Saturday, October 2, 2010

பிறந்த நாளும் பிஸ்கட் பாபா அனுபூதியும்

    இன்று எனது பிறந்த நாளையொட்டி காலையிலேயே தமிழ்நாடு ஊடக மற்றும் பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலாளர் ரிச்சர்ட் ஆனந்த், பொருளாளர் பாலாஜி பூச்செண்டு, ஸ்வீட் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். நான் நண்பன் வாசுவுக்கு போன் செய்து பிஸ்கெட் பாபாவான வடபழனி பரஞ்ஜோதி பாபாவை பார்க்க வேண்டும் என்பதை தெரிவித்தேன். அவன் 9.30க்கு புறப்பட்டு வரும்போது திடீர் மழை விடாமல் அரைமணி நேரம் கொட்டித் தீர்த்துவிட்டது. அவனோடு பைக்கில் புறப்பட்டு சூளைமேட்டில் நுழைந்தால், தரையில் துளி ஈரங்கூடக் கிடையாது. சுளீரென்று வெயில்வேறு. சரவணபவன் பின்னால் கோவிலுக்கருகே இருந்த பாபா இடத்தில் இறங்கினோம். வாசு வாசலிலேயே இருந்த பூக்காரரிடம் பூ வாங்கிக்கொள்ள, நான் அருகிலிருந்த டீக்கடையில் பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக் கொண்டேன். பாபாவின் அறையில் ஒரு தம்பதியர் அவரை சேவித்துக் கொண்டிருந்ததால் வெளியே நடைபாதையில் இருவரும் அமர்ந்தோம். தம்பதியர் வெளியேறியதும்; பாபாவோடு இருந்தவர்கள் அவரை சத்தம்போட்டு சாப்பிட வைத்தனர். இரண்டே நிமிடத்தில் அவர் சாப்பிட்டு முடித்ததும், நாங்கள் உள்ளே சென்றோம். வாசு பூவை அவரது படத்திற்கு முன் போட்டுவிட்டு, சிலவற்றை (வேறொருவர்) கேட்டுக் கொண்டபடி அவரின் பாதங்களில் போட்டான். நான் பாதந்தொட்டு வணங்கி நின்றேன்.
அவர் கடுமையான மோனத்தில் தனக்குத் தானே பேசியபடி இருந்தார். நான் நின்று கொண்டிருந்தேன். பாபாவின் உதவியாளர் பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக் கொள்ளும்படி அவரிடம் சொன்னார். நான் பிஸ்கெட் பாக்கெட்டை அவரது கைகளில் கொடுத்தேன். அதை வாங்கியவர் தனது படத்தின் முன்வைத்தவர். திரும்ப எடுத்து எதிரே இருந்த மேஜையில் வைக்கும்படி தந்தார்.  உதவியாளர் நான்கு பிஸ்கெட்களை நீட்ட, அதைக் கையில் வாங்கி என்னிடம் கொடுத்தவர், திரும்பவும் வாங்கி உதவியாளரிடம் எனக்கு கொடுக்கச் சொன்னார். அவரும் கொடுத்தார். பிஸ்கெட்டை வாங்கி கையில் வைத்தபடி நின்றேன். வாசு அவர் எதிரே நின்றான். வேறொருவர் பிளாஸ்டிக் பையிலிருந்த ரூபாய் நோட்டுகளை நீட்ட, சும்மாயிரு பாபா அதட்டினார். நான் பாபா காலருகேயும், வாசு எனக்கு பின்னாலுமாக அமர்ந்தோம்.
பாபா தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவர் “இவனுக்கு இங்க என்ன வேலை.. உனக்கு இங்கே வேலை கிடையாது என்று சத்தமாகச் சொல்லிவிட்டு மீண்டும் தனக்குத் தானே பேசுவதில் லயித்துப்போனார். நான் கண்களை மூடியமர்ந்தேன். நிமிடங்கள் செல்லச் செல்ல உடம்பெல்லாம் எனர்ஜி பரவியது. முதுகுத் தண்டில் சிலிர்ப்பு. உடம்பு அனலாகி காது வழியே மூச்சுக்காற்று வெளியேறிய மாதிரி இருந்தது. உடம்பு லேசானது. இருகைப்பிடிக்குள்ளிருந்த பிஸ்கெட்கள் லேசாகி பறந்தும், திரும்ப கைக்கு வந்ததும் போல இருந்தது. இறந்து போன பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா புதையல் எடுக்கப்போய் கைகால் விளங்காமல் போன மெக்கானிக் சித்தப்பா எல்லோரும் எனக்குள் வந்து போனார்கள்.
    நேரம் ஆக, ஆக எதுவுமில்லை.
    எந்த எண்ணமுமில்லை.
    நான் காலியாகியிருந்தேன்.
    இப்போது பாபாவின் முணகல்கள் மட்டுமே
    காதில் விழுந்தது. இதுதான் அனுபூதியா?
    சார் கிளம்புங்க சார், ஆட்கள் வந்திருக்கிறாங்க
    என்று உதவியாளர் சொன்னதும். சட்டென எழ முயற்சித்தேன். முடியவில்லை. கால்கள் மரத்துப் போயிருந்தன. பாபாவின் சாய்வுநாற்காலியில் கைவைத்து கிந்தி, கிந்தி நடந்து சுவரில் கைவைத்து கால்களை உதறி சுதாரித்தேன். வாசுவும் எழுந்து விட்டான்.
மீண்டும் அவரது பாதம் தொட்டு வணங்கிவிட்டு வெளியேறினேன். உடம்பும் மனசும் நிகழ் உலகுக்கு வரமுடியாத பரவசம் மிகுந்திருந்தது. உடம்பும் மனசும் கழுவிவிட்ட மாதிரி லேசாக இருந்தது. எப்.சி. செய்த கார்போலப்பட்டது.
இருவரும் பைக்கில் கிளம்பினோம். ஒரு டீக்கடையில் நிறுத்தி டீயோடு சிகரெட் பற்ற வைத்தோம். அவர் எதையோ ட்ரான்ஸ்பார்ம் பண்ணநினைக்கிறார். அதான் இது என்றான் வாசு.
அப்படியே அசையாம 5,10 நிமிசம் உட்கார்ந்துட்டோமோ என்றேன். “5 நிமிசமா ஒரு மணி நேரத்துக்கு மேலாச்சு. அவரும் விடறமாதிரியில்ல.. என்றான் வாசு.
இதே அனுபூதி தினம் 5 நிமிசம் கிடைத்தால் போதும். எப்பவும் மரணத்தை எதிர் கொள்ளலாம் என்றுபட்டது எனக்கு.
இது எத்தனையாவது பிறந்தநாள் என்று சொல்லவில்லையே.... 55!

No comments:

Post a Comment