Friday, October 15, 2010

மகாகவி பிரமிளின் பிரகடனம்

கவிஞர் பிரமிள் கவிதையின் உச்சக்கட்டம்; அற்புதம்; சித்தபுருஷர்.
தமிழிலும் அதேபோல ஆங்கிலத்திலும் திறம்பட எழுதக்கூடியவர். அவரது மொழிபெயர்ப்புகளில் மொழி செலுமை ஆட்சி செய்யும். ‘The isle of the Buddha’ கவிதை நாடகம். இப்போதும் தேர்ந்த கலைஞர்களால் அரங்கேற்றப்படக்கூடிய காவிய நயமும் இன்றைய அரசியல் வன்முறையையும் முன்வைப்பது.
EPIC
A feather detaching it self
from thw wing
Render on the
passage of the wind
The life of the bird
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் இலகுவாக மொழி பெயர்க்கக்கூடியவர். ஆங்கிலத்தில் தேர்ந்த புலமையோடு எழுதக் கூடியவர். ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலக் கவிதைகள் எழுதி அவை Quest, Century, Avenues போன்ற பத்திரிகைகளில் அவை வெளிவந்திருக்கின்றன.
நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஒர் உயர்ந்த பட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம் களிமண் சிற்பங்கள் செய்வதிலும் தேர்ந்தவர்.
இவரது ஆன்மீக ஈடுபாடு இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக்கவிஞர்’ என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும்காலசுப்ரமணியம் குறிப்பு.
பிரமிளை, சாதாரண மனிதர்கள் எளிதில் நெருங்கிப் பழகிவிட முடியும். பெட்டிக்கடை காரர்களோடு கூட சிநேகமாகப் பேசுவார். குடிசைவாழ் மக்களோடும் பேசிப் பழகச் கூடியவர்.
‘எழுதுகிறேன் பேர்வழி’ என்று அவரிடம் பேசத் தொடங்கினால் நார்நாராக கிழித்தெறிந்து வார்த்தைகளில் தொங்க விட்டுவிடுவார்.
இதனால் பலரும் மரியாதையோடு எட்ட நின்றே பேசியதை கூட இருந்து பார்த்திருக்கிறேன். அதில் இப்போது ஜாம்பவான்களாக திரியும் சிலரும் அடக்கம்.
அவரது பேச்சில் எப்போதும் நக்கல், நையாண்டி, குதர்க்கம் இருந்து கொண்டே இருக்கும். நடக்க சளைக்காதவர், தெருவில் விளையாடும் குழந்தைகளை கண்ணாடியை உயர்த்தி வியப்போடு பார்ப்பார். அவர்களை அழைத்துப் பேசுவார். தெருவென்றும் பாராமல் கைதட்டி பலமாகச் சிரிப்பார். அவரோடு நடப்பதென்பதே உற்சவரோடு தெருவீதி வந்த மாதிரியாக இருக்கும். புறச் சூழல் பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாதவர். ஒருபோதும் அவர் எதற்காகவும் வருத்தப்பட்டோ சோர்வுற்றோ பதட்டப்பட்டோ பார்த்ததேயில்லை.
எப்போதும் ஓடிவிளையாடுகிற பருவத்து குழந்தை போன்று உற்சாகமாகவே இருப்பார். நக்கீரனில் நான்வைத்த தடாலடி டைட்டில்களை கண்விரித்து வாய்பிளந்து ரசிப்பார். அதில் மெல்லியதாக கேலி இருக்கும்.
