Thursday, October 28, 2010

பிஸ்கெட் பாபா

“இருப்பதற்காகவே

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்”

இது கவிஞர் நகுலனின்

கவிதை வரிகள்

இப்படி இல்லாமல் போகச் செய்வதையே வடபழனியில் உள்ள பரஞ்ஜோதி பாபா! செய்கிறார்.

வெளுத்த சிகையும், ஜடா முடியும் தாடியுமான பாபாவிடம் வருபவர்கள் எல்லாம் அவருக்கு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி வந்து தருகிறார்கள்.

அவரும் தன்னைத் தேடி வருபவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளையே பிரசாதமாக வழங்குகிறார். ஆக, அவர் பிஸ்கெட் பாபாவாகத் திகழ்கிறார்.

பிஸ்கெட் பாக்கெட்டுகளின் மீது அவருக்குள்ள ஈடுபாடு குழந்தைகளையும் மிஞ்சக்கூடியது. தனக்கு இடப்புறம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை சீட்டுக்கட்டை கலைப்பதுபோல மாறி மாறி அடுக்குகிறார். வரிசையை முன் நகர்த்துகிறார். கொஞ்ச நேரத்தில் பிஸ்கெட் பாக்கெட் வரிசையை பின்நகர்த்துகிறார். பச்சைக் கலர் பாக்கெட்டுகளை மேலாகவும் நீலநிற பாக்கெட்டுகளை கீழாகவும் இரண்டு வரிசையாக அடுக்குகிறார். பின் அதையே மாற்றி நீலக்கலர் பாக்கெட்டுகளை மேலாகவும் பச்சைக் கலர் பாக்கெட்டுகளை கீழாகவும் மாற்றி அடுக்குகிறார். பின் வரிசையை தன்பக்கம் நகர்த்துகிறார். சற்றுநேரங்கழித்து அதை சற்று தள்ளி நகர்த்துகிறார்.

ஒருவர் பையை பாபா காலில் வைத்து வணங்குகிறார்.

பாபா பையை வீட்டுக்குவந்த விருந்தாளிகளின் பையை குழந்தைகள் ஆவலோடு பார்ப்பது போல திறந்து பார்க்கிறார்.

வந்தவரிடம் அதை எடுத்து தரும்படி கேட்கிறார்.

பிஸ்கெட் பாக்கெட், பேரிச்சம் பழம் இப்படி ஒவ்வொன்றாக பாக்கெட் பாக்கெட்டாக எடுத்துக் கொடுக்க அதைவாங்கி தனக்கு இடப்புறத்தில் அங்கும் இங்குமாக மாற்றி மாற்றி வைக்கிறார். எது அதற்குரிய இடம் என்பதில் தீவிர முனைப்போடு செயல்பட்டு அவற்றை வைக்கிறார்.

பாபாவின் இடப்புறம் பிஸ்கெட், மேஜையில் பிஸ்கெட், வாசலில் தட்டில் உடைத்து போடப்பட்ட பிஸ்கெட், அவரது படத்தின் கீழ் பிஸ்கெட், யாரோ அளித்த பெட்டி நிறைய பிஸ்கெட், பக்தர்கள் ஒவ்வொருவர் கையிலும் பிஸ்கெட் பாக்கெட். எலிவொன்றின் கீச், கீச் சத்தம் அறையில் தொடர்ந்து கேட்கும் அதேபோல பூனை ஒன்று சுதந்திரமாக அறையின் நாலா பக்கமும் திரியும், ஆட்கள் மத்தியில்.

ஆனால் ஒரு நாளும் பாபா ஒரேயொரு பிஸ்கெட்டைக் கூட சாப்பிட்டுப் பார்த்ததில்லை. ஒரு பிளாஸ்டிக் தட்டில் உடைத்துபோடப்பட்ட பிஸ்கெட்கள் பால் ஊற்றப்பட்டு எலிக்கோ, பூனைக்கோ எப்போதும் தயராகயிருக்கும். அவரை பார்க்க வரும் பக்தர்களிடம் ஒருவருக்கு பிஸ்கெட் பாக்கெட் தருவார். திரும்ப வாங்கி அதை மற்றவர்க்கு தருவார். மற்றவரிடம் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டை வேறொருவருக்கு தருவார். சிலரிடம் வாங்கியதை தராமல் தன்னருகே வைத்துக் கொள்வார். சிலருக்கு வெறும் கையை மட்டும் காட்டி பிஸ்கெட் தராமலே போகச் சொல்கிறார்.

பாபாவை பார்த்ததும் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போன்ற மெல்லிய அதிர்வு பரவுகிறது. எட்டடி குச்சில் அவரருகே தரையமர்ந்ததும் முதுகுக் தண்டில் ஒரு சிலிர்ப்பும் இரு புருவ மத்தியில் ஒளி அல்லது இருள் கவிழ்கிறது. அடுத்த சில நொடிகளில் காணாமல் போகிறோம்.

பசி, துக்கம், தூக்கம், ஆசை, கவலை, கர்வம், பொறுப்பு, காலம், இடம் இப்படி எல்லாமற்றவனாகி விடுகிறோம்.

காலி செய்து விடுகிறார்.

பாபா தனக்குத் தானே பேசிக் கொள்வதைத் தவிர ‘இரு’, ‘குடு’, ‘போ’ என்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பிறரிடம் பேசுகிறார். எப்போதும் அவரைச் சுற்றிலும் அந்த சிறிய அறைக்குள் குறைந்தது இரண்டு மூன்று பேராவது கண் மூடி தியானத்திலிருப்பதை பார்க்கலாம்.

