Tuesday, October 5, 2010

அம்மா வாங்கித் தந்த லுங்கி

ஆடை வாங்கித் தருவதென்பது அன்புக்குரியவர்களை அழகுபடுத்திப் பார்ப்பது.

பிரியப்பட்ட சாமிகளுக்கு கூட பட்டு சார்த்துவது பழக்கத்தில் உள்ளது.

‘சரஸ்வதி பூஜையையொட்டி பிறந்த’ என்று அம்மா சொல்லியிருக்கிறார்.

80க்கு முன்பாக எனது பிறந்த தேதியே எதுவுவென்று தெரியாமல் தான் இருந்தேன். விக்ரமாதித்யன் தான் எனது ஜாதகக்குறிப்பை வாங்கிப்போய் சைதாப்பேட்டையில் எழுதிவந்தார். (தராசு வார இதழில் இருவரும் பணியாற்றிய காலம்)

நக்கீரன் கோபால்தான் ரெய்மாண்ட்ஸ் ஷோரூமிற்கு கூட்டிப்போய் அளவெடுத்து குர்தா செட் ஒரே நேரத்தில் மூன்று எடுத்து தந்தார். அதற்கேற்றாற் போல ரஜினி அணிகிற மாதிரி செருப்பும், எனது காலை வெள்ளை பேப்பரில் வரைந்து எடுத்துப் போய் கறுப்பு வெள்ளை என இரண்டு விதமாக எடுத்துவந்து தந்தார். இதுவரை அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது தெரியாது.

பிறந்தநாளுக்கு பிறந்தநாள் தவறாமல் டிரெஸ் எடுத்து தருவது கோபாலின் வழக்கம்.

எழுத்தாள சகோதரர்கள் பாஸ்கர் சக்தியும், ரமேஷ் வைத்யாவும் சேர்ந்து விகடனிலிருக்கும் போது ஒரு பிறந்த நாளைக்கு சட்டை எடுத்து தந்தது, ஆபிஸ் முழுக்க பேச்சு.

இன்னொரு பிறந்தநாளில் சகபணியாளப் பெண் தோழி மும்பையிலிருந்து சட்டை வாங்கி வந்து தந்தார்.

மற்றொரு பிறந்தநாளில் வேறொரு தோழி என்னையே கூட்டிப்போய் தேர்வு செய்யச் சொல்லி சட்டை எடுத்துதந்தார். அவள் விகடனில் பணியாற்றிய போது முதல் ஜாலி டே நிகழ்ச்சிக்காக மதுரை போயிருந்தோம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் சௌபா என்கிற சௌந்திரபாண்டியன் (என் பிரியத்திற்குரிய சகா) முடப்போன ரெய்மாண்ஸ் கடையை திறந்துவைக்கச் சொல்லி இரவில் சட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தார் விழாவுக்காக.

ஒரு பொங்கலுக்கு முதல் நாள் நானும் நம்பியண்ணனும் நன்றாக குடித்திருந்தோம். நான் அவரை காதிபவன் அழைத்துப்போய் கதர் ஜிப்பா எடுத்து கொடுத்தேன்.

சமீபத்தில் டெல்லியிலிருந்து வந்த பிரேம் (நம்பியண்ணாச்சியின் மூத்தமகன்) ‘சித்தப்பா இது அப்பாக்கு எடுத்துட்டு வந்தேன். உங்களுக்கு சரியா இருக்கும், நீங்க போட்டுக்குங்க’ என்று சர்ட் ஒன்றை கொடுத்தான்.

அம்மா வருட திதிக்காக போன வாரம் கோவில்பட்டி போய்விட்டு குற்றாலம் போவதற்காக நம்பியண்ணாச்சியை தென்காசியில் வீட்டில் போய் பார்த்தபோது ‘ஒரு பேன்ஷி டீ சர்ட் புதுசா இருக்கு நீங்க போட்டுக்குங்க’ என்று கொடுத்தார்.

குடியல், குளியலுக்குப்பின் அந்த பேன்ஷி டீ ஷர்ட்டோடு அண்ணாச்சியோடு படமும் எடுத்துக் கொண்டேன்.

கோவை செம்மொழி மாநாட்டுக்குச் செல்ல, இரண்டு கலரில் ஓவர் கோட் 4 டீசர்ட், 1 சர்ட் கூலிங்கிளாஸ் என பேக் நிறைய கொடுத்தனுப்பினார் டைரக்டர் ராஜேஸ்வர்.

வருடந்தோறும் (கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கும் மேலாக) தீபாவளிக்கு தீபாவளி ஜோதிடர் நெல்லை வசந்தன் (பால்ய சிநேகிதர், பள்ளித் தோழர்) எனக்கு எனது மனைவி, மகன், மகள் என எல்லோருக்கும் உடை எடுத்து தருவதை வழக்கமாக செய்து வருகிறார். இதேபோல எனது மரியாதைக்குரிய பெண்மணியும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த பிறந்தநாளில் (வீட்டுக்கு அழைத்து பார்ட்டி காந்தி பிறந்தநாளில் வாங்கி வைத்திருந்து கொடுத்தது பெரும் வரப்பிரசாதம் தானே) பிராண்டட் ஷர்ட் ஒன்றை டைரக்டர் ராஜேஸ்வர் கொடுத்து வாழ்த்தினார்.

அம்மா, அப்பாவை இழந்து உறவுகளற்ற ஊரில் இருக்கும் எனக்கு அவரே எல்லாமாக இருக்கிறார். அவரது வாழ்த்து பெரும்பலம் தானே.

ஏதோ ஒரு தமிழ்படத்தில் ரவிச்சந்திரன் பூப்போட்ட லூங்கியும் ஜிப்பாவும் அணிந்து எழுத்தாளராக வருவார். அந்தப் படத்தைப் பார்த்து விட்டு தவணைக் கடையில் அம்மா வாரத்தவணையில் பணம் கட்டுவதாக வாங்கித் தந்த லுங்கி இன்னும் மனசில் நிழலாடுகிறது.

அம்மாவோ, அப்பாவோ அவர்களது பிறந்தநாளை நினைவு வைத்திருந்ததாகவோ குறைந்தபட்சம் கோவிலுக்கு போய்வந்ததாகவோ கூட கேள்விப்பட்டதில்லை.

No comments:

Post a Comment