Monday, October 18, 2010

மகாகவி பிரமிளின் (தொடர்ச்சி)

எண்பத்து மூன்றிலன்றி எழுபதில் லங்கைவிட்டு

இங்கு வந்த எனக்கு

புலம் பெயர்ந்த புள்ளிவிவரம் பொருந்தாது

ஏன் வந்தேன் என்பதற்கு

நியூஸ் உலகத்து நியமங்கள் ஏதுமில்லை

சுயத்தின் சூனியத்தை நிரப்பும்

ஜாதிக் செருக்கு இல்லாதவன் நான்

கல்லூரி முத்திரை பதித்த காகிதமே

சமுத்திரம் என்கிற சான்றிதழ் எதற்குள்ளும்

அடங்காது என் மூளை. அன்றாட அற்புதத்தை

மனிதார்த்த நுட்பங்கள் உள் முரண்கள் என்பவற்றை

உன் கட்சி என் கட்சி என்று பிரித்து

கண் கெட்டுப் பார்க்கிற கருத்தாளி அல்ல நான்

ஊன்றிய காலை எடுத்து இன்னொரு

இடத்தில் வைத்தால்

முந்திய இடமும் பிந்திய இடமும்

பூமிதான் எனக்கு. எனவே எனக்கு

நாடில்லை நாமம். இதுவென்று ஒன்றில்லை

வருமானப் புள்ளிகளை வைத்துத் தொழும்

சுன்னங்களில் சொத்தில் என் ஆளுமை இல்லை

நிலத்தைப் பிடுங்க முயன்றவர் சூழலில்

எலும்பை நாய்க்கு எறிவது போல் அதை

எத்தர் விலைக்கு விற்றுவிட்டு

வந்த என் பெயரைப் பிறப்பு விபரத்தை

திருக்கோண மலையின் ரெஜிஸ்ட்ரியில் கூட

எரித்தது ஆங்கே எழுந்த நெருப்பு

தெரிந்து கொள் நான்

பதிவேடுகளைத் தாண்டி பரந்து நிற்பவன்

தன்மயக் கிணற்றுக்குள் தலைகீழாய்த் தொங்கி

தூர் எடுத்து ஊற்றின் கண்ணடைப்பை நீக்கி

ஊரருந்தப் புதுநீர் ஊறச் செய்யும் கவிநான் அடா!

நீரருந்த தாகம் வேண்டும்

அது கூட இல்லாத

கல் மண்டை கருத்தாளிகளுக்கு

கவிதை ஒரு கேடா?

கட்சிக் கருத்துக்குள் கட்டுப்படுமா கனலும் கவித்துவம்?

தர்க்க சிகரம் மாதமாடிக்ஸில் பீ ஹெச் டீ நீ

ஆயினும் கவித்துவ ஆய்வுக்கு வந்தால்

உன் தர்க்கம் காலி! போதாதுக்கு

டாக்டரேட் இன் இன்ஜினியரிங் வேறு

வாழ்வதோ சிருஷ்டி நெருப்புக்கு முன்

கல்விமான்கள் குவிந்து குளிர்காயும் லண்டன்!

கணிப்பொறி மூளையாய்க் கற்றதை ஒப்பிக்கும்

உனக்கேன் உள்ளுணர்வில் கிளர்ந்து உயிரின்

தகிப்பாய் எரியும் கவிஞனின் வேலை?

சினை முட்டை நிற்கும் வாசக மூளைக்குள்

கவி விந்து பாய்ந்தால் கருக்கூடும்

ஒரு புதுப் பிரக்ஞை பிறக்கும்

முதலில் சும்பித்து உடனே துப்பும்

உன் ஆய்வு வாய்க்குள்

கருக்கூடுமா கவிதையின் உயிர்ப்பு?

............................

என்ன கம்பீரம்; கவிதா விலாசம்; தெளிவு; சூழலை குறித்த பார்வை; கண்ணனின் விஸ்வரூபம் பிரமிளின் இந்த பிரகடனம்; கோடானுகோடி காலத்திலும் உதிக்கிற சுயம்புவான கலைஞனுக்கு இதுவே அடையாளம்.

இந்த ஒரு கவிதையை முன்வைப்பதன் மூலம் பிரமிளை உங்களுக்கு அவரது மொழியிலேயே அடையாளப்படுத்துகிறேன்.

இது காலத்தை வென்ற ஒரு மகாகவியின் பிரகடனம் என்றென்றைக்கும் ஒலிக்கும் பாஞ்ஜசன்யம்.

No comments:

Post a Comment