எனக்குத் தெரிந்து அவர் எந்த மனிதரையும் உயர்ந்தவரென்று மரியாதை தந்ததோ தாழ்ந்த வரென்று மரியாதைக் குறைவாக நடத்தியதோ இல்லை.
பிரகடனம் என்ற விமர்சனக் கவிதையில் அவரே தமிழ் இலக்கியச் சூழலையும் அதில் அவரது அழியா இடத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அன்றொரு நாள்
ஐன்ஸ்டீனிய மனிதக்கணக்கை அவர்தம்
கணிதார்த்த சாம்யக் கருத்தில் இழுத்த என்     கவிதைக்குச் ‘சிற்பி’ அளித்த பரிசைப் பார்த்து
வயிறெரிந்த தி.க.சி.
கட்சி மந்திரம் ஓதி உச்சூ என்றதும்
கவித்துவ மின்னோட்ட ரகசியம் புரியாமல்
குதறப்புகுந்து சுருண்டு விழுந்தனர் சில சீடர்கள்
இப்போது மார்க்ஸீயம், மாதமாடிக்ஸ், சாமீயம்
எல்லாம் தம் வரட்டுப் பிராண்டல் விமர்சனத்துள்
அடக்கம் என்று வந்து நிற்கிறார் சிவசேகரம்
பதிவேட்டுப் பெயரும் பிறந்தபதி இது என்றும்
இன்னொரு சிவா சொன்னதுக்கு மாறாய்
இவர் முகப்பில் நான் பிறந்த விபரக்குவா குவா
முகப்பிலே இல்லாத ஓட்டை ஒன்று
தம்பியார் நினைவிலே தங்கியிருப்பதை
இங்கே தருகிறேன்.
அன்றவர் என்னிடம் தந்த கவிதை பற்றி
‘கவித்துவ உயிரில்லை’ என்று நான் சொன்னதது!
யந்திரத்தனம் கொண்ட அனைவரின் இயல்பு
‘விட்டேனாபார்!’ என்று எழுதவைத்தது அவரை
எல்லாமே உயிரற்ற புரட்சி குணமற்ற
கருத்துச் செறிவற்ற கண்டுபிடிப்பற்ற
தவளைக் கூச்சல்.
அதற்கந்த யுகமந்திரம் மார்க்ஸீயம்தான்
ஆதார சுருதியாம்.
இவருக்கு முந்திய கட்சீய உச்சுக்சூத்
தலைவர் தி.க.சி.
அவர் ஏவிப்பாய்ந்த கார்லோஸ் அன்ட் கோ.ரா.
மற்றும் கனகரட்னா என்ற ராஜசேகரன்;
இப்போது புதுஸாய் இந்த சிவசேகரம்
ஒவ்வொருத்தர் எழுத்தும் அதே கொழ கொழ!
இதை விமர்சித்தால், ஒண்ட இடம் தேடி,
மார்க்ஸீக்குள் ஒளிக்குது மண்டூகக் கூட்டம்!
கவின் தமிழ் எழுத்தில் கிசுகிசுத்த ஜாதீயக்
குரல்கள் ஞா.கூ. சு.ரா.வெ.சாக்கள்
முழுப்பேர் வழிகளையும் தோலுரித்த என் எழுத்தே
மார்க்ஸீய புரட்சி மனோநிலைக்கு
இங்கே இலக்கணம்.
கட்சீய முத்திரையைத் தாண்டிக் கனலும்
புரட்சிகரம், இதை உணரும் விஞ்ஞான
வாசகமனோபாவம் இல்லாத மௌடீகர்
வழங்கும் ஆய்வுத் தீர்ப்பு நிற்கிறது.
‘பார் என் அழகை’ என்று கால்பரப்பி
காலத்தின் கழுவில்!
குடும்பப் பெருமைகள், பட்டம், பதவிப்
பவிஷீகள் எதற்கும் பிடிபடாக் கவித்வம்
எனக்குள் அடக்கம். இதனால் என்னை
நேர்முகத்தில் அறிந்த பணக்கார முட்டாள்
படிப்பாளிகள் சிலருக்கு எரிகிறது வயிறு!
விளைவு அவர்தம் விசித்திர ஆய்வு!

