ணன் குடும்பத்தையும் விவசாயத்தையும் பார்த்துக் கொள்வதென்று முடிவு செய்கிறார்கள். இதை இருவரும் ஒரு டீக்கடையில் வைத்து தெரிவிக்கவும் செய்கிறார்கள்.
இதைக் கேள்விப்படும் அந்தப் பகுதியில் அச்சகத்தில் பணியாற்றும் நிருபர் தனது பத்திரிகையில் இதை வெளியிடுகிறார்.
இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் செய்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் தற்கொலை செய்து கொள்ளப்போகும் விவசாயி நாதா வை லைவ்வாக காட்ட முடிவு செய்து அப்லிங்க் வேனோடு கிராமத்திற்கு போகிறது.
நாதாவின் பேட்டி டி.வி.யில் வந்ததும் முதலமைச்சர் கோபமாகி கலெக்டரிடம் பேசுகிறார்.
கலெக்டர் நாதாவின் சீட்டிற்கு போய் சாஸ்திரி திட்டம் என்று ஒரு அடிபம்பை தந்துவிட்டு செல்கிறார்.
வேறொரு சாதிக்கட்சி தலைவர் வந்து நாதவை சந்தித்து அவனை சாகவிடமாட்டோம் என்று சூளுரைக்க அதுவும் டி.வி.யில் வருகிறது.
மேலும் டென்ஷன் அதிகரிக்கிறது. இதற்குள் நாதாவின் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான காமிராக்கள், வீடியோ காமிராக்கள் ஆப்லிங்க் வேன்கள், போலீஸ் பாதுகாப்பு என்று அந்த ஊரை அமளிப்படுகிறது.
தொடர்ந்து நாதாவைப்பற்றி ஊராரின் பேட்டிகள் நாதா சொன்னபடி செத்துருவான் என்று உறுதி செய்கிறது.
முதல்வருக்கு எதிராக சதி செய்யும் ளஅதே கட்சியைச் சேர்ந்த நாதாவை சந்தித்து 2 நாளில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றால்  சொன்று விடுவதாக மிரட்டிவிட்டு வேறு மாதிரி டி.வி.க்களுக்கு பேட்டி கொடுத்து விட்டு போகிறார்.
இரவும் பகலும் டி.வி.க்காரர்கள் நாதாவை கண்காணித்தபடி இருக்கிறார்கள்.
அவனது தற்கொலை அப்படியே லைவ்வாக காட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.
நாதாவை குடும்பத்தோடு, ஆட்டுக்குட்டியோடு என்று விதம் விதமாக ஒவ்வொரு டி.வி.யும் போட்டி போட்டு காட்டுகின்றன.
முதலமைச்சரே நாதாவின் கிராமத்திற்கு வந்து ஒரு லட்ச ரூபாய் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து சாதித் தலைவரோடு வந்து செல்கிறார்.
கிராமம் திருவிழா கோலம் கொள்கிறது.
எப்போதும் கார், ஜீப் பறந்து கொண்டேயிருக்கிறது.
டி.வி.காம்பயர்கள் முகத்துக்கு மேக்கப் போட்டு லிப்ஸ்டிக் பூசி தினமும் காலையில் நாதாவை குறித்து செய்திகளை லைவ்வாக தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருநாள் அதிகாலையில் காலைக்கடன் கழிக்க நாதா ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒதுங்க அதையும் ஒருவர் டவரிலிருந்து காமிராவில் சுருட்டிவிடுகிறார்.
அதற்குப்பிறகு நாதாவை காணவில்லை.
நாதா மலம் கழித்ததைக் கூட தொலைக்காட்சிகள் காட்டி அவன் எங்கே என்று கேள்வி எழுப்புகின்றன.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு வீட்டில் நாதா சிலரால் கடத்து வைக்கப்பட்டிருப்பது உள்ளுர் நிருபருக்கு தெரியவருகிறது.
அவர் தொலைக்காட்சி நிருபருக்கு போன் செய்து தெரிவிக்க அந்த வீடு நள்ளிரவில் தொலைக்காட்சி நிருபர்களால் முற்றுகையிடப்படுகிறது.
அப்போது ஏதோ வெடிக்க தீ விபத்தில் நாதா இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
நாதா பேரில் ஏழை விவசாயிகளுக்கு உதவி கார்டு திட்டத்தை முதல்வர் அறிவிக்கிறார்.
நாதாவின் அண்ணன் பணத்திற்காக அலைய விபத்தில் இறந்தவருக்கு பணம் தரமுடியாது தற்கொலைக்குத் தான் 1 லட்சம் என்று அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.
அடுத்தடுத்து வரிசையாக மீடியா கார்கள் ஏமாற்றத்தோடு ஊரைவிட்டு கிளம்புகின்றன.
நகரின் உயர்ந்த கட்டிடங்கள் நாற்கரச் சாலைப் பணி நடைபெறுகிறது. விவசாயத்தை கைவிட்ட பலர் மண்வெட்டிக்கொண்டுஉள்ளனர். அவர்களுக்கிடையே நாதாவும் இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு நகர்புறத்தில் வேலைக்கு குடியிருப்பதாக எழுத்தில் காட்டப்படுகிறது.