கர்மயோகம், ராஜயோகம், குண்டலினி பயிற்சி என்று பல்வேறு விதமான பெயர்களில் பெரிய பெரிய விளம்பரத்தோடு பன்னாட்டு நிதியோடு பக்தர்கள் புடை சூழ பிரமாண்டமான ஆஸ்ரமங்களில் மைக்கும், இசையுமாய் வழி காட்டுவதாகச் சொல்லப்படும் கார்ப்பரேட் சாமியார்கள் மத்தியில்

வடபழனி பரஞ்ஜோதி பாபா அருகே அமர்ந்ததுமே உன்னை காலியாக்குகிறார்.

உனக்கு எதுவும் போதிக்காமல்,

உனக்கு எதுவும் சொல்லாமல்,

உனக்கு எதையும் பயிற்றுவிக்காமல்,

காலியாக்குகிறார். அன்றாட செக்கு மாட்டு வேலைகளிலிருந்து விலகி சும்மா இருக்கச்செய்கிறார். சும்மா இருக்கும் சுகமறியேனே என்று நொந்து போனவர்களை சும்மாயிருக்கும் சுகமறிய செய்கிறார். அவர் போதிப்பதுமில்லை, சோதிப்பதுமில்லை.

பாபா குறித்து புத்தகம் ஒன்று எழுதுவது தீர்மானித்து நாலைந்து பக்கங்கள் எழுதியும் விட்டேன். ஆயுத பூஜையையொட்டி அலுவலகம் சுத்தப்படுத்தியதில் வேண்டாத சில குறிப்புகள் இருக்க, பாபாவை பற்றி எழுதியதை யாரோ கிழித்து விட்டார்கள்.

இது எனக்கு ஒரு நெருடலாகப்பட்டது. அதற்குப் பின் ஒருவாரமாக எழுத முயன்றும் பேப்பர், பேனாவை எடுத்துவைத்தும் எழுத முடியாமலே போனது.

24ம் தேதி வாசுவுக்கு போன் பண்ணி பாபாவை பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

காலையில் வாசுவோடு பைக்கில் போனேன். இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை நான் வாங்கிக் கொள்ள, வாசு பூ வாங்கி வந்தான்.

ஏற்கனவே மூன்றுபேர் உள்ளே இருந்தனர். பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்துவிட்டு அமர்ந்தேன். என்னிடம் திரும்பி கைநீட்ட பணத்தைக் கொடுத்தேன்.

பணத்தை அவர் ஒரு போதும் அப்படியே வாங்கி வைக்கமாட்டார். கையால் தடவி மடிப்பு நீவி, மேலும் கீழுமாக உயர்த்தி கள்ளநோட்டை பரிசோதிப்பது போல பார்த்தே வைப்பார். ஒவ்வொருவரிடமும் பணம் பெறும் போது இதை தவறாமல் செய்வார். சிலரிடம் பணத்தைக் கேட்டு வாங்கி அதை நீவி அவர்களிடமே திருப்பியும் கொடுத்ததை பார்த்திருக்கிறேன்.

பாபா

தங்களைக் குறித்து

புத்தகம் எழுத

அனுமதிக்க வேண்டும்

துரை

என்று பேப்பரில் எழுதி எடுத்துப் போனதை அவரது கையில் கொடுத்தேன்.

அதை வாங்கிப்படித்தவர் எதுவும் சொல்லாமல் எதிரே இருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டார்.

சற்று நேரங்கழித்து புறப்பட்ட அவர் பேப்பரை என்னிடம் தந்து போனார். நான் கையில் விரித்து வைத்து பாபாவிடம் நீட்டினேன். அதைப்பார்த்த பாபா

‘அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியவர், வேறு புறம் திரும்பிக் கொண்டார். பிறகு என்பக்கம் திரும்பி ‘சரி’ என்றார்.

பிறகு வெளியேவந்து வாசு பேப்பரை வாங்கி பார்த்தவன், அனுமதியளியுங்கள், வழங்குங்கள், என்று எழுதாமல் அனுமதிக்கவேண்டும் என்று கட்டளை போல இருந்ததால்தான் அதை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டார் என்று விளக்கினான்.

அது சரி

யார் யாருக்கு கட்டளையிடுவது?

யார் யாருடைய கட்டளைக்கு

பணிய வேண்டும்?

ஏன் கட்டளையை அவர்

ஏற்க வேண்டும்

என்றெல்லாம் கேள்வி எழுந்தது.

எப்படியோ ‘சரி’ என்று அவர் சம்மதம் தெரிவித்ததே சந்தோஷம்.

“தன்னைத்தானே அறிந்து கொள்ளும்

பக்குவம் பெற்றவரது உள்ளம்.

இரும்புப் பந்து நெருப்பில்

நெருப்புப் பந்து தெரிவதுபோல்

பிரகாசம் ஏற்பட்டு வருகிறது.

உடல்உள்ளம் பற்றிய

சிந்தனைகள் அழிந்துவிடுகின்றன.



உணர்வு இருப்பதில்லை

இந்த நிலை அமைதி நிறைந்த

அதிக சக்திவாய்ந்த நிலையாகும்.

உடல் உருவத்தை முன்னிலைப்படுத்துவது

அறியாமையால் அதை

மறைக்கும் நிலைக்கு வளர்ந்துவிட்ட

வர்கள்தான் மறுபிறவி

பந்தத்தை அறுக்க முடியும்”

என்பது பகவான் ரமண

மகரிஷியின் வாக்கு. அந்த வாக்குகேற்ற வாழும் சாட்சி பரஞ்ஜோதி பாபா.

No comments:

Post a Comment