II
ஆய்வுத் தர்ககம் விஞ்ஞான பூர்வ
வாசக விழிப்பின் கண்காணிப்பு
எல்லாவற்றையும் துச்சமாக்கு
பிரமிள் மீது காறித்துப்பு
துப்பினால் அதோ உச்சாணிக்கொம்பு
அதில் இருக்கிறது தேவாங்கு
உமிழ்நீர் கடாஷம் தரும் அது எனக்கு
என்பது தானே சிவாவின் கணிப்பு
புதுக்கவிதையின் விசேஷத்தன்மை
யாப்பினை மீறல் அல்ல, இதனை
யாப்பியல் நூலில் கவிஞன் சி.மணி
அன்றே அறுதிஇட்டதைக் கவனி.
கணிப்பொறித்தனமாய் ஓடும் பிரக்ஞை
திடுக்கிடும்படிக்கு பிறக்கும் புதுவிதக்
கருத்தமைப்புத்தான் கவித்துவம் இனி
என்பது பாரதியின் சொல்புதிது
பொருள் புதிது என்ற வித்து.
பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், பின்
பிரமிள் வரை இது சித்தாந்தமாயிற்று
இதுவே இன்று கிளைபரப்பிநிற்கும்
பெருவிருட்சம். இதனை அறியாத நீ
 எழுத்து வின் புதுக்கவிதை இயக்கம்
மரித்துவிட்டது என்று பிதற்றுகின்றாயே
கருத்துருவத்தை உணர்ந்து திடுக்கிட்டு
விழிப்படைகிற பிரக்ஞை உனக்குண்டா!
உதாரணமாக துடித்து அன்று
விழுந்த பகலை மீண்டும் மிதித்து
நடப்பவளே என்ற என் கவிவரி
உனது மண்டைக்கு புரியாது தம்பி
துடித்து அன்று விழுந்த சாமான்
பகலாகாது பல்லி தான்
என்று பல்லை இனிக்கும் தினுசுதான் நீ
E இஸ் ஈகுவல்டு mc2 சி
என்ற சாம்யத்தின் மாதமிடிக்ஸ்
கட்டமைப்புக்கு வெளியே நான் நீ
என்கிற மனிதவர்க்கம் முழுவதையும்
அச்சுறுத்தி எழுந்த ஆயுத
ராக்ஷஷத்தனம் தான் என் கவிதைப் பொருள்
அந்த சாம்யக்தை அறியா வாசகர்
கூட உள்ளனர். அவருக்கு அது தரும்
அதிர்ச்சி விரிவு என்பதை கவிதா
உணர்ச்சியில் கிளர்ந்து பிறப்பவை
கூட்டத்தை தாண்ட மீறும் எனது இயல்பை
புரிந்து கொள்ளத் திராணி அற்று
தமக்குத் தாமே போட்ட கட்டத்தை
தாண்ட முடியாமல் தவிக்கும் எழுத்து
சி.சு.செ. போன்ற பெரியவர்களும்
என்றோ ஒரு சில வருடங்கள் மட்டும்
ஏனோ தானோ என்றென் எழுத்தில்
நுனிப்புல் மேய்ந்த சிவசிவாக்களும்
தர்மு சிவராமு பெயருக்குள் மட்டும்
எனது இயக்கம் முழுவதையுமே
முடக்க முனைவது மடிசஞ்சித்தனம். அது
அறிவார்த்தக் கண்காணிப்பு ஆகாது.
சிருஷ்டி சிந்தனை  புரட்சிகரம் எல்லாம்
முதிர்ச்சி பெற்று வெளிப்பட்ட எனது
எழுத்தின் பெருந்தொகைக்குரியதாய்
பிரமிள் என்ற பெயரே நிலைத்து வழங்கும்
PRAMIL என்பது இதற்கு ஆங்கிலவடிவம்.

ஊரை ஏய்க்கும் அரசியல் குடும்பம்
எனதல்ல; கட்சி, மொழி, மதவெறிகள்
என் வாழ்வின் மூலதனமல்ல; அயலான்
 உடன் வாழ முடியாத தடையேதும் இல்லா
 உயிர் நான்; இதனை உணர்த்துவதுதான்
என் வேலை
(தொடரும்)

No comments:

Post a Comment