நையாண்டியாக மீடியா குறித்து கதை பேசினாலும் போகிற போக்கில் இப்போதுள்ள அரசியலமைப்பை, அதிகாரவர்க்கத்தை மீடியாக்களின் சொரணையற்ற தன்மையை விவசாயிகளின் நலிவை சுட்டிக் காட்டத்தவறவில்லை.
இப்படியொரு படத்தை முதல்வர் குடும்பத்து வாரிசுகள் காலநிதி, உதயநிதி, தயாநிதி யாராவது தயாரிக்க முன்வருவார்களா? மாட்டார்கள் (இது மல்லாக்கப்படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து கொண்டு எச்சில் துப்பும் விஷயமாகிவிடும்)
அதேசமயம் பிரேசில் படமான போப்ஸ் டாய்லெட் இதைபார்க்கும் போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இன்னமும் கிராமமென்றால் பச்சைதாவணி மாமன் மகனும், அருவாளோட திரியும் இளந்தாரியும் அவிங்கா வீம்பு பண்றாங்கே பெருசு சொல்லிருச் என்று வசனங்களால் கிராமத்தை காட்டாமல்
விளைநிலங்கள் அடுக்குமாடி வீடுகளாகவும், கல்லூரி கட்டிடங்களாகவும் மாறிவருவதை புதிய தலைமுறை சினிமாக்காரர்கள் திரைக்கு கொண்டு வர வேண்டும்.
கவிஞர் தேவதச்சன் சொன்னது போல கிராமங்கள் மேலும் மேலும் நோய்வாய்ப் பட்டுக்கொண்டிருக்க நகரங்கள் டானிக் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.
இதை என் இளைய தலைமுறை எடுத்துச் சொல்ல பிளிப்லைவ் போப்ஸ் டாய்லெட் போன்ற படங்களை பார்க்கவேண்டுமென பரிந்துரைக்கிறேன்.
போப்பின் வருகையையொட்டி தொலைக்காட்சிகளும், மற்ற மீடியாக்களும் அந்த ஊரில் உள்ளவர்களின் பேட்டியை தொடர்ந்து வெளியிட்டுவரும்.
இந்தநிலையில் பக்கத்து நகரிலிருந்து சிறுசிறுபொருட்களை கடத்து வரும் நண்பர்கள் போப் வருகையை வைத்து சம்பாதிக்க திட்டமிடுவார்கள்.
மீடியாக்கள் லட்சம்பேர் கூடக்கூடும் என்று திரும்பத்திரும்ப சொல்லும்.
இதை நம்பி ஒருவர் ஆயிரக்கணக்கான விதவிதமான கேக்குகள் தயாரிப்பிலும் இன்னொருவர் பீட்சா தயாரிப்பிலும் ஈடுபடுவார்கள்.
கதாநாயகன் வேறுமாதிரி யோசிப்பான். இவ்வளவு பேர் கூடுமிடத்தில் ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்தால் இதற்காக அவன் படும்பாடுதான் கதை. ரேடியோ ஜாக்கியாக மாற விரும்பும் மகளின் டிரான்சிஸ்டருக்கு பேட்டரி கூட வாங்கித்தராமல் பைசா பைசாவாக சேர்த்து கட்டண கழிப்பிடத்தை கட்டிவிடுவான். போப் வருகையன்று அவன் கழிப்பிட கோப்பையை ஏந்திவரும் போது போப் சிலநிமிடங்கள் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுவிடுவார்.
அவன் பைத்தியம் பிடித்தவன்போல் டி.வி.மீது பீர் பாட்டிலை எறிவான் இப்படி முடியும் கதை.
இதில் மகளின் ஆசை, இவனது கனவு, மனைவியின் பாடுகள் எல்லாமே நிராசையாவது பெருத்த சோகம்.
பிப்ளி லைவ் படத்தில் விவசாய குடும்பத்தின் உறவு நெருக்கங்கள் நிலத்தின் மீதான ஈடுபாடு எவையும் கண்டுகொள்ளப்படாதது வருத்தத்திற்குரியதே.
ஆனாலும் படத்தின் முதல் காட்சியிலிருந்து கிணறு வெட்டும் ஒ
ருவன் (பசி பட்டினியோடு) தண்ணீரை பார்க்காமலே மடிந்து போவது தனிக்கதை. (கி.ரா.வின் கிணறு கதைதான் நினைவுக்குவந்தது)
இதில் கதாநாயகனோடு அவளதுகுடும்பத்தாரும் அவனது ஆசையோடு பயணித்து நிராசையில் தத்தளிப்பது மிகவும் நெகிழ்ச்சியானது. திரைக்கதையில் பிப்ளி லைவ்வில் அது மிஸ்ஸிங்.
இருப்பினும் சமகால பிரச்சணையை விமர்சனக் கண்ணோட்டத்தோடு முன் வைத்த அமீர்கானுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
                                                                                             வித்யாஷங்கர்.

No comments:

Post a Comment